/

மின்னும் மௌலியன்!

காலம் காலமாக வீடணனை  "இலங்கையின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டவன்' என்ற தவறான கருத்து உள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2022, 12:52 pm

மகேஸ்வரி சற்குரு


காலம் காலமாக வீடணனை  "இலங்கையின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டவன்' என்ற தவறான கருத்து உள்ளது. உள்ளபடியே சரணாகதி தத்துவத்திற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு வீடணனின்  பக்தி என்று சொல்லலாம். ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவன், நித்திய ஞானப் பிரியன் வீடணன்.

"உம்பரில் ஒரு முழம் உயர்ந்த ஞானத்தம்பி' என்று கம்பரால் வர்ணிக்கப்படுகின்றான். 

"அல்லவை செய்வார்க்கும், அரசியல் பிழைத்தோர்க்கும் அறம் கூற்றாகும்' என்பது அனுபவ மொழி. பாற்கடலிலிருந்து எழுந்து வந்த அறக்கடவுள் ராமபிரானின் பிரதிநிதியாகவே இருந்தவன் வீடணன். தன் அண்ணன் இராவணனிடம் சீதா பிராட்டியை விட்டுவிடுமாறு சொல்லுகின்றான். ராவண சபை மந்திராலோசனை கூட்டத்திலே  வந்திருப்பது இறைவனே என்று கூறி திருந்திவிடுமாறுச்  சொல்லுகின்றான்.

அல்லவை செய்த இரணியன் இறந்ததை "இரணிய வதைப் படலம்' மூலமாகக் காட்டுகின்றான். நாராயணன் மீது தான் கொண்டுள்ள பக்தியை வீடணன் பிரகலாதன் பக்தியின் மூலமாக வெளிப்படுத்துகிறான். நாரணன் பக்தியைக் காட்டுவதற்குக் கம்பர் எடுத்துக்கொண்ட பாத்திரம் வீடணன் என்று கூறலாம்.

இதனைக் கேட்ட ராவணன் தன் தம்பி வீடணனைக் கடிந்து, இலங்கையை விட்டு வெளியேறுமாறு சொல்லுகின்றான். தனது மந்திரியர் அனலன், அனிலன், அரன், சம்பாதி இவர்களுடன் வெளியேறிய வீடணன் யாது செய்வது என்று திகைத்து நிற்கின்றான். 

ராமபிரானிடம் சரணாகதி அடைவதே சிறந்தது என்று அவர்கள் சொல்ல, அதனை ஏற்று அவ்வாறே செய்கிறான்.  அங்கும் இங்கும் ஒளிந்து செல்லாமல் நேரடியாக வானரப் படைகளின் முகாமிற்கு வீடணன்  தன் குழுவினருடன் வருகின்றான். அனுமன் வானரப் படைகளின் காவலர்கள் மயிந்தன், துவிந்தன் இருவரையும் விவரம் அறிந்து வர அனுப்புகின்றான்.

அவர்களிடம் அனலன், "அறநிலை பிறழாதவன், தரும நீதியன் திருமாலின் மீது நிறைய பக்தியும், வேதம் பாடுகின்ற மறையவர்கள் இடத்து பேரன்பும் கொண்டவன், பிரம்மதேவனின் பெயரனுக்கு  புதல்வனும் ஆகிய வீடணன் உலகத்து நாயகன் ராமபிரானிடம் சரணாகதி அடையவே வந்திருக்கின்றான்'  என்று சொல்கின்றான்.

வீடுபேறாகிய பெரும் சரணாகதி தத்துவத்தையே வீடணன் நாடினான் என்பது இதிலிருந்து உறுதியாகிறது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அனுமன் கூறியதை ஏற்றுக்கொண்டு  அபயம் என்று வந்தவர்களுக்கு அபய தானம் செய்தலே நமது கடமை என்று இராமபிரான் கூறுகின்றான்.

