இந்த வாரம் கலாரசிகன் - (25-12-2022)

சென்ற ஆண்டுக்கான தமிழக அரசின் "தமிழ்ச் செம்மல்' விருது 38 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர்களுக்கான விருதும் 10 பேருக்கு முதல்வரால் வழங்கப்பட்டது.
இந்த வாரம் கலாரசிகன் - (25-12-2022)
Updated on
3 min read

சென்ற ஆண்டுக்கான தமிழக அரசின் "தமிழ்ச் செம்மல்' விருது 38 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர்களுக்கான விருதும் 10 பேருக்கு முதல்வரால் வழங்கப்பட்டது. அரசியல் சார்பில்லாத, தகுதிவாய்ந்த தமிழறிஞர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கியிருப்பதற்கு தமிழக அரசுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

குறிப்பாக, திருவாரூர் இரெ. சண்முகவடிவேல், தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலாளர் பெரியவர் ஆ. சிவராமகிருஷ்ணன், கரூர் கடவூர் மணிமாறன் போன்றவர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பட்டிமன்றப் பேச்சாளராக நகைச்சுவையுடன் இலக்கிய நயத்தைக் குழைத்துக் கொடுக்கும் வித்தகம் சண்முகவடிவேல் ஐயாவின் தனிச்சிறப்பு. தமிழாசிரியர் பணியில் பல ஆளுமைகளை உருவாக்கிய ஆளுமை அவர்.

தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலாளர் ஆ. சிவராமகிருஷ்ணன் ஐயாவைப் பற்றி நான் சொல்லியா தெரிய வேண்டும்? தமிழகத்தின் மிகப் பழைமையான இலக்கிய அமைப்பை இன்றுவரை எத்தனையோ இடர்களை எதிர்கொண்டு நடத்தி வருபவர் அவர். அவரால் அடையாளம் காணப்பட்டு இன்று இலக்கிய மேடைகளில் வலம் வரும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பலர்.

இந்த முறை 2021-ஆம் ஆண்டுக்கான "தமிழ்ச் செம்மல்' விருது வழங்கப்பட்ட ஒவ்வொருவர் குறித்தும் இதுபோல அவர்களது சிறப்புகளை எடுத்து இயம்ப முடியும். விருது வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் விருதாளர்களைத் தேர்ந்தெடுத்த தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் இரா. செல்வராஜ், இயக்குநர் ந. அருள் ஆகியோருக்கும் "தினமணி' வாசகர்கள் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் நன்றி!

--------------------------------------------------------------------

வாரணாசியில் நடந்த "காசி தமிழ்ச் சங்கமம்' நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்கிற ஆசை எனக்கு நிறையவே இருந்தது. நான் வாரணாசிக்குப் போய் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இப்போது காசி எப்படி இருக்கிறது என்று பார்க்கும் ஆவல் ஒருபுறம்; காசியில் தமிழ் ஒலிக்கிறது என்கிறார்களே, அதைக் காதாரக் கேட்டு மகிழ வேண்டும் என்கிற ஆர்வம் இன்னொருபுறம்.


அழைப்பில்லாமல் அங்கே போனால், தங்க இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற அச்சத்தில் எனது ஆசைக்கு அணை போட்டு வைத்திருந்தேன். எட்டயபுரம் பாரதியார் பிறந்தநாள் விழாவுக்குப் போய்விட்டு விமானத்தில் சென்னை திரும்பினேன். விமான நிலையத்தில், கோவையிலிருந்து வந்திறங்கிய செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனைச் சந்தித்தேன்.

காசி தமிழ்ச் சங்கமத்துக்குப் போகவில்லை என்று நான் சொன்னபோது, தமிழக அரசு சார்பில் அங்கு பாரதியார் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டிருப்பதைப் பார்க்க வேண்டாமா என்கிற கேள்வியை எழுப்பினார். அவரே நேரில் சென்று அதை மேற்பார்வை செய்து புதுப்பித்த விவரங்களைத் தெரிவித்தார். இயக்குநர் ஜெயசீலனும் எனது ஆர்வத்தை அதிகரிப்பதுபோலத் தொலைபேசியில் பேசிய பிறகு எனக்கு சென்னையில் இருப்புக் கொள்ளவில்லை.

அறநிலையத் துறையின் உயர்நிலைக் குழு உறுப்பினர் தரணிபதி ராஜ்குமார், ஜவுளித்துறை தொடர்பான மாநாட்டுக்காக வாரணாசி செல்லப்போவதாகச் சொன்னபோது, நானும் கிளம்பிவிட்டேன். வாரணாசியில் தங்குவதற்கு அவர் ஏற்பாடு செய்தார். 

வாரணாசித் தெருக்களில் எல்லாம் "வணக்கம் காசி', "வணக்கம் தமிழகம்' என்று ஹிந்தியிலும், தமிழிலும் பதாகைகளைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. காசி தமிழ்ச் சங்கமத்திற்குப் பின்னால் அரசியல் இருந்திருக்கலாம். ஆனால், அந்த நிகழ்வின் பின்னால், பாரதியார் கண்ட கனவு நனவாக்கப்பட வேண்டும் என்கிற முனைப்பு தெரிந்தது.

