பாரதி ஆய்வுகளின் பிதாமகர்

ஆயிரத்து தொள்ளாயிரத்தி நாற்பதுகளில் ஒருநாள். அப்போது தொ.மு.சி. ரகுநாதன் "தினமணி' பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்தார்.
பாரதி ஆய்வுகளின் பிதாமகர்


ஆயிரத்து தொள்ளாயிரத்தி நாற்பதுகளில் ஒருநாள். அப்போது தொ.மு.சி. ரகுநாதன் "தினமணி' பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளியாகியிருந்தது. அத்தொகுப்பைப் படித்த எழுத்தாளர் புதுமைப்பித்தன், ரகுநாதனைக் காண வந்தார். அவரைக் கட்டித் தழுவிக் கொண்டு "நீதான் ஐயா என்னுடைய ஆள்' என்று பாராட்டினர். 
இந்நிகழ்ச்சி இருவரையும் இணைபிரியாத நண்பர்களாக மாற்றியது. கடைசி வரை ரகுநாதன் மீது புதுமைப்பித்தன் ஆழ்ந்த நட்பைக் கொண்டிருந்தார். ரகுநாதன் புதுமைப் பித்தனின் தீவிர ரசிகராக மாறினார். இந்த ரகுநாதனை இப்பொழுது நினைவுகூர வேண்டியது அவசியமாகிறது. காரணம், இந்த ஆண்டு அக். 20 அன்று அவர் பிறந்த நூற்றாண்டு தொடங்கியுள்ளது.
ரகுநாதன் திருநெல்வேலிக்காரர். 1923-ஆம் ஆண்டு பிறந்து 2001-ஆம் ஆண்டு மறைந்தார். ரகுநாதனின் குடும்பம் புலமைவாய்ந்த குடும்பம். அவரது பாட்டனார் தமிழ்ப்புலம் மிக்கவர்; தந்தையார் ஓவியர். ரகுநாதனின் தமையனார் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர். அவர் அக்காலத்தில "ஆனந்த விகடன்' இதழில் தென்னாட்டுக் கோயில்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றுக்கு ஓவியர் "சில்பி' அற்புதமாகப் படம் வரைந்திருந்தார். எனவே ரகுநாதனுக்கு இளமையிலேயே தமிழ் இலக்கியத்தின் மீதும்,  தமிழர் பண்பாட்டின் மீதும் ஈடுபாடு  ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டது. 
ரகுநாதன் நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் படித்தார். இவரை ஈர்த்த பேராசிரியர் அ. சீனிவாசராகவன். ரகுநாதன் கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை. காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறை சென்றார். பின்னர் அவர் இடதுசாரி சிந்தனையை நோக்கி நகர்ந்தார். அதன் விளைவாக தலைமறைவாகவும் இருந்திருக்கிறார். ப. ஜீவானந்தம், கே. பாலதண்டாயுதம் ஆகியோடுடன் நெருங்கிப் பழகியவர் ரகுநாதன். நெல்லையில் ரகுநாதன், பேராசிரியர் நா. வானமாமலை, தி.க. சிவசங்கரன் ஆகியோர் மிகப்பெரும் ஆளுமைகளாக இருந்தனர். 
ரகுநாதன் ஆரம்ப காலத்திலேயே பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளார். அவற்றில் "முல்லை' குறிப்பிடத்தக்கது. பிறகு நெல்லையில் இருந்துகொண்டு "சாந்தி' என்ற பத்திரிகையை நடத்தினார். அது குறுகிய காலமே வந்தது; பின் நின்றுவிட்டது. "சாந்தி'யில்தான் எழுத்தாளர் சுந்தர ராமசாமி அறிமுகமானார். 
தொ.மு. சி. ரகுநாதன் சிறுகதைகளும் எழுதி உள்ளார். அவர் எழுதிய சிறுகதை ஒன்று பிற்காலத்தில் விவாதத்திற்குரியதாக மாறியது. அந்தக் கதையில் பொதுவுடைமை இயக்கத் தலைவர் ஒருவர், தலைமறைவாக இருந்தபொழுது ஒரு தொழிலாளியின் வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறார். அவரைத்தேடி காவல்துறையினர் வந்துவிடுகின்றனர். வீட்டு வாசலில் அந்த வீட்டுப் பெண் தன்னுடைய குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருகிறாள். 
