நுனிப்புல்...

"யாதும் ஊரே யாவரும் கேளிர்'  -  பல மேடைகளில் பேச்சாளர்கள் பலர் இந்த ஒரு வரியை மட்டும் கூறிவிட்டு இதற்குப் பொருளும் கூறுவார்கள்; அதாவது உலக மாந்தர்கள் யாவரும் நம்முடைய சகோதரர்களே;
நுனிப்புல்...

"யாதும் ஊரே யாவரும் கேளிர்'  -  பல மேடைகளில் பேச்சாளர்கள் பலர் இந்த ஒரு வரியை மட்டும் கூறிவிட்டு இதற்குப் பொருளும் கூறுவார்கள்; அதாவது உலக மாந்தர்கள் யாவரும் நம்முடைய சகோதரர்களே; எல்லா ஊர்களும் நம்முடையதே என்று அழுத்தம் கொடுத்து சமத்துவம், சகோதரத்துவம் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  கணியன் பூங்குன்றன் என்ற புலவர் கூறிவிட்டார் என்று விளக்கம் கூறுவார்கள்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பூங்குன்றம் என்ற ஊரில் (தற்போது இவ்வூர் மகிபாலன்பட்டி என்று வழங்கப்படுகிறது) சோதிடக் கலையில் கணித்து கூறக்கூடிய ஒருவர் இருந்துள்ளார். அவரது இயற்பெயர் தெரியவில்லை. பூங்குன்றம் என்ற ஊரில் வாழ்ந்தவர், சோதிடம் கணித்து சொல்பவர் என்ற காரணத்தினால், "கணியன் பூங்குன்றனார்' என்பது இவரது காரணப்பெயராக அமைந்துவிட்டது போலும்!   "பொருண்மொழிக் காஞ்சித் துறை'யில் (திணை: பொதுவியல்) அமைந்த இவரது பாடல் வருமாறு: 

யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர் தர வாரா,
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன,
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்
இன்னாது என்றலும் இலமே, மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லற் பேரி யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல, ஆருயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர் 
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.   
(புறம்: 192) 

"எவ்வூராயினும் அஃது எம் ஊரே; யாவராயினும் அவர் எம் உறவினரே. நமக்கு வரும் தீமையும் நன்மையும் பிறரால் வருவதில்லை. நோய் வருவதும் அதனால் துன்பப்படுவதும் பிறகு அது தணிந்து இயல்பு நிலைக்கு வருவதும் அதன் செயல். இறப்பு என்பது புதியது அன்று; வாழ்வது என்பதும் மகிழ்ச்சியானது அன்று. வாழ்வியல் தத்துவங்களை நன்கு உணர்ந்த சான்றோர் பெருமக்களுக்கு பிறப்பு, இறப்பு என்பது இனிமையோ, துன்பமோ அல்ல என்பது புரியும். வானத்தில் சூழ்ந்த கருமேகங்கள் யாவும் இடிமின்னலோடு மிகப்பெரிய மலை உச்சியில் பாறைகளில் மோதி மழையாகப் பெருகி மலையின் உச்சியிலிருந்து நீர்வீழ்ச்சியாகக் கொட்டத் தொடங்கும்போது வெகு வேகமாக நிலத்தை நோக்கிப் பாய்கிறது. நிலத்தில் வீழ்ந்த நீர் ஆறாகப் பெருகி ஓடத் தொடங்கும்போது அந்த நீரோட்டத்தில் ஒரு தெப்பம் அகப்பட்டுக் கொண்டால் அது நீர் ஓடும் போக்கிலேயே சென்று, நீரின் வேகம் குறைந்து செயலற்றுப் போகும் நிலையில் ஓரிடத்தில்  சென்று ஒதுங்கி விடுகிறது. 

அதுபோலவே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் அவரவர் செய்த கர்ம வினைகளுக்கேற்ப வினையின் போக்கிலேயே சென்று வாழ்க்கையும் முடிவடைகிறது. எனவே, இந்தத் தத்துவத்தை உணர்ந்த ஞானிகள் எவரைப் பார்த்தும் பெரிதும் வியப்பதும் இல்லை;  எவரையும் பார்த்து இகழ்வதும் இல்லை' என்பதே இப்பாடலின் திரண்ட கருத்து.

இக்கருத்தைப் பிரதிபலிக்கும் (தெரிவிக்கும்) ஒரு பாடல் "சீவகசிந்தாமணி' காப்பியத்திலும் உள்ளது.

"பெரிய இன்பத்து இந்திரனும் 
பெட்ட செய்கை சிறு குரங்கும்
உரிய செய்கை வினைப் பயத்தை
உண்ணும் எனவே உணர்ந்தவனே
எளியரென்ன இகழ்வதும்
இருசார் வினையும் தெளிந்தாரே
இறைவன் நூலும் தெளிந்தாரே'     (2815)
அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்
அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்
(குருஞான சம்பந்தர்- சிவபோக சாரம்)

பூங்குன்றனார் பாடல் வினை பற்றியே பேசுகிறது. இவற்றையெல்லாம் நன்கு உணராத பேச்சாளர்கள் பலர் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற ஒற்றை வரிக்கு சமத்துவம், சகோதரத்துவம் என்று இன்னமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!  இதைத்தான் நம் முன்னோர் "நுனிப்புல் மேய்வது' என்று சொன்னார்களோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com