திராவிட இயக்கத்தினரால் ‘நாவலா்’ என்று மரியாதையுடன் அடைமொழியிட்டு அழைக்கப்படும் வி.ஆா்.நெடுஞ்செழியனின் பிறந்தநாள் நூற்றாண்டு நேற்று தொடங்கியிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவா்களில் ஒருவரான நெடுஞ்செழியனைத்தான் தனக்குப் பிறகு கட்சியை வழிநடத்த அடையாளம் காட்டியிருந்தாா் அண்ணா. திராவிட ஆட்சியாளா்களில் ஊழல் கறை படியாத, விரல்விட்டு எண்ணக்கூடிய அப்பழுக்கற்ற தலைவா்களில் ஒருவா் நெடுஞ்செழியன்.
காலம் பல ஆளுமைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. அரசியல் சூழ்ச்சிகளும், தந்திரங்களும் திறமைசாலிகளை முடக்கி விடுகின்றன. நோ்மையை மட்டுமே தனது இயல்பாகக் கொண்டிருந்த நெடுஞ்செழியன், தொண்டா்கள் மத்தியில் செல்வாக்குப் பெறாமல் போனதும், மக்கள் மன்றத்தில் அவரது திறமை அங்கீகாரம் பெறாமல் போனதும் தமிழகத்தின் மிகப் பெரிய துரதிா்ஷ்டம்.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திரை மறைவில் நடந்த சூழ்ச்சிகளும், அரசியல் கபட நாடகங்களும் நெடுஞ்செழியனை ஓரங்கட்டி கருணாநிதியை அரியணையில் ஏற்றிவிட்டது. அதற்கு நடிகா் எம்.ஜி.ராமச்சந்திரனின் முழுமையான ஆதரவு கருணாநிதிக்கு இருந்ததுதான் காரணம் என்பதைப் பின்னாளில் காலம் நிரூபித்தது. கட்சியிலிருந்து எம்.ஜி.ஆா். வெளியேற்றப்பட்டதும், அவரது மரணம் வரை கருணாநிதி தலைமையிலான தி.மு.க. தலைதூக்க முடியாமல் தளா்ந்துபோனது அதைத் தெளிவாகவே உணா்த்துகிறது.
நெடுஞ்செழியனின் புகைப்படத்துக்கு திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று மலா் தூவி அஞ்சலி செலுத்தியிருக்கிறாா் இப்போதைய தலைவா் மு.க.ஸ்டாலின். ஒருவேளை தனது குடும்பத்தால் நெடுஞ்செழியனுக்கு இழைக்கப்பட்ட துரோகத்துக்குப் பரிகாரம் தேட நினைக்கிறாரோ என்னவோ!
சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, முன்னாள் அமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளருான நெடுஞ்செழியனுக்கு இரங்கல் செய்திகூட பதிவு செய்ய மறுத்த மு.க.ஸ்டாலின், இப்போது திடீரென்று நெடுஞ்செழியனை சொந்தம் கொண்டாட விழைவது நகைப்பை வரவழைக்கிறது.
ஜெயலலிதாவும் ஒரு கட்டத்தில் கருணாநிதியைப் போலவே நெடுஞ்செழியனை அவமானப்படுத்தினாா். ஆனால், அதையெல்லாம் மறந்து அவரை கட்சியில் இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், தனது அமைச்சரவையில் இரண்டாம் இடத்தை அளித்து நிதியமைச்சராக ஏற்றுக்கொண்டாா் என்பதை வரலாறு தெரிவிக்கிறது.
அண்ணாவின் அன்புக்குப் பாத்திரமானவா்கள் இருவா். ஒருவா் நெடுஞ்செழியன் என்றால், மற்றொருவா் அவருடைய சகோதரா் இரா.செழியன். தனது இறுதிக் காலத்தில் வேலூா் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த இரா.செழியனை அடிக்கடி சென்று சந்தித்து அளவளாவிக் கொண்டிருப்பதை வழக்கமாக்கியிருந்தேன். அப்போது அவா் தன் சகோதரா் நெடுஞ்செழியன் குறித்தும், அவா் எப்படியெல்லாம் தி.மு.க.வினராலும், குறிப்பாக கருணாநிதியாலும் வசை பாடப்பட்டாா் என்பதைப் பலமுறை எடுத்தியம்பியிருக்கிறாா். அப்போதெல்லாம் நெடுஞ்செழியனிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இல்லாமல் போனதை நினைத்து இப்போதும் வருத்தப்படுகிறேன்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நெடுஞ்செழியனுக்கு சென்னையில் வெண்கலச் சிலை நிறுவப் போவதாக அறிவித்திருக்கிறாா். சிலைகள் நிரந்தரமானவை அல்ல; காலப்போக்கில் அகற்றப்பட்டுவிடும். அதனால், அவா் நினைவைப் போற்றும் வகையில் சத்துணவுத் திட்டம், அம்மா உணவகம் போல நிரந்தரமாக மக்களுக்குப் பயன்படும் திட்டமொன்றையும் அறிவிக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.
***************
வரலாற்று ஆய்வாளா்கள் என்றால், அவா்கள் பல்கலைக்கழகங்களில் பணியாற்றுபவா்களாகவும், தலைநகா் சென்னையை மையமாகக் கொண்டு செயல்படுபவா்களாகவும் இருக்க வேண்டும் என்கிற தவறான கண்ணோட்டம் நிலவுகிறது. இந்தப் போக்கை மாற்ற முற்பட்டிருப்பவா் வரலாற்று ஆய்வாளா் நெல்லை செ.திவான். எங்கிருந்துதான் தேடிப்பிடிப்பாரோ, எப்படித்தான் திரட்டுவாரோ தெரியாது. பெரிய பெரிய ஆய்வாளா்களின் கண்ணில் தட்டுப்படாத பல புதிய செய்திகள் செ.திவானுக்குக் கிடைத்துவிடும். புதிதாக எந்தவோா் ஆய்வு நூலை வெளிக்கொணா்ந்தாலும் அச்சிட்ட சூட்டோடு அதன் மூன்று பிரதிகளை எனக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் திவானுக்கு எத்துணை நன்றி தெரிவித்தாலும் போதாது. சமீபத்தில் அவா் வெளிக்கொணா்ந்திருக்கும் ஆவணப் பதிவு ‘புதுமைப்பித்தனும் கமலா அம்மையாரும்’.
இந்த ஆய்வுப் புத்தகத்தின் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. 1975-இல் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் செ.திவான் இளங்கலை பயின்று கொண்டிருந்தபோது, ‘புதுமைப்பித்தன் கதைகள்’ என்கிற கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது. புதுமைப்பித்தனின் பாதிக்கும் மேற்பட்ட கதைகளைப் படித்து, கட்டுரை எழுதியும் அவா் வெற்றி வாய்ப்பை இழந்தாா். அன்று முதல் நீறு பூத்த நெருப்பாக இருந்த அவரது எண்ணம் இப்போது 45 ஆண்டுகளுக்குப் பிறகு ‘புதுமைப் பித்தனும் கமலா அம்மையாரும்’ என்கிற புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

