இந்த வாரம் கலாரசிகன் - (18-07-2021)

அகவை நூறில் அடியெடுத்து வைத்திருக்கும் தோழர் என்.சங்கரய்யாவை சந்திக்கக் குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்குப் போயிருந்தேன்.
இந்த வாரம் கலாரசிகன் - (18-07-2021)
Updated on
2 min read

அகவை நூறில் அடியெடுத்து வைத்திருக்கும் தோழர் என்.சங்கரய்யாவை சந்திக்கக் குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்குப் போயிருந்தேன். போகும் வழியில் எல்லாம் எனது பள்ளிப் பருவம் நினைவில் நிறைந்தது.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அப்போது தொழிற்சங்கங்களின் மிக முக்கியமான அடையாளமாக இருந்தது. ஹார்வி மில்தான் அதற்குக் காரணம். விக்கிரமசிங்கபுரத்தில் "மூன்றுலாம்பு' என்று ஓர் இடம். அந்தத் திடலில்தான் தொழிற்சங்கங்கள் சார்பில் கூட்டங்கள்நடக்கும்.

விக்கிரமசிங்கபுரம் பாவநாசம் தொழிலாளர் நலப் பள்ளியில் படிக்கும்போது, நான் கேட்ட அரசியல் பேச்சுக்கள் என்றால் அவையெல்லாம் கம்யூனிஸ்ட் தலைவர்களுடையதுதான். தோழர் என்.சங்கரய்யாவின் பேச்சை 12 வயது பிராயத்திலேயே கேட்டவன் நான். அதன்பிறகு, மதுரைக்கு நாங்கள் குடிபெயர்ந்த பிறகு திலகர் திடல் என்கிற ஞாயிற்றுக்கிழமை சந்தைத் திடலிலும், ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியிலும் பலமுறை அவரது கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன், கேட்டிருக்கிறேன். வழிநெடுக அதையெல்லாம் நினைவில் அசைபோட்டபடிதான் குரோம்பேட்டை சென்றேன்.
அகவை நூறை எட்டியும், சற்றும் தளராத குரல். கொஞ்சம்கூடத் தடம்மாறாத நினைவாற்றல், தெளிவான சிந்தனை. அதற்குக் காரணம் அவரது மன உறுதி மட்டுமல்ல, மகாகவி பாரதி சொல்வதுபோல உள்ளத்தின் உண்மை ஒளி. நிறைய நிறையப் பேசினோம். அதிகமாகப் பேசி அவரைத் தொந்தரவு செய்துவிட்டேனோ என்றுகூட ஒரு குற்ற உணர்வு.

தோழர் என்.சங்கரய்யாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள எனக்கு இரண்டு முக்கியமான கேள்விகள் இருந்தன. மாணவப் பருவத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோûஸ அவர் அழைத்து எப்படிக் கூட்டம் போட்டார் என்பது முதல் கேள்வி. வேறொரு கூட்டத்துக்கு நேதாஜி மதுரை வந்ததாகவும், அந்தக் கூட்டத்தில்தான் சந்தித்ததாகவும் அதற்கு விளக்கம் தந்தார்.

எனது அடுத்த கேள்வி என்னவெனில், "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரம் பிள்ளையை அவர் சந்தித்திருக்கிறாரா என்பது. அதற்கான வாய்ப்பு அமையவே இல்லை என்று அவர் தெரிவித்தார். அந்தக் குறை அவருக்கு இருப்பது தெரிந்தது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தொழிற்சங்கவாதியாக இருந்தார் என்பது தெரியும். ஆரம்பத்தில் அவர் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தார் என்பது தோழர் சங்கரய்யா சொன்னபோதுதான் தெரிகிறது. பிரபல கம்யூனிஸ்ட் தலைவரும், வழக்குரைஞருமான எம்.ஆர். வெங்கட்ராமனின் ஜூனியராக இருந்தவர் ஆர். வெங்கட்ராமன் என்றும், தனது சிறைச்சாலை சகா என்றும் எண்பதாண்டுக்கு முந்தைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் அவர்.

வாழ்நாளில் மறக்க முடியாத சந்திப்பாக எனக்கு அமைந்தது தோழருடனான அந்தப் பொன்னான தருணங்கள்.

-----------------------------

சென்ற மாதம் எனது பிறந்த நாளை நினைவு வைத்துக்கொண்டு வாழ்த்தியவர்களில் ஒருவர் "அந்திமழை' ந.இளங்கோவன். பிறந்த நாள் வாழ்த்தாகத் தனது "கரன்சி காலனி' என்கிற புத்தகத்தை அனுப்பித் தந்திருந்தார்.

