இந்த வாரம் கலாரசிகன் - (29-08-2021)

சொந்தப் பணி நிமித்தம் கோயம்புத்தூர் சென்றிருந்தேன்.  கோவை சென்றவுடன் பெரியவர் நஞ்சுண்டனின் நினைவு வந்தது.
இந்த வாரம் கலாரசிகன் - (29-08-2021)


சொந்தப் பணி நிமித்தம் கோயம்புத்தூர் சென்றிருந்தேன்.  கோவை சென்றவுடன் பெரியவர் நஞ்சுண்டனின் நினைவு வந்தது. அவருடைய மகனைத் தொடர்பு கொண்டபோது, வடவள்ளியில் உள்ள அவரது வீட்டில் நலமாக இருப்பதாகவும், என்னை சந்தித்தால் மகிழ்ச்சி அடைவார் என்றும் தெரிவித்தார்.

காரைக்குடிக்கு அடுத்தபடியாக உருவானது கோவை கம்பன் கழகம். ஜி.கே.சுந்தரத்தின் தலைமையில் கோவையில் கம்பன் கழகம் உருவானபோது அதன் செயலாளராக இருப்பதற்கு  "ஜி.கே.எஸ்.' தேர்ந்தெடுத்த நபர் கோவை நா.நஞ்சுண்டன். தொடர்ந்து அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோவை கம்பன் கழகத்தின் செயலாளராக இருந்து வரும் நா.நஞ்சுண்டன், முனைவர் முருகேசனை இணைச் செயலாளராக்கி, அடுத்த தலைமுறையைத் தயார்ப்படுத்தி இருக்கிறார்.

கோவை கம்பன் கழகத்தின் செயலாளராக நா. நஞ்சுண்டன் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். பேராசிரியர் ஆ.சீனிவாச ராகவனைத் தொடர்ந்து ஒரு மாதம் "கம்பராமாயணம்' குறித்த உரை நிகழ்த்த வைத்து, அதைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். அந்த ஒலிநாடாப் பதிவு என்னவாயிற்று என்று தெரியவில்லை. அ.ச.ஞா.வின் மேற்பார்வையில் கோவை கம்பன் கழகம் கம்பராமாயணப் பதிப்பை வெளியிட்டதும் நஞ்சுண்டன் செயலாளராக இருந்தபோதுதான். 

புதிய இலக்கியப் பேச்சாளர்கள் பலரை அடையாளம் கண்டு, ஊக்குவித்து உயர்த்தியதிலும் கோவை கம்பன் கழகத்துக்கும், நஞ்சுண்டனுக்கும் பெரும் பங்கு உண்டு. ஆண்டுதோறும் புதிய பல தலைப்புகளில் கருத்தரங்கம், பட்டிமன்றம் என்று கம்பன் விழாவில் நடப்பதுடன், ஆண்டுமலர் ஒன்றும் வெளிக்கொணர்வது வழக்கம். அவை இலக்கியப் பெட்டகங்கள்.

இப்போது நஞ்சுண்டனுக்கு அகவை 91. அவரை நேரில் சந்தித்துப் பேசியதற்கும், ஆசிபெற்றதற்கும் இன்னொரு காரணம் உண்டு. "தினமணி' நாளிதழ் "பாரதி அநுபந்தம்' என்கிற பெயரில் 80 ஆண்டுகளுக்கு முன்னால் மலர் ஒன்று கொணர்ந்தது என்பதை எனக்குத் தெரிவித்தவர் நஞ்சுண்டன்தான். அதில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து அவர் "புதுயுகக் கவிஞன் பாரதி' என்கிற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி "தினமணி' சார்பில் நாங்கள் வெளிக்கொணர இருக்கும் மகாகவி பாரதியார் மலருக்கு அந்தப் புத்தகம்தான் தூண்டுகோல். அந்த வகையில் அவரிடம் ஆசிபெற்று, பாரதி நினைவு நூற்றாண்டு மலரைத் தொகுப்பதுதானே சரியாக இருக்கும்.  அவரை சந்தித்து ஆசி பெற்று மலர் தயாரிப்புப் பணியைத் தொடங்கியிருக்கிறோம்.

------------------------------------------------------------------------------------------------------------------

தமிழின வரலாற்று ஆய்வாளர்களில் மயிலை சீனி. வேங்கடசாமிக்கு முக்கியமான பங்கு உண்டு. பண்டைத் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதி குறித்தும் அவர் இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் நடத்திய ஆராய்ச்சிகளின் பயனாகத்தான் பல புதிய தகவல்களையும், உண்மைகளையும் அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது.


"அருட்செல்வர்' பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் தூண்டுதலால் உந்தப்பட்டு, கொங்கு நாடு குறித்து ஆய்வு செய்து  மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியிருக்கும் புத்தகம்தான் "கொங்கு நாட்டு வரலாறு'. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்னால் அவர் எழுதிய அந்தப் புத்தகம் இப்போது மறுபதிப்பாக வெளிவந்திருக்கிறது.