வானரத் தலைவன் சுக்ரீவன், வீடணன் இருக்குமிடம் சென்று ராமபிரான் அடைக்கலம் தருகின்றான் என்று சொல்ல முற்படுகின்றான். இச்செய்தி வீரனின் செவிகளில் புகுவதற்கு முன்பாக அவன் மனம் இராமபிரான் அடைக்கலம் தந்தான் என்பதை உணர்த்துகின்றது. அவன் கண்கள் ஆனந்தக் கண்ணீரை மழையைப் போன்று பெருக்கியது. 

"பஞ்சு என்று சொல்லும் முன்பாக சிவந்துவிடும் மென்மையான கால்களையுடைய பிராட்டியைப் பிரித்த பாவியேனுடைய தம்பி நான். எனக்கு அபயம் தந்தானோ?  என்னை அடைக்கலப் பொருளாக கொண்டானோ? அன்று சிவபெருமான் உண்ட நஞ்சு சிவபெருமானது கழுத்துக்கு அணிகலன் ஆனது போன்று நாய் போன்ற அடியேனையும் சிறப்பு பெற செய்தானோ?' என்று புளகாங்கிதம் அடைகின்றான். இது ராமபிரானிடம் வீடணன் வைத்திருந்த அளப்பரிய பக்தியைக் காட்டுகின்றது. இந்த விளக்கத்தைக் கூறிய பாடல் கம்பரின் அழகியலையும் காட்டுகின்றது.

 "பஞ்செனச் சிவக்கும் மென்கால்
தேவியைப் பிரித்த பாவி
 வஞ்சனுக்கு இளைய என்னை வருக 
என்று அருள் செய்தானோ?
 தஞ்சு எனக் கருதினானோ? 
தாழ்சடைக்  கடவுள் உண்ட
 நஞ்சு எனச்சிறந்தேன் அன்றோ 
நாயகன் அருளின் நாயேன்?'

மாணிக்கவாசகர் பல முறை சொல்லி உருகியது போன்று தன்னைப் பல இடங்களிலே "நாயேன்' என்று கூறுகின்றான் வீடணன்.  பின்பு இராமபிரான் இருக்கின்ற இடத்திற்கு தலைக்குமேல் கைகளைத் தூக்கியவாறு உருக்கத்துடன் பக்திப் பரவச நிலையில் செல்கின்றான். இதனைப் பார்த்து கல்லும் மரமும் உருகியதாம்.

நிறை செல்வத்தை வாரி வழங்கும் கடல் ஒப்ப வரங்களை வாரி வழங்குகின்ற ராமபிரானின் திருவடிகளில் நிலத்தின் மீது தன் முழு உடலும் படுமாறு விழுந்து வணங்கினான். வணங்கியவனை கருணைமிகு  கண்களால் ராமன் நோக்குகிறான். அந்த நொடியில் அழிந்தது பிறவி என்று அகம் மகிழ்கிறான் வீடணன். "நயன தீட்சை' அங்கே, அப்போதே வழங்கப்பட்டது. 

"எழுந்து இனிது இருத்தி என்று மலர்க்கையால்  இருக்கை  ஈந்தான்' - "மலர்க்கை இருக்கை' என்று சொல்லுதல் கம்பரின் அழகு. இலக்குவனை, இலங்கையின் மன்னனாக  வீடணனுக்கு  முடிசூட்ட சொல்லுகின்றார். ஆனால் அவனோ, "ஐயனே... அரக்கர் குல தொடர்பு எனக்கு நீங்க வேண்டும். அதற்கு நீர் உனது தம்பியாகிய பரதனுக்கு சூடிய பாதுகைகளை எனக்கும் தருக. அந்தப் பாதுகைகளே எனக்கு மகுடம் ஆக வேண்டும்' என்று கூறுகின்றான். "இளையவர் கவித்த மோலி என்னையும் கவித்தி' என்கின்றான். இங்கே இளையவன் என்பது பரதனே!  பரதனின் அன்பை  ஒத்தது வீடணன் அன்பும். 

