பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அடியும் முடியும்!

கரூர் மாவட்டத்தில் குளித்தலைக்கு அருகில் சுரும்பார் குழலம்மை (அராளகேசி) உடனுறை ரத்தினகிரிஸ்வரர் திருமலைத் திருக்கோயில் அமைந்துள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2021, 1:23 pm

முனைவர் இரா. மாது


கரூர் மாவட்டத்தில் குளித்தலைக்கு அருகில் சுரும்பார் குழலம்மை (அராளகேசி) உடனுறை ரத்தினகிரிஸ்வரர் திருமலைத் திருக்கோயில் அமைந்துள்ளது. இன்று "ஐயர்மலை' என்று அழைக்கப்படுகிறது. இம்மலை மாணிக்க மணிகளாலானது என்பர்.

இம்மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் நவரத்தினங்களைக் கண்டெடுத்து, அதனை விற்று வாழ்ந்து வந்தனர். இதனையறிந்த மன்னன் ஒருவன் மாணிக்கத்தைத் தேடி அங்கு வந்தான். அப்போது அங்கு வந்த அந்தணர் ஒருவர் ஒரு தொட்டியில் காவிரி நீரை நிரப்பி அதில்  மூழ்க மாணிக்கம் கிடைக்கும் என்றார். மன்னனும் அவ்வாறே செய்தான். ஆனால் தொட்டியும் நிரம்பவில்லை; மாணிக்கமும் கிடைக்கவில்லை. கோபம் கொண்டு தன் கையிலிருந்த வாளால் அந்தணரை வெட்டினான். 

அந்தணர் நின்ற இடத்தில் ஒரு சிவலிங்கம் தோன்றியது. அதன்மேல் பகுதி வாளால் வெட்டுண்ட வடுவோடு இருப்பதைக் கண்டான் மன்னன். உச்சியில் வெட்டுப்பட்ட காயத்தோடு நிற்கின்ற ஈசனே "வாட்போக்கிநாதர்' எனப் பெற்றார். தழும்பீசர், முடித்தழும்பர் என்ற வேறுசில பெயர்களும் இவ்வீசனுக்கு உண்டு. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இத்தலத்து ஈசன் மீது "வாட்போக்கிக் கலம்பகம்' என்னும் பிரபந்தத்தை இயற்றியுள்ளார். அள்ள அள்ளக் குறையாத தமிழ்ச் சுவையோடு விளங்கும் இந்த அட்சயப் பாத்திரத்திலிருந்து ஒரு பருக்கை.

காஞ்சிபுரத்தில் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மணலுருவாய் விளங்குகின்ற சிவபெருமானுக்கு ஆற்று வெள்ளத்தால் பாதிப்பு உண்டாகும் என்று அஞ்சி, தன் மார்புடன் அணைத்துக் கொண்டாள் அம்பிகை.  அதனால் லிங்கத்தின்மீது ஏற்பட்ட தழும்பு இன்றும் மறையாமல் உள்ளது.

"மாணிக்கவாசகருக்காக மண் சுமந்து பாண்டியனால் பிரம்படிபட்டபோது ஏற்பட்ட தழும்பு ஈசன் முதுகில் உள்ளது. ஈசனே! மன்னன் கோபத்தால் தலையிலும், அன்னையின் அச்சத்தால் மார்பிலும், அடியவர் பொருட்டுக் கருணையால் முதுகிலும் ஒருசேரத் தழும்புகளை ஏற்றுக்கொண்டாய். மேனியின் மேல் பகுதி முழுதும் வடுவாயிருக்க, கீழ்ப்பகுதியில் வடுவில்லாமல் இருப்பது சரியா? உன்னுடைய இந்தக் குறையைப் போக்க, நான் ஒரு வழி சொல்கிறேன். என்னுடைய நெஞ்சமாகிய கல்லின் மீது உன்னுடைய திருவடியை வை. அதனால் ஏற்படும் வடுவால் உன் கீழ்ப்பகுதியில் வடுவில்லை என்ற உன் மனக்குறை நீங்கிவிடும் என்று அசதியாடுகின்றார் மகாவித்வான். 

தழுவுமையால் முன்னுந் தமிழிறையாற் பின்னும்
தொழுமிறையான் மேலுஞ்சுவடு கெழுமுவ - கீழ்
இன்றால் எனுங்குறை போம்என் மனஞ்சேர் வாட்போக்கி
அன்றால் அமர்ந்தாய் அடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.