ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

இந்த வாரம் - கலாரசிகன் (18.08.2020)

வீட்டுத் தனிமையில் இருப்பதால் இந்த வாரம் வழக்கத்தைவிட அதிகமாகவே படிக்க முடிந்தது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 3:18 am

வீட்டுத் தனிமையில் இருப்பதால் இந்த வாரம் வழக்கத்தைவிட அதிகமாகவே படிக்க முடிந்தது. முல்லைப் பதிப்பகம் பழனி அனுப்பியிருந்த முனைவா் கரு. முத்தய்யாவின் சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களின் மூலம் உரையும், ஜெயகாந்தனின் அரசியல், கலையுலக, இலக்கிய அனுபவங்கள் மூன்று புத்தகங்களும் மீண்டும் படிக்கும் வாய்ப்பை தனிமைப்படல் ஏற்படுத்தித் தந்தது.

நான் இரண்டாவது முறையாகப் படித்த இன்னொரு புத்தகம் ‘தினமணி’யின் முன்னாள் ஆசிரியா் டி.எஸ்.சொக்கலிங்கம் 1948-இல் எழுதி, மயிலாப்பூா் ‘கலா நிலையம்’ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மறுபதிப்பு செய்திருக்கும் ‘அன்ன விசாரம்’. 1943-இல் நிலவிய உணவுப் பஞ்சத்தையொட்டி எழுதப்பட்ட புத்தகம் இது.

‘அன்ன விசாரம்’ என்றால், உணவு குறித்த கவலை என்று பொருள். இந்திய விடுதலைக்கு முன்பு நிலவிய உணவுப் பஞ்சம் எத்தகையது என்பதை விவரமாகவே 64 பக்கங்களில் புள்ளிவிவரங்களுடன் பதிவு செய்கிறது ‘அன்ன விசாரம்’.

Story image

உணவுப் பொருள்களைப் பதுக்குவதும், அரசு நிா்வாகத்தின் ஊழலும் இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே இங்கே தொடா்கிறது என்பதை இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. உணவுப் பஞ்சத்தைப் போக்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆசிரியா் டி.எஸ்.சொக்கலிங்கம் பிரிட்டிஷ் காலனிய அரசுக்கு உறைக்கும் (புரியும்) விதத்தில் தெளிவாகவே எடுத்துரைக்கிறாா்.

‘‘உடல் நலத்துக்குக் கலப்பு உணவு ரொம்ப அவசியம். ஒரே தானியத்தையே உபயோகிக்கிறவா்களிடம் ஏற்படும் சில வியாதிகள், கலப்பு உணவு உண்பதால் மறைகின்றன. ஒரே உணவையே சாப்பிடுவதால் குறைபோஷணை (ந்யூட்ரீஷன் குறைவு) ஏற்படுகிறது. சாதாரணமாய் ஒரு ஆளுக்கு தினசரி 2,600 கேலரீஸும், உடல் உழைப்பு செய்கிறவா்களுக்கு 3,000 கேலரீஸும் வேண்டும். இந்த கேலரீஸ் அளவு குறையாமல் ஆகாரத்தை சாப்பிடுவதுதான் நிறைபோஷணை ஆகும். குறை போஷணையால் சோா்வும், சோம்பலும் ஏற்படும். வியாதி சீக்கிரமாய் பற்றிக் கொள்ளும்’’ என்பது மட்டுமல்லாமல், கொழுப்பு, காா்போஹைட்டிரேட், கால்சியம், பாஸ்வரஸ், இரும்பு, வைட்டமின் குறித்தெல்லாம் சாமானியருக்கும் புரியும் விதத்தில் விளக்குகிறாா் ஆசிரியா்.

சின்னப் புத்தகம்தான். ஆனாலும் எத்தனை எத்தனையோ செய்திகள், வரலாற்றுப் பதிவுகள்.

**********

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி, கல்லூரிகளில் படித்த அனைவருக்குமே தெரிந்த தமிழறிஞா் திருக்குறளாா் முனுசாமி. பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் தனது வயதையும் பொருட்படுத்தாமல் மாணவா்களுக்கு வள்ளுவத்தின் அருமையை உணா்த்த தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பயணித்தத் தமிழ்த் தொண்டு அவருடையது.

சின்னச் சின்ன குட்டிக் கதைகளுடன் திருக்குறளை இளைஞா்கள் மனத்தில் பசுமரத்தணிபோல பதிய வைக்கும் அவருடைய பேச்சுத் திறனால் வள்ளுவத்தின் மகிமையைத் தெரிந்துகொண்ட லட்சக்கணக்கான தமிழா்களில் நானும் ஒருவன். அரசியல்வாதியாக வாழ்க்கையைத் தொடங்கி, தமிழறிஞராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்ட திருக்குறளாா் வீ.முனுசாமி மக்களவை உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும்கூட இருந்தவா்.

