தண்டபாணிப் பதிகம்

"நாடகத் தந்தை' என அழைக்கப்படுகின்ற தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளை நாடே அறியும்.
தண்டபாணிப் பதிகம்


"நாடகத் தந்தை' என அழைக்கப்படுகின்ற தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளை நாடே அறியும். ஆனால் அவர் அற்புதமான கவிஞர்  என்பதும், பழநி முருகன் மீது அவர் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார் என்பதும் சிலர் மட்டுமே அறிந்த செய்தி.

"ஞானப் பழத்தைப் பிழிந்து' என்று கணீர் குரலில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய பாடல் சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய பாடலே.  புகழ் பெற்ற அப்பாடலும், மேலும் ஒன்பது பாடல்களும் அடங்கிய "தண்டபாணிப் பதிகம்' சுவாமிகளின் முத்தமிழ்ப் புலமையையும், முருக பக்தியையும் ஒருசேர வெளிப்படுத்துகின்றது.

பிரணவத்தின் பொருளை தந்தைக்கே உபதேசம் செய்த சுவாமிநாதன் அல்லவா முருகப் பெருமான்? எனவே, அத்தகைய "ஞானப் பழத்தைப் பிழிந்து கொடுத்த குமரனுக்கு நாவில் இனிக்கும் இக்கனியைக் கொடுப்பதற்கு நாணியே தந்தையார் அதைத் தரவில்லை' என்று பாடும் சங்கரதாஸர் கவிநயமாக மேலும் கூறுகின்றார்...

ஒருகனி நீ தரவில்லை ஆயினும் என்றனுக்கு
உலகுதனில் கனியின் வகைகள்
உள்ளஎல்லாம் உரித்து ஒன்றாய்த் திரட்டிஉடன்
உயர்ந்த கற்கண்டு முதலாய்
வரும் மதுரமான எல்லாம் பிசைந்து அன்பர்தினம்
வந்துவந்து இடைவிடாமல்
வந்தனார்ச் சனைகளோடு அபிஷேகமும்செயும்
வண்மையைப் பாராய்!

பரமன், முருகனுக்கு ஒரு பழம் தரவில்லை. ஆனால், பக்தர்கள் அதற்குப் பதிலாக அனைத்துக் கனிவகைகளையும் உரித்துத் திரட்டி பஞ்சாமிருத அபிஷேகம் படைக்கிறார்கள் என்று சாதுர்யமாக சங்கரதாஸர் பாடுவது, பஞ்சாமிருதத்தைவிட அதிகம் இனிக்கிறது 

அல்லவா?

பதிகத்தில் மேலும் ஒரு கற்பனை நலம் பெருக்கிய அற்புதக் கவிதையைப் பார்ப்போம். பழநிமலை முருகா! உன்னைப் பெற்றெடுத்த தாயாரோ இமவானின் புதல்வி; குபேரனை உயிர் நண்பனாய்க் கொண்ட பரமேஸ்வரனின் புதல்வன் நீ; உன் தாய் மாமன்தான் திருமாலான கண்ண பெருமான்; செல்வம் பொழியும் ஸ்ரீதேவி உன் மாமி; தேவேந்திரனின் திருச்செல்விதான் உன் மனைவி; இத்தனை பேரும் கொண்டாடும் பெரும் செல்வம் பெற்ற நீ, கோவணப் பண்டாரமாக பழநியில் ஏன் காட்சி தருகின்றாய்? என்கிறார்.

பொன்மயக் கிரிபெற்ற புதல்வியோ அன்னையாம்
பொருளுக்கோர் அதிபதிஎனும்
புட்பக விமானத்தனைத் தோழனாய்க் கொண்ட
புரவலனும் உன்தந் தையாம்!
கன் மலைக்குடைகொண்டு மழை தடுத்தன்று நிரை
காத்தவொரு கடல் வண்ணனே
கருதுதாய் மாமனாம்! கனகம் ஏந்திடும்
கமலமாது உன் மாமியாம்!
பன்மலர் தொடைசூடி மூவுலகும் ஆள்பவன்
பார்க்கிலொரு பெண்தந்தவன்!
பாரிலிப் பெருஞ்செல்வம் உற்றும்நீ கோவணப்
பண்டாரமாய் வருவதேன்?
ஜன்மவெப்புப் பிணியகற்றும் உயர் சஞ்சீவி
தழையவரு பழநி மலையில்
சகல உலகினரும் அடிபரவவொரு பொருளுதவு
தண்டபாணித் தெய்வமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com