மன்னருக்குப் பெண் கொடுக்க மாட்டோம்!

தாம் பெற்ற பெண், தங்களைவிட உயர்ந்த இடத்திலே வாழச் சென்றால் பெற்றோர் மிகவும் மனம் மகிழ்வார்கள்.
மன்னருக்குப் பெண் கொடுக்க மாட்டோம்!
Updated on
2 min read

தாம் பெற்ற பெண், தங்களைவிட உயர்ந்த இடத்திலே வாழச் சென்றால் பெற்றோர் மிகவும் மனம் மகிழ்வார்கள். வசதியான குடும்பத்திலே, கௌரவமான குடும்பத்திலே புகழ் பொருந்திய குடும்பத்திலேயிருந்து ஏழைக் குடும்பத்திலுள்ள பெண்ணைச் சீதனம் இல்லாமல் திருமணம் செய்ய பெண்கேட்டு வந்தால், ஏழைப் பெற்றோர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதிலும் அதிகாரம் பொருந்திய அரச குடும்பத்திலே இருந்து வேடுவக் குடும்பத்திலே பெண் கேட்டு வந்தால் அந்த வேடுவக் குடும்பத்திற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

மகள் அரச குடும்பத்திலே வாழ்க்கைப்பட்டு மகாராணியாக வாழ்வதை எந்தப் பெற்றோர்தான் விரும்ப மாட்டார்கள்? ஆனால்,  "கற்பனைக் களஞ்சியம்' சிவப்பிரகாச சுவாமிகளின் "திருவெங்கைக் கலம்ப'கத்திலே வரும் வேடுவன் ஒருவன் தன் மகளை, அரசனுக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்பவில்லை என்பது வியப்பான செய்திதானே!

அரசன் ஒருவன், வேடுவன் ஒருவனின் மகளை மணம் செய்ய விரும்பி, தூதுவனிடம் தனது ஆசையை வெளிப்படுத்தும் ஓலையைக் கொடுத்தனுப்பினான்.

ஓலையைப் படித்த வேடுவனுக்குப் பெருங் கோபம் வந்துவிட்டது. "வேடுவக் குலத்தில் பெண் எடுக்க அரச குலத்தில் பிறந்தவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது' எனச் சீறிச் சினந்தான்.

தமது குலப் பெருமையையும், மன்னர்களின் சிறுமையையும், தனது எண்ணத்தையும் அவன் வெளிப்படுத்துவதாக அமைந்த பாடல் இது:

"விற்றதார் கலை பாதியோடு       
     வனத்திலே அழவிட்டதார்
வெஞ்சிறை புக விட்டதார் 
        துகில் உரியவிட்டு விழித்ததார்
உற்றதாரமும் வேண்டும் என்றினி 
      மன்னர் பெண்கொளல் ஒண்ணுமோ!
உமிழடா! மணமென்ற வாய்கிழித்து
     ஓலை காற்றில் உருட்டடா!
வெற்றியாகிய முத்தி தந்தருள்
     வெங்கை மாநகர் வேடர்யாம்
விமலரானவர் எமையடுத்து இனிது
       எங்கண் மிச்சில் மிசைந்தபின்
பெற்றவேலர் தமக்கு யாமொரு
        பெண் வளர்ப்பினில் ஈந்தனம்
பெற்றபிள்ளை கொடுப்பரோ! ஈதென்
       பேய் பிடித்திடு தூதரே!                           
(திருவெங்கைக் கலம்பகம்: 101)

மனைவியாகிய சந்திரமதியை விற்றவன் அரிச்சந்திரன் என்னும்  அரசன்; பாதிச் சேலையோடு, காட்டிலே காரிருளிலே தமயந்தியாகிய தனது மனைவியைத் தனித்துத் தவித்து அழவிட்டவன் நளன் என்னும் மன்னன்; சீதையை அசோக வனத்திலே சிறையிருக்கும்படி விட்டவன் மன்னர் குலத்து இராமன்; தன் மனைவியின் துகிலை மன்னர் நிறைந்த சபையிலே மாற்றான் ஒருவன் களையும்போது, அவளைக் கைவிட்டுச் செய்வதறியாது விழிபிதுங்க இருந்தவர்களும் பஞ்சபாண்டவர்களாகிய மன்னர்களே; தங்கள் மனைவியரைப் பாதுகாக்க முடியாத மன்னர்களுக்கு யாராவது இனியும் பெண் கொடுப்பார்களா? எந்த மன்னனுக்கும், தனக்குப் பெண் தரும்படி யாரிடமாவது கேட்பதற்கு யோக்கியதை இருக்கின்றதா?

"மணம்' என்ற சொல்லை உச்சரித்த வாய் எச்சிலை உமிழ்ந்துவிட்டு மறு பேச்சுப் பேசு. நீ கொண்டு வந்த ஓலையைக் கிழித்து, காற்றிலே பறக்க விடு' என்றெல்லாம் சொல்லிவிட்டு இறுதியாக அந்த வேடன் சொல்கிறான். "எங்கள் தகுதி என்னவென்று உங்கள் மன்னனுக்குத் தெரியுமா? அதைச் சொல்கிறேன் கேள். கேட்டுச் சென்று அவனிடம் சொல்.

கடவுளாகிய சிவபெருமானே எங்களிடம் வந்து மகிழ்வோடு எங்களின் கண்ணப்ப நாயனார் சுவை பார்த்துக் கொடுத்த எச்சில் உணவை  உண்டவர். போனால் போகிறதென்று, அவர் பெற்றெடுத்த முருகனுக்கு  நாங்கள் வளர்த்த பெண்ணான வள்ளியை மணம் முடித்து வைத்தோம். அப்படிப்பட்ட நாங்கள் பெற்றெடுத்த பிள்ளையைக் கொடுப்போமா?  உனக்கென்ன பேயா பிடித்திருக்கிறது?' எனத் தூதுவனை வேடுவத் தலைவன் துரத்தினான் என சிவப்பிரகாச சுவாமிகள் கற்பனை நயம் பொங்கப் பாடியிருக்கிறார்.

ஆனானப்பட்ட முருகப் பெருமானுக்கே, எங்கள் குல தெய்வமான முருகப் பெருமானுக்கே வளர்த்த பெண்ணைத்தான் கொடுத்தோம். அப்படியிருக்க பெற்ற பெண்ணை, கேவலம் மன்னருக்குக் கொடுப்போமா? பெண் கேட்டுத் தூதனுப்பிய மன்னனுக்கு மட்டுமல்ல, தூதர்களாகிய உங்களுக்கும் பேய்தான் பிடித்திருக்கின்றது. இல்லையென்றால் இப்படிப் பெண் கேட்டு ஓலை கொண்டு வந்திருப்பீர்களா?' என்று தூதுவனை கோபத்தோடு துரத்தினானாம் வேடுவர் தலைவன். 

"கற்பனைக் களஞ்சியம்' சிவப்பிரகாச சுவாமிகளின் இந்தக் கற்பனை உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறதல்லவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com