நியூஜெர்சியில் என் ஒன்றுவிட்ட சகோதரியின் வீட்டுக்கு அருகில்தான் பி.எஸ்.ரங்கநாதன் தன் மகளுடன் குடியிருந்தார். என்னைப் பற்றி அவர் அடிக்கடி விசாரிப்பார் என்று என் சித்தியும், சித்தப்பாவும் கூறுவார்கள். அங்கே எல்லோரும் பேண்ட், சட்டையுடன் இருக்கும்போது, இவர் மட்டும் வேட்டியுடன் இருப்பதால், அவரை நாங்கள் "வேட்டி மாமா' என்றுதான் அழைப்போம் என்று சொல்வார்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை நியூஜெர்சியில் மறைந்த எழுத்தாளர் பி.எஸ்.ரங்கநாதனை நான் முதன்முதலில் சந்தித்தது தில்லியில்தான். அப்போது அவர் தபால் துறையில் அதிகாரியாக இருந்தார்.
"சாவி' சாருக்கு, பி.எஸ்.ரங்கநாதனிடம் அதீத மரியாதை. தீபாவளி மலர் உள்ளிட்ட எந்த சிறப்பு மலராக இருந்தாலும் அதில் "அகஸ்தியன்' எழுதும் நகைச்சுவைக் கட்டுரை இடம்பெற்றாக வேண்டும் என்பது சாவியில்
எழுதப்படாத சட்டம். உதவி ஆசிரியராக இருந்த சி.ஆர். கண்ணன் பெசன்ட் நகரில், பி.எஸ்.ரங்கநாதனின் வீட்டுக்கு அருகில் இருந்ததால், கட்டுரை எழுதி வாங்கிவரும் பொறுப்பு அவரிடம் தரப்படும்.

சாவி சாருக்கு, "குமுதம்' பிரமிப்பு எப்போதும் உண்டு. குமுதத்தை விஞ்சும்விதமாகப் பத்திரிகை கொண்டுவர வேண்டும் என்பதுதான் அவரது இலக்கு. குமுதத்துக்கு பாக்கியம் ராமசாமி (ஜ.ரா.சுந்தரேசன்) போல, "சாவி'க்கு அகஸ்தியன் (பி.எஸ்.ரங்கநாதன்) என்பது சாவி சாரின் கருத்து.
பெசன்ட் நகருக்கு சி.ஆர். கண்ணனை சந்திக்கச் செல்லும்போது, ஓரிரு முறை பி.எஸ்.ரங்கநாதனையும் அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்திருக்கிறேன். அவரது எழுத்தில் மென்மையான நகைச்சுவை இழையோடும். அதை தேவன், பாக்கியம் ராமசாமி போன்றவர்களுடன் ஒப்பிட முடியாது. ஆங்கில எழுத்தாளர்களுடன் ஒப்பிடும்படியான தரத்தில் இருக்கும். "அகஸ்தியன்' என்கிற அவரது புனைபெயரைவிட, "கடுகு' என்கிற புனைபெயரில் அவர் எழுதும்போது நகைச்சுவை இன்னும் தூக்கலாகவே இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.
தபால் துறை அதிகாரி, நகைச்சுவை எழுத்தாளர் என்பதையும் மீறி, "ஹிந்துஸ்தான் தாம்ஸன்' விளம்பர நிறுவனத்தில் பணியாற்றியபோது அவர் கையாண்ட விளம்பர உத்திகள் குறித்துப் பலரும் வியந்து பேசக் கேட்டிருக்கிறேன். 88 ஆண்டு நிறைவு வாழ்க்கை வாழ்ந்து மறைந்திருக்கிறார். அந்த நாள் ஞாபகம் சொல்ல இனி யார் இருக்கிறார்கள்?
எல்லையில் பதற்றம், இந்திய-சீனப் படைகள் மோதல் சூழலில் நின்று கொண்டிருக்கின்றன - உள்ளிட்ட செய்திகளைக் கேள்விப்படும்போது, 1962 சீனப் படையெடுப்பு நினைவுக்கு வருகிறது. இன்றும்கூட எதற்காக இந்தியாவின் முதுகில் குத்தி, சீனா படையெடுத்தது என்பது புதிராகத்தான் இருக்கிறது. இப்போது ஏன் மோதலுக்குத் தயாராகிறது என்பது அதைவிடப் புரியாத புதிர்.
1962 இந்திய-சீனப் போர் குறித்து ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. "உலகத்தின் கூரையில் மோதல்' என்கிற புத்தகம் மிகவும் பிரபலம். ஜான் தால்வியின் "ஹிமாலயன் ப்ளன்டர்', ப்ரிஜ் மோகனின் "அன்டோல்டு ஸ்டோரி', எஸ்.பி. வர்மாவின் "ஸ்ட்ரகிள் ஃபார் ஹிமாலயாஸ்' வரிசையில், நான் கல்லூரிப் பருவத்தில் ஆவலுடன் படித்த புத்தகம் நெவில் மாக்ஸ்வெல் எழுதிய "இந்தியாஸ் சீனா வார்'.

