களவு காலத்தில் தலைவனின் வருகையில் சிலவேளை இடையீடு பட்டுவிட்டால் தலைவி மிகவும் வருந்துவாள். தன்னை விரும்பும் தலைவன், தன்னைக் களவில் கண்டு கூடியதில்லை என்று ஒருவேளை பொய்யாகச் சூளுரைத்துவிட்டால் என்ன செய்வது? அப்பொழுது சாட்சிக்கு யாரை அழைப்பது? என்ற மனக்கலக்கம் தலைவியிடம் ஏற்படுவதுண்டு.
இவ்வாறு வருந்தும் தலைவி ஒருத்தியின் மனநிலையைக் கபிலர் (குறுந்.25) எடுத்துரைக்கின்றார். இவ்வாறு தலைவன் பொய்ச் சூள் உரைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டால், அது இரங்கத்தக்கதாகி
விடும். தனக்கும் தலைவனுக்கும் இடையேயான களவினை ஊரார் அறிந்துவிட்டால் எழக்கூடிய "அலர்' மற்றும் "அம்பல்' தூற்றுதலுக்கு அஞ்சும் தலைவியின் "பெண் தன்மை'யைத் தலைவன் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்பொழுது, தலைவியின் நிலை இரங்கத்தக்கதாகிவிடும்.
ஏதோ காரணத்தால் தலைவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள மறுக்கும்பொழுது, தலைவி தனக்குரியோரிடம் அதனைத் தெரிவிப்பாள். பின்பு, அவ்வூரிலுள்ள சான்றோரின் முன்னிலையில் அவ்வழக்கு விசாரணை நடைபெறும். தலைவனது கூற்று "பொய்' என்று நிரூபிக்கப்பட்டால், அவனுக்குரிய தண்டனை அச்சபையினரால் உடனே வழங்கப்படும். அந்தத் தண்டனை என்ன என்பதை மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன்மள்ளனார் பாடல் (அகநா.258) கூறுகிறது.
தலைவன் ஒருவன் தனது இல்லத்தில் தன் மனைவியுடன் உறைந்திருந்து மகிழ்வதைத் தவிர்த்து, பரத்தையர் சேரி சென்று தங்கிவிட்டுப் பின்பு தனது இல்லத்திற்குத் திரும்புகிறான். இதனையறிந்த தலைவி, தலைவனின் மீது சினம் கொள்கிறாள். வீட்டினுள் நுழையாதவாறு அவன் தடுக்கப்படுகிறான்.
அப்பொழுது தோழி பின்வருமாறு கூறுகிறாள்:
"தலைவனே! நீ பொய் கூறாதே! உன்னுடைய வஞ்சனையை நான் அறிவேன். உனது பரத்தைமைச் செயல் வெளிப்பட்டமையை நீ அறியவில்லை. நேற்றைய தினம், மையுண்ட அழகிய கண்களையுடைய பரத்தையுடன் வையையாற்றுப் புதிய நீரில் ஆடி நீ மகிழ்ச்சியுடன் இருந்தாய். ஊரார் இதனை அறிந்துவிடாமல் பரத்தையர் கூட்டம் மறைத்தாலும், மறைக்க முடியாமல் அலராகிவிட்டது. அதாவது, ஊர் சிரித்துவிட்டது. அது எப்படியிருந்தது தெரியுமா?' என மேலும் அவள் தொடர்ந்து கூறுகிறாள். இக்கூற்றுத்தான் அத்தண்டனை குறித்துக் கூறுகிறது.
"கள்ளூர்' என்றோர் ஊர் இருந்தது. அங்கு அறமற்ற இளைஞன் ஒருவன், இளைய பெண் ஒருத்தியைக் காதலித்தான். பின்பு அவளது அழகினையும் கவர்ந்து கொண்டுவிட்டான். ஆனால், பிந்தைய ஒரு நாளில் "நான் இவளைப் பார்த்தறியேன்' என்று சூளுரைத்தான். இந்தச் சூளுரையானது "பொய்' என்பது, அவ்விருவரின் களவு கூட்டத்தை அறிந்த சான்றோர் சிலரால் நிரூபிக்கப்படுகிறது. ஆதலால், அவர்கள் இரங்கத்தக்க அத்தலைவிக்கு சாதகமாக சாட்சி கூறுகின்றனர். ஏமாற்றும் அவனைத் தண்டிக்கவும் முடிவெடுக்கின்றனர்.
உடனே, அந்த ஊர்ச் சபையினர், காதலித்துக் கைவிட்டுப் பொய் கூறிய அந்த இளைஞனை, நன்கு தழைத்த பெரிய மரமொன்றின் தாழ்ந்த கிளைகளின் நடுவே வைத்து இறுகப் பிணித்தனர். பின்பு, அவனது தலையில் நீறு - அதாவது வெண்சாம்பலைப் பெரிய அளவில் தூவினர். இவ்வாறு அந்த இளைஞன் பெற்ற தண்டனையைப் பார்த்த அங்குக் கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். அவர்கள் செய்த அந்த ஆரவாரத்தைவிடப் பெரியதாயிற்று உன் பொருட்டு எழுந்த அலர்' என்கிறாள் தோழி. சுவையான அப்பாடலில் குறிப்பிடத்தக்க பகுதி இதுதான்:
"பொய்யாய் அறிவெனின் மாயம் அதுவே
கையகப் பட்டமை அறியாய் நெருநை
மையெழில் உண்கண் மடந்தையொரு வையை
ஏர்தரு புதுப்புனல் உரிதினி னுகர்ந்து
பரத்தை யாயங் கரப்பவும் ஒல்லாது
கவ்வை யாகின்றாற் பெரிதே காண்டகத்
தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்
கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருவதற் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனி லாளன் அறியேன் என்ற
திறனில் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே'
முற்காலத்தில் பெரிய பெரிய குற்றங்களின் தீர்வுக்கென அரசவைக்குச் செல்ல வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், இதுபோன்ற ஊரளவிலான காதலித்தல் தொடர்பான குற்றங்கள் அந்தந்த ஊரிலுள்ள அவையத்தாரால் விசாரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய தண்டனைகள் அவர்களாலேயே வழங்கப்பட்டு வந்தன என்பதை அறிய முடிகிறது.
காலந்தோறும் காதல் விவகாரத்தில் ஆண்களே பொய் கூறியும், ஏமாற்றியும் வந்திருக்கின்றனர் என்பதை அறியும்போது சற்று வருத்தமாகவும் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 05-04-2026

பகல் கனவு பலிக்காது!

பொய்யடிமை இல்லாத புலவர்

ஆனந்தரங்கரும் பாவேந்தரும்...
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