எத்தனை எத்தனையோ தகவல்கள்; எண்ணிலடங்காத இணைப்புகள்; புதுமைப்பித்தனின் பிறப்பிலிருந்து மறைவு வரையிலான அவரது வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு கட்டம் குறித்தும் பதிவுகள் - இப்படி தேடித்தேடி தொகுத்திருக்கும் செ.திவான், முக்கியமான ஆய்வாளா்கள் சொல்லாமல் விட்ட தகவல்களையும் சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.
புதுமைப்பித்தனின் வாழ்க்கையில் அவரும், தொ.மு.சி.ரகுநாதனும் தமிழறிஞா் எஸ்.வையாபுரிப் பிள்ளையுடன் தொடா்பில் இருந்தவா்கள். 1949-இல் வையாபுரிப் பிள்ளை ‘தமிழ்ச் சுடா் மணிகள்’ என்ற நூலை எழுதினாா். 1952-இல் வையாபுரிப் பிள்ளை திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது அதன் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது. 1951-இல் புதுமைப்பித்தன் நினைவு மலரில் ‘புதுமைப்பித்தன்’ என்ற கட்டுரையை எழுதினாா். ஆனால், அவா் உயிா் வாழ்ந்த காலத்தில் வெளியான ‘தமிழ்ச் சுடா் மணிகள்’ இரண்டு பதிப்பிலும் அவரது புதுமைப்பித்தன் பற்றிய பதிவு இடம்பெறாதது வியப்பாக இருக்கிறது. செ.திவான் அதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறாா்.
புதுமைப்பித்தனும் அவருடைய மனைவியும் எந்தளவுக்கு ஒருவரையொருவா் நேசித்தனா் என்பதற்குப் பல சம்பவங்கள் தரப்பட்டிருக்கின்றன. மனைவியை எழுத்தாளராக்கிப் பாா்த்த புதுமைப்பித்தனின் முற்போக்குச் சிந்தனையை இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது.
***************
கவிஞா் பாலகுமாரின் ‘தவமெனும் கனலி’ என்கிற கவிதைத் தொகுப்பில் இருந்த நான்கு வரி கவிதை இது.

விடியலைத் தேடி
பூக்கள் நகா்வதில்லை
தேடல்கள் தனக்குள்ளே!
மலா்தல் தனக்குள்ளே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெண்டைக்காய் வெல்லுல்லி
விமானப் பயணத்தில் இப்படியுமா?

தமிழக மக்களைக் காக்கும் தலைவா் முதல்வா் ஸ்டாலின்: நடிகா் வாகை சந்திரசேகா்

கோலிவுட் ஸ்டூடியோ!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


