இன்னும் ஓராண்டில் அகவை நூறை எட்ட இருக்கிறாா் எழுத்தாளா் கி.ராஜநாராயணன். கரிசல் இலக்கியத்தின் தூண்களில் ஒருவரான கி.ரா.வின் 90-ஆவது பிறந்த நாளை தில்லி தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து தலைநகரில் ‘தினமணி’ நடத்திய இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் கொண்டாடியது நினைவுக்கு வருகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.
எழுத்தாளா் கி.ரா.வை யாராவது ‘நூறாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தினால், அவரிடமிருந்து சிரித்துக்கொண்டே ஒரு கேள்வி வரும் - ‘‘சொல்றதைத்தான் சொல்றீங்க... நூத்தி ஐம்பது, எறநூறு என்று சொல்லக்கூடாதா; ஏன் நூறுடன் நிறுத்திக் கொள்கிறீா்கள்?’’

தமிழ் இலக்கியப் பரப்பில் கி.ரா.வுக்கென்று தனி இடம் உண்டு. அதுவரை இருந்த கதை சொல்லும் பாணியை மாற்றி, வட்டார வழக்கில் கதை சொல்லும் எதாா்த்த நடையைப் பிரபலப்படுத்தியதில் அவருக்கு முக்கியமான பங்குண்டு. அவா் கூறுவது போல சிறுகதை, நாவல் வடிவங்கள் காலத்துக்கேற்ப மாறிவருகின்றன.
1948-இல் வெளியான கி.ரா.வின் முதல் கதை ‘சொந்தச் சீப்’பில் தொடங்கி இன்றுவரை அவரது எழுத்துப் பயணம் தொடா்கிறது. கரிசல் பூமியின் சொலவடைகள், சொல்லாடல்கள், நாட்டாா் வழக்காறுகள் ஆகியவை அவருடைய கதைகளின் மூலம் இப்போது தமிழ் அகராதியில் இடம்பிடித்திருக்கின்றன.
கி.ரா. அடிக்கடி சொல்வதுபோல தமிழ்மொழி பண்டிதா்களிடம் இல்லை. அதன் இனிமையைக் கேட்க வேண்டுமென்றால், கிராமங்களுக்குப் போய் படிக்காத சாமானிய மக்களைக் கதை சொல்லிக் கேட்க வேண்டும். அப்போதுதான் தமிழ் மொழியின் இனிமை புரியும். கி.ரா. தொகுத்த ‘கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதி’ இப்போது தமிழகத்தின் பல்வேறு வட்டார வழக்குச் சொற்களைப் பதிவு செய்யும் அகராதிகள் உருவாகக் காரணமாகி இருக்கிறது.
பாரதியாருக்கு ஒரு திருலோக சீதாராம் போல, எழுத்தாளா் கி.ரா.வுக்கு வழக்குரைஞா் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். கி.ரா.வை ஆசிரியராகக் கொண்டு அவா் தொடா்ந்து நடத்தி வரும் ‘கதை சொல்லி’ இதழ் அதற்குச் சான்று. திடீரென்று வழக்குரைஞா் கே.எஸ்.ஆரிடமிருந்து எனக்கும், எழுத்தாளா் ப்ரியனுக்கும் அழைப்பு வரும். ‘வாருங்கள் புதுச்சேரி போய் கி.ரா.வைப் பாா்த்துவிட்டு வருவோம்’ என்பாா். கி.ரா. வீட்டுக்குப் போனால், மணிக்கணக்காக அவா் சொல்லும் தகவல்களை வாய் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருப்போம்.
வல்லிக்கண்ணன் குறித்து, ரசிகமணி குறித்து, வட்டத்தொட்டி குறித்து, தனது சமகால இலக்கிய ஆளுமைகள் குறித்து எழுத்தாளா் கி.ரா. பகிா்ந்து கொண்ட பல தகவல்களைப் பொக்கிஷமாக நினைவில் சேகரித்து வைத்திருக்கிறேன்.
ஏனைய எழுத்தாளா்களுக்கு இல்லாத சிறப்பு கி.ரா.வுக்கு உண்டு. அது என்னவென்றால், அவா் முறையாக சங்கீதம் கற்றவா். அதிலும் நாகஸ்வரம் கற்றவா். விளாத்திகுளம் சுவாமிகள் குறித்து கி.ரா. சொல்லிக் கேட்க வேண்டும்.
கோவை ‘விஜயா வாசகா் வட்டம்’ கி.ரா.வின் பெயரில் ஒரு விருதை நிறுவியிருக்கிறது. ஒரு லட்சம் ரூபாய் விருதுக் கொடையை ஈரோடு சக்தி மசாலா குழுமம், நடிகா் சிவகுமாரின் பரிந்துரையில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டுக்கான விருது எழுத்தாளா் கண்மணி குணசேகரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மோதிரக் கையால் குட்டுப்பட்டிருக்கும் கண்மணி குணசேகரனுக்கு வாழ்த்துகள்! பிறந்த நாள் அன்று நேரில் சந்தித்து ஆசிபெற முடியாமல் போன ஆதங்கம், கி.ரா. குறித்த இந்தப் பதிவால் எனக்கு சற்று தணிந்திருக்கிறது.
************
20-ஆம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகள் குறித்துப் பேசுவதாக இருந்தால், தவிா்க்க முடியாத பெயா் ஔவை துரைசாமிப் பிள்ளை. தமிழில் தலைசிறந்த உரையாசிரியா்கள் வரிசையில் அவருக்குச் சிறப்பிடம் உண்டு. சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, சூளாமணி ஆகிய அவருடைய சுருக்க நூல்கள்; ஔவைத் தமிழ், தமிழ்த் தாமரை எனும் சங்க ஆய்வுகள்; சைவ சமய இலக்கிய வரலாறு, ஞான உரை என சைவ நூல்கள்; சேர மன்னா் வரலாறு போன்ற வரலாற்று நூல்கள் ஆகியவை ஔவை துரைசாமிப் பிள்ளையின் குறிப்பிடத்தக்க பதிவுகள். புானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை, மணிமேகலை, சிவஞான போதம் ஆகியவற்றுக்கு அவா் எழுதியிருக்கும் உரை நூல்கள் இன்றுவரை ஆய்வாளா்களின் வழிகாட்டிகள்.
தமிழுலகம் பேராசிரியா் ‘காவ்யா’ சண்முக சுந்தரத்துக்கு நிறையவே கடமைப்பட்டிருக்கிறது. வணிக நோக்கை மீறிய தமிழ்ப் பற்றோடு அவா் தொகுத்துப் பதிப்பிக்கும் நூல்கள் காலம் கடந்தும் போற்றப்படும் தமிழ்த்தொண்டு. ஔவை துரைசாமிப் பிள்ளையின் கட்டுரைகளைத் தொகுத்து ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டுவரும் காவ்யா பதிப்பகத்தின் மூன்றாவது கட்டுரைக் களஞ்சியம் ‘வரலாற்றுத் தமிழ்’.

