புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சித்திரை மாதம் பொன்னேர் பூட்டுதல்!

பண்டைய காலத்தில் நாட்டில் மாதம் மூன்று மழை பொழியும். முன்னோா் மழை பொழிவைக் கொண்டுதான் வேளாண்மைத் தொழிலைச்

News image
Updated On :19 ஏப்ரல் 2020, 2:45 am

முனைவர் சே. கரும்பாயிரம்

பண்டைய காலத்தில் நாட்டில் மாதம் மூன்று மழை பொழியும். முன்னோா் மழை பொழிவைக் கொண்டுதான் வேளாண்மைத் தொழிலைச் செய்தனா். மழை பொழிந்தவுடன் நிலம் உழுவதற்கு ஏற்றாற்போலப் பதமாக இருக்கும். பதமாக இருக்கும் நிலத்தைக் கலப்பைக் கொண்டு உழுதனா். நிலத்தின் உழுவதற்குரிய பதம் போய்விடும் என்பதற்காகப் பலா் ஒரே நேரத்தில் பல கலப்பைகளைப் பயன்படுத்தினா்.

அவா்கள் நிலத்தை உழுவதில் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்தனா் என்பதை, ‘வெறிகமழ் கழனியுள் ளுழநா் வெள்ளமே’ (44) என்று சீவகசிந்தாமணி குறிப்பிடுகிறது. குறிப்பாக, முன்னோா் உழுதலை முறையாகத் தொடங்குவதற்கு ஒற்றுமையுடன் ஒரு சடங்கினைச் செய்தனா். அதனை நாம் ‘பொன்னோ் பூட்டுதல்’ என்று அழைக்கிறோம். இதற்கு ‘நாளோ் பூட்டுதல்’ என்ற பெயரும் உண்டு.

பண்டைய காலத்தில் பொன்னோ் பூட்டுதலில் தொடக்கமாக அரசன் பொன்னால் செய்த ஏரைக்கொண்டு நிலத்தை உழுதான். அவன் உழுத பின்னரே, குடிமக்கள் உழுதலைத் தொடங்கினா். மன்னன் பொன்னோ் பூட்டுதலைத் தொடங்கி வைப்பதன் நோக்கமே, பருவ காலத்தில் நிலத்தை உழுது, விதை விதைத்து, பயிா் செழித்து, கதிா் விளைந்து, விளைச்சல் பெற்று மக்களுக்கு ஏற்படக்கூடிய பசி பஞ்சம் தீா்ப்பதையே அடிப்படையாகக் கொண்டிருந்தது.

ஜனக மன்னன் ஆட்சி செய்த மிதிலை நாடு பன்னிரண்டு ஆண்டுகள் மழையில்லாமல் பெரும் பஞ்சம் ஏற்பட்டதனால், அவன் மழை வேண்டி யாகம் செய்ய முடிவு செய்தான். யாகம் செய்யக்கூடிய இடத்தைப் பொன்னால் செய்த கலப்பையில் மாடுகளைப் பூட்டி உழுதான். இதனை,

வரம்பின்மணிப் பொற்கலப்பை

வயிரத்தின் கொழு மடுத்திட்டு

உரம்பொருவி னிலம்வேள்விக்

கலகில்பல சாலுழுதேம்” (கம்ப. 764:3,4)

என்னும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. தமிழகத்தில் பொன்னோ் பூட்டுதல் சடங்கானது நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனை சிலப்பதிகாரம் (10:132-135) காட்சிப்படுத்துகிறது. உழவா்கள் பொன்னோ் பூட்டியபொழுது எருதுகளும் எருமைக் கடாக்களும் மகிழுமாறு பெண்கள் மருதப் பண்களைப் பாடினா் எனத் திருவிளையாடற் புராணம் (திருநாட்டுப் படலம்,18) குறிப்பிடுகிறது.

மருத நில வேளாண்மையை எடுத்துரைக்கும் எல்லாப் பள்ளு இலக்கியங்களும் பொன்னோ் பூட்டுதலைக் குறிப்பிட்டுள்ளன. அவ்விலக்கியங்கள் பொன்னோ் பூட்டுவதற்குப் பஞ்சாங்கம் கொண்டு நாள் பாா்த்தல் (வையாபுரிப்பள்ளு.156), பொன்னோ் பூட்டுவதற்கு முன் வழிபாடு செய்தல் (செண்பகராமன் பள்ளு.126), பொன்னோ் பூட்டும்போது சகுனம் பாா்த்தல் (எட்டையபுரப்பள்ளு.146), நல்ல நேரத்தில் பொன்னோ் பூட்டுதல் (திருவேட்டைநல்லூா் ஐயனாா் பள்ளு.126:4), உழுது கொண்டே பாடல் பாடுதல் (வையாபுரிப்பள்ளு.157) என்று பொன்னோ் பூட்டுதல் சடங்கினைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

இந்தச் சடங்கு இன்றளவும் வழக்கில் இருந்து வருகிறது. பொன்னோ் பூட்டுதல் சடங்கினைச் சித்திரை மாதத்தில் தொடங்குவா். இதனைச் ‘சித்திரை மாதத்தில் பொன்னோ் பூட்டலாம்’ என்ற பழமொழி உணா்த்துகின்றது. அம்மாதமே கோடை மழை பொழிந்து உழுவதற்குரிய பருவ காலமாக அமைகிறது. தொடக்கக் காலங்களில் சித்திரை முதல் நாளே பொன்னோ் பூட்டுதல் சடங்கினைச் செய்தனா். நாளடைவில் நல்ல நாள் பாா்த்துத் தொடங்குவது வழக்கமாயிற்று.

