தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேங்காய் உண்டதா தேரை?

தெங்கு என்பது தென்னையைக் குறிக்கக்கூடிய காரணத்தால் பெயர் பெற்ற பழந்தமிழ்ச் சொல்லாகும். அதாவது தேங்காய்க்குள் நீர் தேங்கி இருக்கும்.

News image
Updated On :23 மே 2021, 5:14 am

முனைவர் சே. கரும்பாயிரம்


"முத்தொள்ளாயிரம் என்ற நூலில், "தெங்குண்ட தேரை' என்றொரு தொடர் ஆளப்பட்டுள்ளது. இதனையே தொண்டை நாட்டு வழக்கில் "தேரை மோந்த தேங்காய்' என்று கூறுவர். இத்தொடரில் வரும் தெங்கிற்கும் தேரைக்கும் எவ்வாறான தொடர்பு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். 

தெங்கு என்பது தென்னையைக் குறிக்கக்கூடிய காரணத்தால் பெயர் பெற்ற பழந்தமிழ்ச் சொல்லாகும். அதாவது தேங்காய்க்குள் நீர் தேங்கி இருக்கும். "தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத், தலையாலே தான்றருத லால்' என்னும் வாக்குண்டாம் பாடலடிகள் நீண்டு வளர்கின்ற தென்னையானது வேரில் உண்ட நீரைத் தலையிலே நீராகத் தேக்கி வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் தேங்கி  என்னும் சொல் தென்னைக்குக் காரணப் பெயராகி, பின்னர் மருவி "தெங்கு' என வழங்கலாயிற்று. மக்கள் தெங்கின் இளங்காயை இளநீர் என்றும்  முற்றாத காயைத் தேங்காய் என்றும் முற்றிய காயை நெற்று என்றும் வழங்குவர். 

தேங்காய்களில் சில உள்ளீடற்று வளர்ச்சி குன்றிச் சிறுத்துக் காணப்படுவதைத் தேரைக்காய் என்பர். இக்காயைத் தேரோடி என்றும் கூறுவர். இக்காய் குரும்பையாக இருக்கும்போதே ஒரு வகையான நோயின் தாக்கத்தால் தோன்றுகிறது. இந்த நோய் எவ்வாறு வந்தது என்ற காரணத்தை அறியாமல் தவளை இனத்தைச் சேர்ந்த தேரையால்தான் அந்நோய் வந்ததென மக்கள் நம்புகின்றனர். இந்நோய்க்கும் தேரைக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. இதனை மெய்ப்பிக்கும் வகையில் முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் ஒரு நிகழ்வுடன் உவமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். 

"அன்னையுங் கோல்கொண் டலைக்கு மயலாரு
மென்னை யழியுஞ்சொற் சொல்லுவர் - நுண்ணிலைய
தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான்
றிண்டேர் வளவன் றிறத்து'

என்பது பாடலடிகள். அதாவது கிள்ளிவளவன் என்னும் சோழ மன்னன் உலா வருகிறான். உலா வருகையில் அவனுடைய அழகில் மயங்கி விடுகிறாள் பெண்ணொருத்தி. அவள் அவனிடம் தன் மனத்தையும் பறிகொடுத்துவிட்டு ஊணும் உறக்கமும் இல்லாமல் ஏக்கமாக வாழ்ந்து வருகிறாள். 

இச்செய்தி ஊரில்  உள்ளவர்களுக்குச் சென்று சேர்ந்து விடுகிறது. இவளது நிலையை இட்டுக்கட்டிப் பேசத் தொடங்கிவிட்டனர். 
அந்தச் செய்தி அவளைப் பெற்ற தாயின் காதுக்கும் எட்டிவிடுகிறது. அவள் தன் மகள் மீது சீற்றங் கொண்டு "தெருவில் வரும் மன்னனை கதவைத் திறந்து பார்க்காதே' என்று சிறுகோலால் அடிக்கிறாள். 

அடியை வாங்கும்அவள் மன்னனை நேரில் சந்தித்து ஒரு வார்த்தைகூட பேசிய தில்லை. 

அம்மன்னனுக்கும் அவளுக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை. அவள் இதனைத் தாயிடம் எவ்வாறு கூறுவது என்று ஏக்கமாய் நிற்கிறாள். 

குற்றம் செய்யாமல் இந்த இக்கட்டான அவளின் நிலை எவ்வாறு இருக்கிறது என்றால்,  தேரை தேங்காயை உண்ணாமலே உண்டதாகப் பழி சுமக்கிறது அல்லவா? அதுபோலத்தான் என்று புலவர் கூறியிருக்கும் உவமை உண்மையிலேயே இன்றளவும் உலக வாழ்வியலில் காணப்படுவது நம் கண்முன் காட்சியாய் நிற்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.