அவளுக்குத் தலைவரைக் காப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதன் விளைவாக அந்தக் குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்றுவிடு
கிறாள். காவல்துறையினர் செய்வதறியாமல் சென்று விடுகின்றனர். இப்படியெல்லாம் நடக்குமா என்ற விவாதம் அப்போது எழுந்தது. முதலில் இதனை நியாயப்படுத்திய ரகுநாதன், பின்னால் இது சரியல்ல என்பது போல் எழுதினார். இதுபோன்று பல அதிர்ச்சியூட்டும் கதைகளுக்குச் சொந்தக்காரர் அவர்.
ரகுநாதன், "முதல் இரவு', "கன்னிகா', "புயல்' ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். இவை உளவியல் வகை நாவல்கள். தனிநபர் உணர்வை மையப்படுத்தி எழுதப்பட்டவை. ஆனால் அதன் பின் 1952-இல் வெளிவந்த ரகுநாதனின் "பஞ்சும் பசியும்' என்ற நாவல் ரகுநாதன் என்ற படைப்பாளிக்கு வேறுமுகம் உண்டு என்பதைக் காட்டியது. இந்த நாவல் எழுதிய நேரத்தில் அவர் பொதுவுடைமை இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு மாக்ஸிம் கார்க்கி, மாயவோவ்ஸ்கி, ஹோலக்காவ் போன்ற படைப்பாளிகளைக் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 
ஆலைத் தொழிலாளர்கள் போராட்டமும், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டமும் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு பலத்த நெருக்கடிக்கு உள்ளான தொழில்களில் ஒன்று கைத்தறி நெசவுத் தொழில். இரண்டாவது உலகப் போர், உலக பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாகப் பல பொருள்கள் கிடைக்காமலே போய்விட்டன. ஆனால், அவை கள்ளச்சந்தையில் கிடைத்தன. 
இத்தகைய பாதிப்புக்கு உள்ளான கைத்தறி நெசவாளர்களின் பிரச்னையை மையமாகக் கொண்டுதான் ரகுநாதன் "பஞ்சும் பசியும்' என்கிற நாவலை எழுதினார். இந்த நாவல் காமில்ஸ்வலபில் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு செக் நாட்டில் வெளியிடப்பட்டு அங்கு 50,000 பிரதிகள் விற்பனை ஆயிற்று. 
இந்த நாவலில் தாதுலிங்கமுதலியார் என்ற பெரிய முதலாளி ஒருவரையும் கைலாச முதலியார் என்ற நடுத்தர முதலாளியையும் வடிவேலு முதலியார் என்கிற கைத்தறி உழைப்பாளியையும் ரகுநாதன் கதாபாத்திரங்களாக்கியிருந்தார். நூல் தட்டுப்பாடு காரணமாக நெசவாளிகளுக்கு வேலை இல்லாமல் போகிறது. கள்ளச்சந்தை முதலாளியான தாதுலிங்க முதலியாருக்கு இதனால் அதிக லாபம் கிட்டுகிறது. 
நடுத்தர முதலாளியான கைலாச முதலியார் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால் உழைக்கும் நெசவாளியான வடிவேலு முதலியார் சங்கம் ஒன்றை அமைத்து நியாயத்திற்காக மற்றவர்களோடு இணைந்துப் போராடுகிறார். 
இந்த நாவலின் களமான அம்பாசமுத்திரத்தின் தெருக்கள் வழியாக மிகப் பெரிய ஊர்வலம் செல்வதாகவும், தாமிரபரணியின் பிரவாகம் போல அந்த ஊர்வலம் பெரிதாகிக் கொண்டே செல்வதாகவும் நாவலின் இறுதியில் குறிப்பிட்டிருப்பார் ரகுநாதன். 
இது தமிழ்நாவல் வரலாற்றில் சோஷலிச யதார்த்தவாதம் என்ற போக்கினை ஆரம்பித்து வைத்தது. இந்தப் பாதையில்தான் பின்னால் பொன்னீலன், கு. சின்னப்ப பாரதி, டி. செல்வராஜ், சோலை சுந்தரபெருமாள், சுபாஷ்சந்திர போஸ், மேலாண்மை பொன்னுசாமி, கொ.மா. கோதண்டம் ஆகியோர் பயணித்தனர். 