தேர்ந்தெடுத்த பதினைந்து வெற்றியாளர்களின் சாதனைகளைப் பதிவு செய்திருக்கிறார் இளங்கோவன். இப்படியும் நடக்குமா என்று வியப்பதற்கு ஒன்றுமில்லை. இப்படியும் நடத்திக்காட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் அந்தச் சாதனையாளர்கள். "எட்டா மலைகளின் மீதும் ஒரு பாதை இருக்கிறது. ஆனால் அது சமவெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது' என்கிற அமெரிக்கக் கவிஞர் தியோடர் ரோத்கியின் வார்த்தைகளின் அடிப்படையில், 15 சாதனையாளர்களின் வெற்றி ரகசியத்தைக் கற்றுத் தருகிறது "கரன்சி காலனி'.

பள்ளிப் படிப்பைத் தாண்டாத ஜஸ்வந்திபென் 1950-இல் எண்பது ரூபாய் கடனில் தொடங்கிய ஸ்ரீமகிளா கிரஹா உத்யோக் லிஜத் பப்பட்' என்கிற அப்பளம் தயாரிக்கும் தொழில் இப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாகி இருக்கிறது; வெறும் 20,000 ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்டதுதான் ஏர்டெல் சேவையை வழங்கும் பார்தி டெலி வென்சர்ஸ் நிறுவனம் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? - இதுபோல 15 சுவாரசியமான வெற்றி வரலாறுகள் அடங்கியதுதான் "கரன்சி காலனி'.

இளங்கோவனுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கும் நன்றி; "கரன்சி காலனி' புத்தகத்துக்கும் நன்றி!

-----------------------------

"இலக்கிய வீதி' இனியவன் குறித்து நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சென்னை கம்பன் கழகத்தின் செயலாளராகவும், "இலக்கிய வீதி'யின் அமைப்பாளராகவும் இருக்கும் இனியவனின் கொடை "காலம் கொடுத்த கொடை' புத்தகம். தனது இலக்கியப் பயணத்தில் அவர் சந்தித்த, நெருங்கிய இலக்கிய ஆளுமைகள் பலர் குறித்த அவரது பதிவுதான் இந்தப் புத்தகம். விமர்சனத்துக்கு வந்திருந்தது.

""இலக்கிய ஆளுமைகளைப் பற்றி எழுதும்போது சுவாரசியத்துக்காகக் கற்பனை கலந்துவிடும் ஆபத்து இருக்கிறது. வேறு சிலர் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால், வரலாற்றைப் பதிவு செய்கிறோம் என்கிற ஜாக்கிரதை உணர்ச்சியுடன் "இலக்கிய வீதி' இனியவன் தனது "காலம் கொடுத்த கொடை' புத்தகத்தை எழுதியிருக்கிறார்'' என்கிற திருப்பூர் கிருஷ்ணனின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். மிகையும் இல்லை, குறையும் இல்லை, உண்மைப் பதிவு என்பதை ஒவ்வொரு கட்டுரையும் உறுதிப்படுத்துகிறது.

கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் (1950-2000) வாழ்ந்த முக்கியமான எழுத்தாளுமைகள் யார், எவர் என்று பட்டியல் போட்டால், அவர்களில் பெரும்பான்மையோரைக் "காலம் கொடுத்த கொடை' பதிவு செய்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை-செப்டம்பர் காலாண்டு "சங்கு' இதழின் உள் அட்டையில் வந்திருக்கிறது நாஞ்சில் நாடன் எழுதியிருக்கும் "மாண்புகள் வந்து உம் மாடுகள் மேய்ப்பர்!' என்கிற கவிதை. வஞ்சப் புகழ்ச்சி என்று சொல்வதைவிட, இன்றைய சமூக நிலை குறித்த வெறுப்பின் வெளிப்பாடு என்றுதான் அதைக் கூறவேண்டும். உண்மை சுடும்தானே...
ஆறலைக் கள்வர்
தலைவர் எனப்படுவர்
ஆகாதொன்றில்லை அதிகாரத்தால்!
அரசியல் வாய்க்க
அதிகாரம் மெய்ப்படும்
மாண்புகள் வந்து உம்
மாடுகள் மேய்ப்பர்!
அதிகாரம் கைக்கொள்ள
என்ன செய்யலாம்?
அரசியல் ஒன்றே அறுவழிச் சாலை!
அடியாள், ஆயுதம், வன்முறை,
குற்றம், தரகு, பரத்தமை
மூலதனங்கள்
முயன்று பார்!
உத்தமனாக வாழ்ந்தென்ன கண்டாய்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com