இந்த வார கலாரசிகன்
கனத்த இதயத்தோடுதான் இந்தத் தகவலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து "தினமணி' நடத்தி வரும் எட்டயபுரம் பாரதி விழா இந்த ஆண்டு தடைபடுகிறது.


கனத்த இதயத்தோடுதான் இந்தத் தகவலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து "தினமணி' நடத்தி வரும் எட்டயபுரம் பாரதி விழா இந்த ஆண்டு தடைபடுகிறது. மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11-ஆம் நாள் நாம் அனைவரும் எட்டயபுரத்தில் பாரதியாரின் வீட்டில் கூடுவதும், தமிழகமெங்கிருந்தும் அங்கே வந்து குவியும் தமிழன்பர்கள் ஊர்வலமாக மணிமண்டபத்துக்குச் செல்வதும், பாரதியாரின் உருவச் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துவதும், இந்த ஆண்டு நடைபெறாது.
எல்லோரும் எட்டயபுரத்திற்குப் பயணிப்பதில் இருக்கும் சிரமம் ஒரு புறம். சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும், ஊர்வலமாகச் செல்வதும் சாத்தியமாகுமா என்கிற ஐயப்பாடு இன்னொரு புறம். கூட்டம் கூடுவதற்கு அனுமதி கோரிப் பெறுவதிலும் பல தடைகள் இருக்கின்றன. அதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான், இந்த ஆண்டு பாரதி விழாவை முன்னெடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.
ஆண்டுதோறும் எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் விழா எடுத்து, "தினமணி'யின் சார்பில் வழங்கப்படும் மகாகவி பாரதியார் விருதும், இந்த ஆண்டு வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. எல்லோரும் கலந்துகொள்ளும் விழாவாக எட்டயபுரம் மணிமண்டபத்தில் நடத்த முடியாது என்பது முதலாவது காரணம்.
மகாகவி பாரதி தன்னை ஜதிப்பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று கெüரவிக்க வேண்டும் என்று விரும்பியவர். அவரது பெயரால், அவரது நினைவால் வழங்கப்படும் விருது காதும் காதும் வைத்ததுபோல, ஒரு சிலர் மட்டும் கலந்து கொள்ளும் விதத்திலோ, காணொலிக் காட்சி மூலமோ வழங்கப்படுவதை பாரதியே ஒத்துக்கொள்ள மாட்டார் என்று தோன்றியது.
எட்டயபுரம் விருது வழங்கும் விழாவில் இந்த ஆண்டு ஆளுநரால் கலந்து கொள்ள முடியாது. ஆளுநர் மாளிகையில் விருது வழங்கினால், அது ஏதோ சம்பிரதாயச் சடங்காகிவிடும். அதனால்தான் விழாவுக்கும், விருதுக்கும் இந்த ஆண்டு இடைவேளை வழங்குவது என்று முடிவெடுத்திருக்கிறோம். தமிழகமெங்கிருந்தும் எட்டயபுரத்தில் குவியும் பாரதி அன்பர்களைப் பார்க்கவும், அளவளாவி மகிழவும் இந்த ஆண்டு நமக்குக் கொடுத்து வைக்கவில்லை.
தொடக்கத்தில் எழுதியதுபோல, கனத்த இதயத்துடன்தான் இந்தத் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்னும் ஓராண்டு காத்திருக்க வைத்துவிட்டதே கொள்ளை நோய்... மகாகவி மன்னிப்பாராக!
அரசியல் கட்சி தொடங்கப் போவதை அறிவித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தனது கட்சியின் மேற்பார்வையாளராகத் தமிழருவி மணியனை அறிவித்திருக்கிறார். கடந்த அரை நூற்றாண்டு கால அரசியல், இலக்கியப் பின்புலம் கொண்ட தமிழருவி மணியன், தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான பேச்சாளர். கறைபடியாத அரசியல் வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்.
கொள்ளை நோய்ப் பரவலுக்கு சற்று முன்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான அவரது "ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்' என்கிற தன்வரலாற்று நூல் சட்டென நினைவுக்கு வந்தது. புரட்டிப் பார்த்துப் படிக்காமல் பத்திரப்படுத்தி இருந்த புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியபோதுதான், இத்தனை நாளும் தமிழருவி மணியன் குறித்து நான் தெரிந்து வைத்திருந்தது கையளவு மட்டுமே என்பது புரிந்தது. பட்டம், பதவிகளுக்கு ஆசைப்படாமல், கொண்ட கொள்கையில் சற்றும் தடுமாறாமல் அவர் நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் பயணம் அசாதாரணமானது என்பதும் தெரிந்தது.