சங்க காலத்துத் தமிழகம் என்பது சேர, சோழ, பாண்டியர்களுடன் நின்றுவிடவில்லை. அது துளு, தொண்டை, கொங்கு நாடுகளையும் உள்ளடக்கிய ஆறு நாடுகளைக் கொண்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழகம் என்று சொல்லும்போது  நாம் சேர, சோழ, பாண்டியர்களை மட்டுமே நினைவுகூர்கிறோம். சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழகத்தின் வரலாறு மட்டுமல்ல, பண்டைத் தமிழகம் உள்ளடக்கிய பகுதிகள் குறித்த வரலாறும் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. 

தொண்டை நாடும், கொங்கு நாடும் தெரியும். அது என்ன துளு நாடு என்று யோசிக்கத் தேவையில்லை. அரபிக் கடலுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையே, சேர நாட்டுக்கு வடக்கே இருந்த பகுதிதான் துளு நாடு. தென் கன்னட, வட கன்னடப் பகுதிகளை உள்ளடக்கிய துளு நாடு இப்போது கர்நாடக மாநிலப் பகுதியாக இருக்கிறது. அதற்கான சான்றுகள் பலவும் காணக்கிடைக்கின்றன.

அதேபோல,  "கொங்கு நாடு' என்பது அரசியல் காரணங்களுக்காக இப்போது எழுப்பப்படும் கோஷம் என்று நினைத்துவிட வேண்டாம். சேர, சோழ, பாண்டியர்களைப் போல ஒரு மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டதாக அது இல்லாமல் போனாலும், அந்தப் பகுதியும் சங்க காலத்தில் பல சிற்றரசர்களைக் கொண்ட பகுதியாகத் தனித்து இயங்கி வந்தது. பிறகு அது சேரர்களால் கைப்பற்றப்பட்டு, அவர்களது ஆளுமையில் தொடர்ந்ததற்கான ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன.

""கி.பி. முதல் நூற்றாண்டில் தொடங்கும் கொங்கு நாட்டுச் சரித்திரம், தமிழகம் களப்பிரர்களின் கீழியங்கியபோது முடிவடைகிறது'' என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி. ""ஒரு நாட்டின் வரலாறு எழுதுவதற்கு அடிப்படையான அகழ்வாராய்ச்சி (ஆர்க்கியாலஜி), கல்வெட்டுகள் (எபிகிராபி), நாணயங்கள் (நூமிஸ்மேட்டிக்ஸ்), இலக்கியச் சான்றுகள் ஆகிய நான்கில் இலக்கியச் சான்றுகளைத் தவிர ஏனைய மூன்றும் கொங்கு நாட்டு வரலாறு எழுதக் குறைவாகவே கிடைத்துள்ளன'' என்பதையும் அவர் குறிப்பிடாமல் இல்லை.

கொங்கு நாட்டு வரலாற்றை எட்டுத்தொகை நூல்களின் மூலம் நிறுவுகிறார் மயிலை சீனி. வேங்கடசாமி. ""பதிற்றுப்பத்து, புறநானூறு, அகநானூறு, நற்றிணை ஆகிய இலக்கியப் பதிவுகள் இல்லாமல் போனால், கொங்கு நாட்டின் வரலாறு அடையாளம் தெரியாமல் அழிந்து போயிருக்கும்'' என்று கூறும் சீனி. வேங்கடசாமி, பதிற்றுப்பத்தில் கூறப்படும் சேரர்களைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்திலும் காணக்கிடைக்கின்றன என்றும், அதையும் கருத்தில் கொண்டு கொங்கு நாட்டுப் பொறைய அரசர்களின் காலத்தைக் கணித்து நிறுவுகிறார்.

தகடூர் எறிந்த பெருஞ்சேர இரும்பொறைக்குப் பிறகு கொங்கு நாட்டை ஆண்ட அவனுடைய தம்பி மகனான இளஞ்சேரன் இரும்பொறை, அவனுக்குப் பிறகு யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆகிய மூன்று கொங்குநாட்டு அரசர்கள் குறித்த இலக்கியப் பதிவுகளை மேற்கோள்காட்டி, பண்டைய தமிழகத்தின் முக்கியமான பகுதியாகக் கொங்கு மண்டலம் இருந்ததை நிறுவுகிறார் சீனி. வேங்கடசாமி. பதிற்றுப்பத்தின் பத்தாம் பத்தில் புலவர் இளங்கீனரார் பத்து பாடல்களைப் பாடியிருக்க வேண்டும் என்றும், அந்தப் பத்துப் பாட்டுகளும் கிடைக்காதது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மயிலை சீனி. வேங்கடசாமியின் "கொங்கு நாட்டு வரலாறு' மேலும் பல ஆய்வுகளுக்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

ஹைக்கூவின் அழகும், சிறப்பும் என்னவென்றால், பக்கம் பக்கமாக எழுத வேண்டிய பிரச்னைகளை மூன்று வரிகளில் அநாயாசமாகச் சொல்லிச் செல்வது  என்பது எனது கருத்து. குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த ஆய்வுகள், விசாரணைகள்,  நீதிமன்றத் தீர்ப்புகள் என்று எத்தனையோ வந்துவிட்டன. அந்தச் சமூக அவலத்தை இப்படியும்கூட  வெளிப்படுத்த முடியும் என்று  சொல்லிச் செல்கிறது கவிஞர் ரத்னப் பிரியனின் ஹைக்கூ.குச்சிகளுக்கு மருதாணி வைக்கிறாள் சிவகாசிச் சிறுமி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com