கன்னி அழிந்தனள்!

அறத்தோடியைந்த வாழ்க்கை வாழும் செந்நாப்புலவர்களின் வாக்குப் பொய்க்காதது. கம்பர் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? இதைப் பற்றிய ஓர் அரிய நிகழ்வும் பாடலும் உள்ளது.
கன்னி அழிந்தனள்!
Updated on
2 min read

அறத்தோடியைந்த வாழ்க்கை வாழும் செந்நாப்புலவர்களின் வாக்குப் பொய்க்காதது. கம்பர் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? இதைப் பற்றிய ஓர் அரிய நிகழ்வும் பாடலும் உள்ளது.

குலோத்துங்க சோழன் காலத்தில் காவிரி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து அக்கம் பக்கத்திலுள்ள ஊர்கள், விளைநிலங்கள் அனைத்திலும் புகுந்தோடியது. அரசனும் அமைச்சர்களும் குடிமக்களும்கூடிக் கரைகட்ட முயன்றனர். காவிரி நதியோ அந்தக் கரையையும் பெயர்த்துக்கொண்டு நிற்காது ஓடியது. அப்போது அவ்வூரிலிருந்த வேளாளர் குடிமக்கள் அரசனிடம் சென்று, "அரசே, செந்நாப்புலவரும், தெய்வத் தமிழைப் பயின்றவருமான பெரும் புலவர் கம்பர் ஒரு கவிதை பாடினால் இந்தக் கரை நிலைத்து நிற்கும்' என்று கூறினர். 

அதற்கேற்ப அரசனும் மக்களும் கம்பரிடம் சென்று, "செந்நாப்புலவரே! உம் பாடலால் காவிரியின் இக்கரையை நிலைநிறுத்தியருள வேண்டும்' என வேண்டினர். கம்பரும் அதற்கிணங்க ஒரு வெண்பாப் பாடினார்.

"கன்னி ஆறு' எனப்படும் "குமரி ஆறு' கடலால் கொள்ளப்பட்டாள். கங்கை நதியும் மாறுபட்டாள். உலகினைப் புரக்கும் தாயாகிய காவிரியே! இப்போது பொன்னி நதியாகிய காவிரியும் கரையைக் கடந்து போனாள் என்ற பேச்சுக்கு இடம் கொடுக்கலாகுமோ,? ஆகவே கரைகடக்காதிருப்பாயாக!' எனும் பொருள்படும்படியான பாடலைப் பாடினார்.

"கன்னி யழிந்தனள் கங்கை திறம்பினள்
பொன்னி கரையழிந்து போயினளென்- றின்னீர்
உரைகிடக்க லாமோ வுலகுடைய தாயே
கரைகடக்க லாகாது காண்!' 

உடனே காவிரியின் நீர்ப்பெருக்கு அடங்கியது. மகிழ்ச்சியடைந்த மன்னனும் வேளாளர் குடிமக்களும் கொங்கு மண்டலமும் சோழமண்டலமும் அழியாமலிருக்குமாறு காவிரியின் நீர்ப்பெருக்கை அடங்கச் செய்த புலவருடைய தமிழுக்குப் பரிசளிக்க விழைந்தனர்.

கம்பரும் அவர்களிடம், "எத்தகைய பரிசாகிலும் என்றுமே அனைவரும் நினைவில் கொள்ளுமாறு இருக்க வேண்டும். குடிமக்கள் அரசாங்கத்திற்குச் செலுத்தி வரும் திருமணவரி என ஒன்றுள்ளது. அந்த வரியை என் சார்பாகத் தமிழுக்கு அளிக்க வேண்டும்' என வேண்டிக்கொண்டார்.

எவ்வாறென அரசன் கேட்க,  கம்பர், "இந்தச் செயலைச் செய்தது நானல்ல; புகழும் பெருமையும் தமிழுக்கே! தமிழ்ப் பாடலுக்கே! இந்தக் கொங்கு நாட்டில் பழங்குடிகளான புலவர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். காலங்கள்தோறும் அரசர்களும் குடிமக்களும் அவர்களைப் புரந்தனர். ஆனால், தற்போது அவர்கள் புரவலர்கள் இல்லாமையால் நலிவடைந்து வருகின்றனர். ஆகவே, கொங்குநாட்டு மக்களின் திருமண விழாக்களின்போது, இப்புலவர்களின் வாயால் மணமக்களை வாழ்த்தி ஆசி கூறச்செய்து தமிழுக்காக எனக்களித்த இந்தத் திருமணவரியை அப்புலவர்களுக்குக் கொடுத்து அவர்களைப் புரக்குமாறு வேண்டுகிறேன். இந்தத் திருமண வரியையும் தமிழுக்கே அளிக்கிறேன்' என்றார். 

அரசனும் மக்களும் கம்பரின் இந்தக் கொடை குணத்தையும் தம்மினத்தோரான புலவர்கள் வறுமையில் வாடுவதை உணர்ந்து அவர்களுக்குத் தமிழின் பெயரால் செய்த பெரும் உதவியையும் எண்ணி வியந்து பாராட்டி மகிழ்ந்தனர். அரசன் குலோத்துங்கனும் அவ்வாறே, ஒரு சாசனமும் செய்து கையெழுத்திட்டுக் கொடுத்தான்.

இதனைப் பற்றிய ஒரு பாடல் கார்மேகக் கவிஞர் இயற்றியுள்ள "கொங்கு மண்டல சதகம்' எனும் நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

"கன்னி அழிந்தனள் கங்கை திறம்பினள் கண்ணின்முனே
பொன்னி கரைகடந்தாள் எனும் நிந்தை புவியிலுளோர்
பன்னி இகழாது அமர்எனக் கம்பர்ஓர் பாச்சொலச்செய்
மன்னிய கங்கைக் குலத்தாரும் வாழ்கொங்கு மண்டலமே!' 

"கன்னி ஆறு எனப்படும் குமரியாறு கடலால் கொள்ளப்பட்டு அழிந்துபோனாள். கங்கை நதி தன் நிலையினின்று மாறுபட்டாள். பொன்னி எனப்படும் காவிரியும் கரையைக் கடந்தனள் என இவ்வுலகத்திலுள்ள கற்பிற்சிறந்த பத்தினிப் பெண்கள் பழித்துக் கூறும்படி இடம்கொடாமல் அமைதியாக இரு என கம்பரை ஒரு பாடல் பாடச் செய்த கங்கைக்குலத்தோர் எனப்படும் வேளாளர் குலமக்கள் வாழும் கொங்கு மண்டலம்' எனப் போற்றப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com