ரகுநாதன் பல மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார். மாக்ஸிம் கார்க்கியின் "தாய்',  மாயவோவ்ஸ்கியின் "லெனின் கீதாஞ்சலி' ஆகியவை இவரது மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத்தக்கவை. "சோவியத் நாடு' இதழில் பணியாற்றியுள்ளார். புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். "திருச்சிற்றம்பலக் கவிராயர்' என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். 
1960-க்குப் பிறகு, ரகுநாதன் என்ற படைப்பாளி ஆய்வாளராக மாறினார். மகாகவி பாரதியின் படைப்புகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவரை "பாரதி ஆய்வுகளின் பிதாமகர்' எனலாம். "பாரதி: காலமும் கருத்தும்', "பாஞ்சாலி சபதம்: உட்பொருளும் மறைபொருளும்', "பாரதியும் ஷெல்லியும்', "கங்கையும் காவிரியும்', "இளங்கோவடிகள் யார்?' ஆகியவை இவரின் புகழ்பெற்ற ஆய்வு நூல்களாகும். பாரதி தீவிரவாத அரசியல் இயக்கத்தைச் சார்ந்தவர் என்பதை, "பாரதி: காலமும் கருத்தும்' நூலில் விளக்கியுள்ளார். 
தேசவிடுதலைப் போராட்டத்தின் தாக்கம் காரணமாக "பாஞ்சாலிசபதம்' எழுதப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். "ஒப்பியல் இலக்கியம்' என்ற ஓர் ஆய்வுத்துறை பல்கலைக்கழகங்களில் தோன்றுவதற்கு முன்னரே எழுதப்பட்ட நூல் இது. ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் கூட ஷெல்லியை ரகுநாதனைப் போல் நுணுக்கமாகக் கற்றிருப்பார்களா என்பது ஐயத்திற்குரியது. "இளங்கோவடிகள் யார்' எனும் நூல், "சிலப்பதிகாரம்' பற்றிய மரபுவழியான கருத்துப் படிமங்களைத் தகர்த்தெறிந்த நூலாகும். 
"சிலப்பதிகாரம் உண்மையில் வணிக வர்க்கத்தினருக்கும், அரச வர்க்கத்தினருக்கும் ஏற்பட்ட மோதலின் விளைவாக உருவான கதை ஆகும்; இளங்கோவடிகள் சேரன் தம்பியல்ல, வணிகர் குலத்தைச் சேர்ந்தவர்' என்றெல்லாம் குறிப்பிடும் ரகுராமன் அதற்கு ஏராளமான ஆதாரங்களையும் முன்வைத்துள்ளார். சுமார் 800 பக்கங்கள் கொண்ட இந்நூல் சிலப்பதிகாரம் பற்றி ஆய்வு செய்தவர்கள் கூட புறக்கணித்த நூல் ஆகும்.
தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய "பாரதி: காலமும் கருத்தும்' நூலுக்காக அவருக்கு இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. மேலும் அவர் சோவியத் நாட்டின் நேரு விருதையும் பெற்றுள்ளார்.
ரகுநாதன் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல, களப்பணியிலும் அவர் சிறந்து விளங்கினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தை ஜீவானந்தம் அமைத்த காலத்தில் - அவரோடு இணைந்து நின்றார். எட்டயபுரத்தில் பாரதி விழாவை நடத்துவதற்கு வழிகாட்டியாக இருந்தவர்களில் அவரும் ஒருவர். 
ஏராளமான கவியரங்கங்களிலும் பட்டிமன்றங்களிலும் அவர் பங்கேற்றிருக்கிறார். தன் இறுதிக் காலத்தில் திருவள்ளுவர் பற்றி ஒரு நூல் எழுதத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அது நிறைவேறாமல் போயிற்று. அவர் பயன்படுத்திய நூல்கள், அவருடைய கையெழுத்து பிரதிகள் ஆகியவை இன்றும் எட்டயபுரத்தில் உள்ள ரகுநாதன் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 
மெலிந்த உருவம்; சற்றே கறுத்த நிறம்; தூய வெள்ளை வேட்டி; வெள்ளை நிற ஜிப்பா; கறுப்புக் கண்ணாடி - இதுதான் தொ.மு.சி. ரகுநாதன். இத்தோற்றத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com