மூன்று, நான்கு நாள்களுக்கு முன்பு எழுத்தாளர் ஜனனி ரமேஷ், முதன்மை உதவி ஆசிரியர் இடைமருதூர் கி.மஞ்சுளா மூலம், தான் மொழிபெயர்த்த ஒரு புத்தகத்தை எனக்கு அனுப்பித் தந்தார். நெவில் மாக்ஸ்வெல் எழுதிய "இந்தியாஸ் சீனா வார்' என்கிற நூலின் அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பு இந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகத்தை எழுதிய நெவில் மாக்ஸ்வெல் "தி டைம்ஸ்' இதழின் தெற்காசிய நிருபராகப் பணியாற்றியவர். அப்படி அவர் பணியாற்றியபோதுதான் 1962 இந்திய - சீனப் போர் மூண்டது. 1970-இல் இந்தப் புத்தகம் வெளிவந்தபோது, அது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியது.
"நடுநிலையுடன் பதிவு செய்யப்பட்ட போர் ஆவணம்' என்று விளம்பரப்படுத்தப்பட்ட நெவில் மாக்ஸ்வெல்லின் "இந்திய சீனப் போர்', சீனாவின் நிலைப்பாட்டை ஆதரித்து எழுதப்பட்ட புத்தகம் என்பதுதான் உண்மை. அந்தப் போரை சீனப் படையெடுப்பு என்று சொல்வதைவிட, இந்தியப் படையெடுப்பு என்பதுபோல சித்தரிக்கிறார் நெவில் மாக்ஸ்வெல். அதுகுறித்து அவர் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சர்ச்சைக்குரிய பகுதிகள் பலராலும் விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தகம் குறிப்பிட்டிருக்கும் சில சம்பவங்களும், தகவல்களும், எழுத்தாளரின் இந்திய எதிர்ப்பையும், சீனாவுக்கு சாதகமான நிலைப்பாட்டையும் எடுத்தியம்புகின்றன.
- "விவாதத்துக்கு அவசியமே இல்லை என்று தீர்மானித்ததன் மூலம் நேரு எல்லைப் பிரச்னையைத் தகராறாகவும், அந்தத் தகராறு பின்னாளில்
எல்லைப் போராகவும் மாற வழிவகுத்தார். மெக்மொகன் எல்லைக்கோடு பிரச்னையை மறு பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தாமல் முடிந்துபோன விஷயம் என்று நேரு எடுத்த தன்னிச்சையான முடிவே இந்தியா-சீனாவுக்கு இடையே அது தொடர்பான முறையான ஒப்பந்தம் ஏற்படாமல் போகக் காரணமானது.
- எல்லை குறித்த பிரச்னைகளில் அண்டை நாடுகளுடன் விவாதிக்க வேண்டும் என்பது சீனாவின் கருத்து. ஆனால், எல்லை பற்றி எந்த விவாதங்களும் கூடவே கூடாது என்பது இந்தியாவின் கருத்து'' தேசிய உணர்வைத் தூண்டுவதற்கும், எதிர்ப்புகளை திசைதிருப்புவதற்கும், முற்போக்கு சக்திகளை அடக்குவதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கும் சீனாவுடனான மோதலை பண்டித ஜவாஹர்லால் நேரு ஏற்படுத்தினார் என்கிற கருத்தை முன்மொழிகிறது இந்தப் புத்தகம். நடுநிலைப் பார்வை என்பதைவிட, சீனாவின் பார்வையில் இந்திய-சீனப் போரின் பின்னணியைப் பதிவு செய்திருக்கிறார் நெவில் மாக்ஸ்வெல்.
நெவில் மாக்ஸ்வெல்லை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், ஜனனி ரமேஷின் தங்கு தடையில்லாத மொழிபெயர்ப்பை ரசிக்க முடிகிறது.

இயக்குநர், கவிஞர் லிங்குசாமி கட்செவி அஞ்சலில் உருக்கமான கவிதை ஒன்றை அனுப்பித் தந்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில், கர்ப்பிணி யானைக்கு தேங்காயில் வெடிமருந்து வைத்துக் கொடுத்துக் கொன்ற சம்பவத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் கவிதை இது.
அவனைக் கண்டறிந்த பிறகு
என்ன தண்டனை கொடுக்கலாமென
பல யோசனைகளுக்குப் பிறகு
ஒரு முடிவுக்கு வந்தேன்.
ஒரு தந்தம் கொண்டு நடு முதுகில்
யானை பலம் கொண்டு இறக்கினேன்
இன்னொரு தந்தம் கொண்டு
கீழ்வழியாக மேல்நோக்கி ஏற்றினேன்
அப்போதும் தீர்ந்தபாடில்லை கோபம்
அவன் கர்ப்பம் தரித்திருக்கவில்லையே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