பெரம்பூரில் படித்து, வளர்ந்து ஆசிரியராக ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியவர் என்பது அல்ல அவரது பயணத்தின் குறிப்பிடத்தக்க செய்தி. அருவி பொழிந்தாற்போல தெள்ளு தமிழில் அவர் உரையாற்றும் திறன் கண்டு, காமராஜரால் "தமிழருவி' என்று சிறப்பிக்கப்பட்ட மணியன், பட்டம், பதவிகளுக்காகவும், வாழ்க்கை வசதிகளுக்காகவும் சோரம் போகாத சரித்திரம்தான், இளம் தலைமுறையினருக்கு அவரது வாழ்க்கை வழங்கும் செய்தி.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் அழைப்பு, மகளின் திருமணச் செலவை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முன்வந்த ஜி.கே.மூப்பனாரின் உதவி, ஜெயலலிதா விரும்பியும் அவரது கட்சியில் இணைய நினைக்காதது, கருணாநிதியால் வழங்கப்பட்ட திட்டக்குழு உறுப்பினர் பதவியை, ஈழத் தமிழர் பிரச்னையில் தி.மு.க. எடுத்த நிலைப்பாட்டால் வெறுத்துப்போய் ராஜிநாமா செய்தது என்று தமிழருவி மணியன் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் அந்த மனிதரின் கொள்கைப் பிடிப்பையும், மன உறுதியையும் பறைசாற்றுகின்றன.
""உண்மையைப் பேசுவதில் பெருமையில்லை. உண்மையாக வாழ்வதுதான் பெருமை. காமராஜரைப் புகழ்வதில் பெருமையில்லை. காமராஜராக வாழ்வதில்தான் சிறப்பு'' என்கிற தமிழருவி மணியனின் வைர வரிகளை அடிக்கோடிட்டது போதாதென்று, எனது நாட்குறிப்பிலும் பதிவு செய்து வைத்துக் கொண்டேன்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், கருணாநிதி, ஜெயலலிதா, ஜி.கே.மூப்பனார், வைகோ, விஜயகாந்த், மருத்துவர் ராமதாஸ் என தமிழகத்தின் அரசியல் ஆளுமைகள் அனைவருடனும் பயணித்தும்கூடத் தமிழருவி மணியன் பதவி அரசியலில் நாட்டம் கொள்ளாமல் இருந்ததுதான், வியப்பை ஏற்படுத்துகிறது.
""அவன் ஒரு வழிப்போக்கன்; காமராஜ் புகழ்பாடும் தெருப்பாடகன். அவன் மீட்டிய யாழ்களை மாற்றியிருக்கிறான்; இசைக்கும் ராகத்தை மாற்றியதில்லை. பல பாதைகளில் அவன் பயணித்திருக்கிறான்; அடையும் இலக்கை அவன் மறந்ததில்லை'' என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் தமிழருவி மணியன் அடைய விழையும் இலக்குதான் என்ன? அவரே விடை தருகிறார் -
""இரண்டு திராவிடக் கட்சிகளால் தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கும் பண்பாட்டுச் சீரழிவை இளமைக் காலம் முதல் பார்த்து வருகிறேன். பொதுச் சொத்தை மனசாட்சியின் உறுத்தலே இல்லாமல், சமூகக் குற்ற உணர்வே இல்லாமல் சூறையாடும் மனிதர்களிடம் இன்னும் எவ்வளவு காலம் அரசியலை அடகு வைப்பது? இரண்டு திராவிடக் கட்சிகளிடமிருந்தும் தமிழகத்தை விடுவிப்பதுதான் எனது ஒரே கொள்கை. அதை ரஜினிகாந்த் மூலம் நிறைவேற்ற முடியும் என்று அழுத்தமாக நம்புகிறேன்''
"ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்' தமிழக அரசியலில் நேர்மையையும், தூய்மையையும் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு காந்தியவாதியின் வாக்குமூலம்!
யார் எழுதியது என்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் இந்தக் கவிதை "அட்சர லட்சம்' பெறும். மகாகவி பாரதியார், "சபாஷ் பாண்டியா...' என்று முதுகில் தட்டி ஆர்ப்பரித்து வாழ்த்தியிருப்பார்.
தம்பிக்குப் பரீட்சை அட்டையைக் கொடு;
"நீ பெரியவள்'
அம்மா அலறினாள்.
"அப்போ
தாவணி வாங்கித்தா'
அமைதியானாள் அம்மா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...