இத்தகைய அதீத அன்பினால் ஒளிர்கின்ற வீடணனைப் பார்த்து "அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்' என்கின்றான் இராமபிரான். இந்த அமுதமொத்த வாக்கைக் கேட்டவுடன் "இந்த நாயேனையும் உடன் பிறந்தவன் ஆக்கிய இறைவா! நாயேன் அடிமையிற் சிறந்தேன்' என்கின்றான். பிறகு ராமபிரானின் திருவடிகள் தாங்குகின்ற  பாதுகைகளைத் தன் மகுடமாக சூடிக் கொள்கிறான். இக்காட்சியைக் கண்டு அமரர்கள் மலர்மழை பொழிகின்றனர்.

"உன்னைக் கொண்டு என்னில் வைத்தேன், என்னையும் உன்னில் இட்டேன்' என்று பெரியாழ்வார் பாடியதற்கு ஒப்ப விபீடணன் இராமபிரானின் அகம் கவர்ந்த அன்பனாய் ஆனான். சீதாபிராட்டியை மீட்டெடுக்க உற்ற துணையாக இருந்தான். பணிவு, பரிவு, பக்தி மூன்றிலும் சிறந்தவன் வீடணன். ராமபிரானின் திருவடிகளைத் தாங்குகின்ற பாதுகைகளை மகுடமாக அணிந்தாலேயே பிராட்டி, வீடணனை "மின்னும் மெளலியன்' என்றே அழைக்கின்றாள்.

அயோத்தியில் இராமபிரானின் பட்டாபிஷேகம் முடிந்த பிறகு  இராமபிரான் வீடணனுக்கு விடை கொடுக்கின்ற காட்சி. "இந்த உலகிலே சான்றாண்மைக்கு எடுத்துக்காட்டு நீ. இந்த உலகம் உன்னையே நடுநிலையில் நின்றவன் என்று கூறும். உன்னைத் தவிர வேறு எவரும் இல்லை. இயங்கு பொருள்களும், இயங்காத பொருள்களும் உன்னையே நடுவுநிலைக்கு உகந்தவனாகக் கொண்டாடும்' என்கின்றான். "சராசரம் சுமந்த சால்பின் நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர், உளரேல்; ஐய' என்கின்றான் இராமன். 

"வீடணப் புலவர் கோமான், அகன் உற்ற காதல் அண்ணல்' என்று கம்பர் வர்ணிக்கின்றார். அன்பு என்ற ஒன்றின் தன்மையை அமரர்கள் அறிந்து கொண்டதே  வீடணன் ராமபிரானின் மேல் காட்டிய அன்பைக் கொண்டுதான் என்கின்றார் கம்பர்.

ஆக, தனது ஒப்பற்ற அன்பினாலும், அறத்தின் வழி நின்றதாலும் பக்தியை முழுமையாக வெளிப்படுத்தியவன் வீடணன். சரணாகதி தத்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியதோடு, அறத்தோடு வாழ வேண்டும் என்பதையும்  காட்டியவன்.

வைணவ சம்பிரதாயத்தில் கூறப்படுகின்ற பக்தியின் ஒன்பது நிலைகள்படி வாழ்ந்தவன் மட்டுமல்ல வீடணன்; அந்த ஒன்பது நிலைப்பாடுகளில் தன்னை இராமபிரானிடம் ஒப்படைத்தவன்.

எக்காலத்திலும் இலங்கை அரசின் மீதோ, பதவி மீது மோகம் கொண்டவன் அல்லன். ஆகவேதான் இராமபிரான் கூற்றுப்படி  "என்னை வணங்குகின்ற அவர்கள் எல்லாம் உன்னையும் பாராட்டுவர்' என்று சொல்லுகின்றார். சரணாகதிக்கு உள்ளங்கை நெல்லிக்கனி ஒப்ப எடுத்துக்காட்டாகத் திகழ்பவன் இந்த வீடணன்தான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.