"உறைப்பு' அற்ற வாழ்க்கை!

கம்பராமாயணத்தில் திருமுடி சூட்டுப் படலத்தில்,  அயோத்தி மக்கள்  "உறைப்பு' அற்ற வாழ்க்கை வாழ்ந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன "உறைப்பு அற்ற' வாழ்க்கை?
"உறைப்பு' அற்ற வாழ்க்கை!

கம்பராமாயணத்தில் திருமுடி சூட்டுப் படலத்தில், அயோத்தி மக்கள் "உறைப்பு' அற்ற வாழ்க்கை வாழ்ந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன "உறைப்பு அற்ற' வாழ்க்கை? கானகத்தில் தவ வாழ்க்கையை மேற்கொண்ட ராமன் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் அயோத்திக்குள்ளே அடியெடுத்து வைத்தபோது, அயோத்தி மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைப் பின்வரும் பாடல் எடுத்துரைக்கிறது.


"இறைப்பெரும் செல்வம் நீத்த ஏழ்
இரண்டு ஆண்டும், யாரும்
உறைப்பு இலர் ஆதலானே, வேறு
இருந்து ஒழிந்த மின்னார்,
பிறைக் கொழுந்து அனைய நெற்றிப்
பெய்வளை மகளிர், மெய்யை
மறைத்தனர் பூணின், மைந்தர் உயிர்க்கு
ஒரு மறுக்கம் தோன்ற'

தவறு செய்யும் ஒருவனைப் பார்த்து, "இவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் உறைப்பது இல்லை', "உறைக்காத ஜென்மம்' என்றெல்லாம் கூறுவது உலகியல் வழக்கு. இதே உலகியல் வழக்குப் பொருளிலேயே "உறைப்பு' என்ற சொல்லை மேற்கண்ட பாடலில் கம்பர் பயன்படுத்தியுள்ளார்.

பதினான்கு ஆண்டுகளும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களின் தூண்டல் அயோத்தி மக்களை விட்டுவிடுமா? புலன்களின் தூண்டலால், மனம் தூண்டப்பட்டாலும், அந்த மனத்தின் ஆசைக்கு அயோத்தி மக்கள் அடிபணிந்துவிடாமல், மனம் சொல்வது உடலுக்கு உறைக்காமல் அவர்கள் விரத வாழ்க்கை மேற்கொண்டிருந்தனர் என்பதையே இப்பாடல் புலப்படுத்துகிறது.

ராமனின் விரத வாழ்க்கை பரதனிடம் படிந்தது; பரதனின் விரத வாழ்க்கை அயோத்தி மக்களிடம் படிந்தது. மக்களின் நலனுக்காக போரற்ற அமைதி வாழ்வுக்காக அசோகர் பெளத்தம் சார்ந்து விரதம் மேற்கொண்டார். ராமனுக்காகவும், பரதனுக்காகவும் ஆக, மன்னர்களுக்காக மக்கள் மேற்கொண்ட தூய ஒழுங்கை இங்கே காண்கிறோம். ஆடவரும் பெண்டிரும் தனித்தனியே இருந்து, அயோத்தியின் மக்கள் குலத்திற்கு ஒழுக்கம் சுரக்கும் என்பதனை உடலாலே மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர்.

ராமபிரான் அயோத்தியில் நுழைந்ததும் மக்களின் விரதம் நிறைவுற்றது. பரதன் உள்ளிட்ட அனைவரும், தம்மையே தாம் தொழுது அளவற்ற மகிழ்ச்சியில் பூரித்தனர். இதுவரை வளையலை மட்டும் அணிந்திருந்த பெண்கள், அணியாதிருந்த அணிகளை எல்லாம் மகிழ்ச்சி பொங்க அணிந்து கொண்டனர். அழகுக் கோலத்தோடு தோன்றிய அப்பெண்டிரைக் கண்ட ஆடவர்க்கு உயிருக்குள்ளே ஒரு மறுக்கம் உண்டாயிற்று.

உறைப்பு அற்ற நிலை, உணர்வு பொங்கிய நிலை ஆகிய இரண்டு எதிரெதிர் நிலைகளைக் கம்பர் ஒரே பாடலில் காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com