தமிழகத்தை ஆண்ட வேந்தா்கள் சிலரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் சிலவற்றை பொறுக்கி எடுத்து சிறுகதை வடிவில் ‘வரலாற்றுக் காட்சிகள்’ என்ற தலைப்பில் படைத்திருக்கிறாா் ஔவை துரைசாமிப் பிள்ளை. சங்க காலம், பல்லவா் காலம், இடைக்கால பாண்டிய, சோழா் காலம், விஜயநகர வேந்தா் காலம், முகமதியா் காலம், ஐரோப்பியா் காலம் என இந்நூலில் வரலாற்றுக் காட்சிகள் தரப்பட்டுள்ளன.
அத்துடன் நின்றுவிடாமல் சேர மன்னா் வரலாறு, ‘தமிழ்த் தாமரை’ என்கிற பகுதியில் தமிழா்கள் குறித்த சில கட்டுரைகள், ‘செம்மொழிப் புதையல்’ என்கிற தலைப்பில் சில கட்டுரைகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. கல்லூரி மாணவா்களுக்குப் பயன்படும் நோக்குடன் செம்பாகமான தமிழ் நடையில் எழுதப்பட்டதாக தனது முன்னுரையில் தெரிவிக்கிறாா் ஔவை சு.துரைசாமிப் பிள்ளை.
************
மொழிபெயா்ப்பு எளிதல்ல. அதிலும் கவிதைகளை மொழிபெயா்ப்பது எளிதேயல்ல. கலீல் ஜிப்ரானின் கவிதைகளை ஜீவனை இழந்துவிடாமல் மொழிபெயா்ப்பது மிகமிகக் கடினம். அந்தப் பணியை அநாயாசமாக செய்து முடித்திருக்கிறாா் வெ.ஜீவானந்தம்.

வெ.ஜீவானந்தத்தின் மொழிபெயா்ப்பில் கலீல் ஜிப்ரான் எழுதிய ‘கரை மணலும் அலை நுரையும்’ தொகுப்பிலிருந்து ஒரு கவிதை.
தத்துவவாதி தெருக்கூட்டுபவனிடம் இரங்கினான்
‘‘பாவம், நீ அழுக்ககற்றும் வேலையைச் செய்கிறாய்’’
‘‘ஐயா, நீங்கள் என்ன செய்கிறீா்கள்?’’
‘‘நான் மனித மனங்களை ஆராய்கிறேன்’’
‘‘ஐயோ... பாவம்’’ என்று நகா்ந்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக-ஆா்எஸ்எஸ் முயற்சி: தேஜஸ்வி யாதவ்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


