

கொடி வகையைச் சார்ந்த தாவரமான குன்றிமணி மரங்களில் படரக்கூடியது. அதன் பூ சிறிய மணமுடன் பூங்கொத்தில் இருப்பதால், அதனை "குறுநறுங்கண்ணி' என்று கபிலர் எடுத்து இயம்புகிறார் (குறிஞ்சிப்பாட்டு.72) . அதன் பூ நீல நிறத்தில் வரிகளுடன் கொத்துகளாகக் காணப்படுவதை, "மணிப்பொறிக் குரலங் குன்றி' என்று புறநானூறு காட்சிப்படுத்தியுள்ளது (340: 1, 2).
மலர்ந்த பூ, காயாகி முற்றிக் கொத்தில் வெடித்த நிலையில் விதை கீழே விழாமல் ஒட்டிக் கொண்டு இருக்கும். கீழே விழுந்த விதை தரையெங்கும் பரவியும் கிடக்கும்.
அவ்விதைக்குக் குன்றி (குறள்: 965) குன்றிவித்து (கந்தபுராணம்) என்று இலக்கியங்களிலும் குண்டுமணி (சோழ நாடு), குன்னிமுத்து (நாஞ்சில் நாடு) என்று வட்டார வழக்குகளிலும் வேறுபெயர்கள் வழங்குகின்றன. அவ்விதையில் நச்சுத் தன்மை இருப்பதால் அது "நஞ்சி' என்னும் பெயரையும்
பெற்றுள்ளது.
குன்றிமணி சிறியதாக இருக்கும். அதன் அளவு குறித்துப் புறநானூற்றில், "சிறிது, குன்றின் கொள்வல்' (புறநானூறு: 159: 24, 25) என்னும் பாடலடிகள் சிறிதாகிய குன்றிமணியின் அளவை உடையதாயினும் அதனைப் பெற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளன.
இது தங்கத்தை நிறுத்தலில் எடைக்கல்லாகப் பயன்பட்டுள்ளது. ஒரு குன்றிமணி நான்கு நெல் அல்லது அரை மஞ்சாடி அளவு கொண்டதாகும். இன்றளவும் தங்கம் வைத்திருந்தவர் வீட்டில் அது இல்லாத நிலையில், "குண்டுமணி அளவுக் கூட தங்கம் இல்லை' என்று சொல்வதைக் காணமுடியும்.
குன்றிமணியின் நிறம் பளபளப்புடன் முக்கால் பகுதி சிவப்பாகவும் அதன் ஒரு பகுதியின் நுனிக் கறுப்பாகவும் இருக்கும். திருவள்ளுவர், "புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி, மூக்கிற் கரியா ருடைத்து' என்னும் குறட்பாவில் (277) வெளித் தோற்றத்தில் குன்றிமணியைப் போலச் செம்மையாக இருப்பவர்களில் சிலர் அக்குன்றிமணியின் மூக்கில் கறுப்பு இருப்பது போல உள்ளத்தில் கறுமை எண்ணங் கொண்டவர்களும் இருப்பர் என்று அதன் நிறத்தை உவமை ஆக்கியுள்ளார்.
அதன் நிறம் என்றும் மாறாமல் இருக்கும் என்பதை, "குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் போகுமா' என்று பழமொழி உணர்த்துகிறது. அதன் அழகினைக் கண்ட முன்னோர்கள் அதனைச் சேமித்து வைத்திருந்ததை, "அகற்பெய் குன்றி' என்று புறநானூறு (300: 4) கூறுகிறது.
அக்குன்றிமணியைப் பெண்கள் மாலையாகக் கோத்துக் கழுத்தில் அணிந்துள்ளனர். இதனை, "முலைமுகத்திற் குன்றிமணி வடம்பூண்டு' என்று திருக்குற்றாலக் குறவஞ்சி (41) குறிப்பிடுகிறது.
உடலில் முக்கிய உறுப்புகளுள் ஒன்றாக இருக்கக்கூடியது விழியாகும். அவ்வுறுப்புக்கு உவமையாகக் குன்றிமணியைக் கூறுவதுமுண்டு.
இதனைக், "குன்றின் யன்ன கண்ண' என்று அகநானூறு (133:1) பாடலடி எடுத்து இயம்புகிறது. சிலருக்குக் கோபத்தினால் விழிகள் சிவக்கும். அச்சிவப்பு நிற விழிகளுக்கு உவமையாகக் குன்றிமணியைக் கூறுவர். "குன்றிமணி போல்வ செங்கண்' (திருப்புகழ்: 45).
விழியைப் போலவே உள்ள குன்றிமணி களிமண்ணால் செய்த பொம்மைகளில் விழியாக இடம்பெறும்.
குறிப்பாகப் பிள்ளையார் சதுர்த்தியன்று களிமண்ணால் பிள்ளையார் செய்வோர் இரண்டு குன்றிமணிகளை எடுத்துப் பிள்ளையாரின் விழிகளில் பதித்து விடுவர். அந்த விழிகள் குன்றிமணி போல் அல்லாமல் ஒற்றுமையான வடிவமுடைய இரு விழிகளாகவே காட்சி அளிக்கும்.
பிள்ளையாரின் கண்களில் சிவந்த இடத்தைச் சுற்றிக் கறுமையாகக் குன்றிமணி இருப்பதைப் பார்க்கும்பொழுது உயிர்ப்புத் தன்மையையும் அழகையும் காணமுடியும்.
பளபளப்புடைய ஒளி, செம்மையோடு இருக்கும் கறுமை நிறம், சிறிய வடிவம் ஆகியவற்றால் குன்றிமணி விழிகளாகவே பிள்ளையாரிடம் காட்சி தருவது வியப்பை ஏற்படுத்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திரிணமூல் காங்கிரஸில் நீக்கப்பட்ட எம்எல்ஏ புதிய கட்சி தொடங்கினாா் - 182 தொகுதிகளில் போட்டி
இந்தித் திணிப்புக்கு எதிராக போராடிய சிவா திலீபன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

இன்று அனுகூலம் யாருக்கு? தினப்பலன்கள்!

ஜனநாயகம் தடுமாறும்போது...
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