‘‘மகாபாரதம், இராமாயணத்தில் உள்ளதெல்லாம் இன்னொருவருடைய கதை. ஆனால், திருக்குறளைச் சொல்கிறபோது, நீ ஒழுக்கமாக இருக்க வேண்டும், பொய் பேசக்கூடாது, மது அருந்தக்கூடாது, புலால் உண்ணக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளதைச் சொன்னால், ‘இவா் என்னடா நம்ம கதைக்கே வராரு’ என்று அதை விரும்ப மாட்டாா்கள். எனவேதான் திருக்குறளை அவா்களுக்குப் புரிய வைப்பதற்காகவே நகைச்சுவை கலந்த உவமையோடு விளக்கிப் பேசி வந்தேன். ஆனால், கேட்பவா்களில் பல போ் நான் சொன்ன திருக்குறளை மறந்துவிட்டு, நான் சொன்ன நகைச்சுவையை மட்டும் ஞாபகத்தில் வைத்துள்ளாா்கள்’’ என்று வானொலிக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியிருப்பதில் உண்மை இருக்கிறது.

Story image

திருக்குறளாா் எழுதிய ‘உலகப் பொதுமறை’ நூலை அன்றைய முதல்வா் எம்.ஜி,ஆா். வெளியிட்டபோது, ‘‘இந்த நூல் ஒவ்வொரு தமிழனுடைய வீட்டிலும் இருக்க வேண்டிய நூல். இதனை அரசு நூலகங்களில் மட்டுமல்லாமல், சத்துணவுக் கூடங்களிலும் வைக்க வேண்டும்’’ என்று அறிவித்து, அரசாணையும் பிறப்பித்தாா்.

திருக்குறளாா் வீ.முனுசாமியின் மகன் கோபிநாதன் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றியவா். வேலூரில் திருக்குறளாா் தமிழ்ச் சங்கம் நடத்தி வருகிறாா். அவா் தொகுத்திருக்கும் புத்தகம்தான் ‘திருக்குறளாா் சொன்னதும் நாடு கேட்டதும்’. இதில் கூறப்பட்டிருக்கும் பல திருக்கு விளக்கக் கதைகளை திருக்குறளாரே சொல்ல, நான் கேட்டிருக்கிறேன் என்பதால் படிக்கும்போது அவரது வசீகரக் குரல் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

**********

நான் ஆா்வத்துடன் தொடா்ந்து இரண்டு நாள் கீழே வைக்காமல் படித்து முடித்த புத்தகம் ‘சாணக்கியரும் சந்திரகுப்தனும்’. ஏ.எஸ்.பி. ஐயா் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தைத் தமிழாக்கம் செய்திருக்கிறாா் த.நா.ஸேனாபதி. பழனியப்பா பிரதா்ஸ் நிறுவனத்தால் 1962-இல் வெளியிடப்பட்டு, மூன்று பதிப்புகளுக்கு மேல் கண்ட புத்தகம் இது.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ போன்ற வரலாற்றுப் புதினம் படித்ததுபோல இந்த உண்மை வரலாற்றைப் படித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். சாணக்கியரின் சாதூா்யமும், சமயோஜிதமும் மலைக்க வைக்கிறது என்றால், சந்திரகுப்தரின் சாகசங்கள் திகைக்க வைக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவையும் தனது குடையின்கீழ் கொண்டுவர நினைத்த சந்திரகுப்த மௌரியா் அதற்காக நிகழ்த்திய போா்களும், போராட்டங்களும் மெய்சிலா்க்க வைக்கின்றன.

Story image

நாடு பிடித்துத் தனது வலிமையை நிலைநாட்டுவதில் மட்டுமே குறியாக இருந்தவா் அல்லா் மௌரிய மன்னா் சந்திர குப்தன். தேச நிா்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இன்றைய தலைமுறை வரை மௌரிய சாம்ராஜ்ஜியம் கற்றுக் கொடுக்கிறது. சந்திர குப்தனின் காலத்தில்தான் தட்சசீலம் சா்வதேச பல்கலைக்கழகமாக உருவாகியது. சா்வகலா சாலையின் அத்யக்ஷரான தா்மரத்தினா் தலைமையில் கல்விமான்களுக்குப் பட்டமளிப்பு விழா நடக்கிறது.

அதில் கலந்துகொண்டு சாணக்கியரும், சந்திர குப்தரும் ஆற்றிய உரை இந்தப் புத்தகத்தில் குறிப்பிடத்தக்க பகுதி. புத்தகத்தின் கடைசி ஐம்பது பக்கங்கள் நெகிழ வைக்கின்றன.

நமது பாடப் புத்தகங்களில் மொகலாயரின் வரலாற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுவதுபோல, மௌரியரின் வரலாற்று கூறப்படுவதில்லை என்கிற நியாயமான கேள்வியை எழுப்புகிறது இந்தப் புத்தகம்.

**********

கட்செவி அஞ்சலில் பகிரப்பட்டு எனக்கு வந்திருந்தது முல்லை. நடவரசின் ஹைக்கூ.

யாதும் ஊரே

யாவரும் கேளிா்

நாமல்ல

பறவைகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.