தமிழகத்தின் கரகாட்டம், மயிலாட்டத்தில் தொடங்கி, நமது கலாசாரப் பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டன. பாரம்பரிய விளையாட்டுகளையும், கலைகளையும் ஹிந்தி பேசும் அந்த மக்கள் பலர் கண்டு களித்தனர் என்பது நான் நேரில் பார்த்த உண்மை. அது மட்டுமல்ல, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பலர், நமது தமிழ் இலக்கியங்கள் குறித்தும், வள்ளுவர், பாரதியார் குறித்தும் ஹிந்தியில் பேசியதைக் கேட்டபோது நான் வாய்பிளந்து ரசித்தேன்.

மத்திய அரசின் பின்புலத்தில் காசி தமிழ்ச் சங்கமம் சிறப்பாக நடந்தது இருக்கட்டும். நமது தமிழக அரசின் சார்பில், ஏனைய மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு மாநிலங்களில் இதுபோல சங்கமங்களை நாம் நடத்த வேண்டும்; அதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் தமிழின் பெருமையும், தமிழகத்தின் அருமையும் பரவும் வகை செய்தல் வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

தமிழக அரசு புதுப்பித்திருந்த பாரதியார் வாழ்ந்த இல்லத்துக்குச் சென்றேன். அங்கே வாழ்ந்து வரும் பாரதியாரின் சகோதரி மகனான 96 வயது பெரியவர் கிருஷ்ணனை சந்திக்கும் வாய்ப்பும் பெற்றேன். 

மனதில் ஓர் ஆசை எழுந்திருக்கிறது. காசி பல்கலைக்கழகம், காசி தமிழ்ச் சங்கம், தில்லி தமிழ்ச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து காசியில் "பாரதியார் சங்கமம்' ஒன்றை இரண்டு நாள் கருத்தரங்காக நடத்த வேண்டும் என்பதுதான் அது. தில்லி தமிழ்ச் சங்க தலைவர் சக்தி பெருமாளும், செயலாளர் முகுந்தனும் என்னை வழிமொழிகிறார்கள்.

--------------------------------------------------------------------

மிகப்பெரிய தலைவர்கள், தியாகிகள் சுதந்திர இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மறக்கப்பட்டு விட்டனர். 1926 குவாஹாட்டி அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் நம்ம ஊர் எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார். அகில இந்திய காங்கிரஸ் தலைவரான அவருடைய நண்பர்கள் "தீரர்' சத்தியமூர்த்தி, திரு.வி.க., முத்துரங்க முதலியார், சாமி வெங்கடாசலம் செட்டியார், ஜனாப் ஹமீத்கான், ஜனாப் ஷாபி மகமத் உள்ளிட்டோர்.

ஸ்ரீநிவாச அய்யங்காரின் மகள் எஸ். அம்புஜம்மாளும் சுதந்திரப் போராட்டத் தியாகிதான். அண்ணல் காந்தியடிகள் சென்னை வந்தபோது அவர்கள் வீட்டில்தான் தங்கி இருந்தார். அதனால், மகாத்மாவுடன் சிறுமியாகப் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. காந்தியடிகள் குறித்து அவர் புத்தகமும் எழுதி இருக்கிறார்.

அம்புஜம்மாள் தனது தந்தையார் ஸ்ரீநிவாச அய்யங்கார் குறித்து ஒரு புத்தகம் எழுதினார். "தினமணி' காரியாலயம் இரண்டு பதிப்புகள் வெளியிட்டது. அதற்குப் பிறகு சில ஆண்டுகளுக்குப் பின் தி.நகரிலிருந்து மல்லிகைப் பதிப்பகம் 1963-இல் அதன் மறுமதிப்பை வெளியிட்டது. அந்தப் புத்தகம் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. 

84 பக்கங்கள்தான். ஆனால், என்னவொரு சுவாரஸ்யமான, அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டும் வரலாற்றுக் குறிப்புகள் என்று என்னை மலைக்க வைத்தது "என் தந்தையார்' என்கிற அந்தப் புத்தகம்.

காங்கிரஸ் தலைவராக குவாஹாட்டி காங்கிரஸில் ஸ்ரீநிவாச அய்யங்கார் ஆற்றிய உரையில் காணப்படும் தீண்டாமை, வகுப்புவாதமும் தேசியமும், அரசியலும் மதமும் குறித்த கருத்துகளை அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அன்றைய அரசியல் தலைவர்களுக்கும், குறுகிய அரசியல் கண்ணோட்டமுடைய இன்றைய அரசியல்வாதிகளுக்கும் இடையேயான வேறுபாட்டை உணர முடியும்.

"இனிய நந்தவனம்' வெளியிடும் "தூண்டில்' ஹைக்கூ இதழில் வெளியாகி இருக்கிறது மாமல்லபுரம் கு. கஜபதி எழுதியிருக்கும் இந்த ஹைக்கூ -
அழுது கொண்டே
பயணிக்கிறது
மாட்டு வண்டியில்
ஆற்று மணல்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com