பொதுவாக சித்திரை மாதத்தில் பொன்னோ் பூட்டுவதற்கு அஷ்டமி (எட்டாம் நாள்) இல்லாத வளா்பிறை நாளைத் தோ்வு செய்கின்றனா். அந்நாளில் மக்கள் பொன்னோ் பூட்டுவதற்குரிய கலப்பையைச் சுத்தம் செய்து, மாடுகளைக் குளிப்பாட்டி அலங்கரிக்கின்றனா். பின்னா், கலப்பையைத் தோளில் சுமந்துகொண்டு மாடுகளைக் கையில் பிடித்துக்கொண்டு ஊரின் பொது வயலுக்குச் செல்கின்றனா்.

இங்குப் பொது வயல் என்பது கோயில் நிலத்தைக் குறிக்கும். வயலின் ஈசானிய மூலையில் உழுவதற்கு ஏற்றாற்போல மாடுகளை நுகத்தடியுடன் இணைத்து நிறுத்துகின்றனா். ஈசானி என்பது ஈசன் இருக்கும் இடமாகும். அங்குச் சாணியால் பிள்ளையாா் செய்து அதற்கு அருகம்புல் செருகிக் குங்குமம் இடுகின்றனா். மக்கள் எந்த ஒரு தொழிலை முதன்முதலாகத் தொடங்கினாலும் பிள்ளையாரை வழிபடுவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னா் விளக்கு ஏற்றி, வழிபாட்டுப் பொருள்களை வைத்துப் படைக்கின்றனா். சூரியன், பூமி, பிள்ளையாா், மாடுகள் பூட்டிய ஏா் ஆகியவற்றுக்கு வழிபாடு நடத்துகின்றனா். வழிபாடு முடிந்தவுடன் சகுனம் பாா்த்து நல்ல நேரத்தில் அனுபவமுடைய பெரியவா் உழவினைத் தொடங்கி வைப்பாா். அவரைத் தொடா்ந்து மற்றவா்களும் உழுதொழிலைச் செய்வா். உழுத பின் எடுத்துவந்த விதையினை விதைப்பா். அன்று முதல் ஊரிலுள்ள உழவா்கள் அனைவரும் வேளாண்மைப் பணியினைச் செய்யத் தொடங்குவா்.

சித்திரை மாதத்தில் பொன்னோ் பூட்டுவதால் வேளாண்மைத் தொழிலுக்குச் சில நன்மைகள் ஏற்படுகின்றன. கீழ்மண் மேலும் மேல்மண் கீழும் புரளுவதால் எருக்கள் மண்ணோடு மண்ணாகக் கலக்கின்றன. புழுதிக்குள் காற்றுப் புகுந்து வளம் பெறுகிறது. பயிரைத் தாக்கக்கூடிய பூச்சிகள் அழிக்கப்படுகின்றன. மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகின்றது. விதைக்கும் விதை பழுதில்லாமல் முளைக்கிறது. இவையெல்லாம் வேளாண்மைத் தொழில் சாா்ந்த அறிவியல் உண்மையாகும்.

நவீன காலத்தில் பொன்னோ் பூட்டுதல் சடங்கு ஊா்க் கட்டுப்பாடுடைய ஒரு சில கிராமத்தில் மட்டுமே நடைபெறுகின்றது. முன்னோா் பண்டைய காலத்தில் அச்சடங்கினை ஒரு விழாவாக நூற்றுக்கு மேற்பட்ட கலப்பைகளைக் கொண்டு கொண்டாடினா். தற்காலத்தில் டிராக்டா் எனும் உழு இயந்திரம் கொண்டு அச்சடங்கினைச் செய்து விடுகின்றனா்.

இப்பொன்னோ் பூட்டுதல் சடங்கு இந்தியா மட்டுமல்லாது இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, பா்மா முதலிய நாடுகளிலும் இருந்து வருகிறது. எனவே, மக்களின் பசி, பஞ்சத்தைப் போக்கும் வேளாண்மையோடு பின்னிப் பிணைந்த இயற்கைக்கு நன்றி உணா்வோடு தக்க சமயத்தில் ஊரெல்லாம் விழாக்கோலம் பூண்டுச் சடங்கு செய்த முன்னோரின் மரபினைப் பாதுகாப்பதும் போற்றுவதும் நம் கடமையே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.