சமுதாய விரிசலை வெளிச்சம்போட்ட "கரிசல்'

எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய "கரிசல்' என்ற நாவல் தற்பொழுது ஆங்கில மொழிபெயர்ப்பாக வருகிறது. அவரது பெயர்த்தி பிரியதர்ஷினியால் அந்த நாவல் மொழிபெயர்க்கப்பட்டது அதைவிடச் சிறப்பு.
சமுதாய விரிசலை வெளிச்சம்போட்ட "கரிசல்'

எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய "கரிசல்' என்ற நாவல் தற்பொழுது ஆங்கில மொழிபெயர்ப்பாக வருகிறது. அவரது பெயர்த்தி பிரியதர்ஷினியால் அந்த நாவல் மொழிபெயர்க்கப்பட்டது அதைவிடச் சிறப்பு.
1976-ஆம் ஆண்டு இந்த நாவல் வெளிவந்தது. அப்போது பொன்னீலன் கல்வித் துறையில் பணியாற்றி வந்தார். அவர் பணியாற்றிய இடம் கோவில்பட்டியைச் சுற்றியுள்ள கரிசல் வட்டாரம். அவர் ஏற்கெனவே பல கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கின்றார். நெல்லையில் பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் நடத்தி வந்த நெல்லை ஆய்வுக்குழுவில் பங்கு பெற்றவராகவும் இருந்தார்.
பேராசிரியர் நா.வானமாமலை நடத்திவந்த "ஆராய்ச்சி' இதழில் ஒரு சில கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அதில் நடந்த பல விவாதங்களின் தாக்கம் அவருக்கு உண்டு. இந்தச் சூழலில்தான் அவர் இந்த நாவலை எழுதினார். இந்த விவாதங்களின் மறைமுகத் தாக்கம் அவர் வாழ்ந்த இடத்தின் சமுதாய அமைப்பின் நேரடித் தாக்கம் ஆகியன பொன்னீலனுக்கு உள்ளே மறைந்திருந்த எழுத்தாளனைத் தட்டி எழுப்பின எனலாம். ஏனென்றால் ஒரு படைப்பாளி உருவாகும்பொழுது பல சக்திகளின் தாக்கம் அவன் மீது ஏற்படும் என்பது இலக்கிய ஆர்வலர்களுக்குத் தெரியாததல்ல.
இந்த நாவல் நிகழும் இடம் பெருமாள்புரம் எனும் சிறு கிராமமாக இருந்தாலும், அதில் உள்ள நிகழ்ச்சிகள் பொதுத்தன்மை உள்ளவையாகும். அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தனி நிகழ்ச்சிகள் மூலமாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். 
பெருமாள்புரத்தில் உள்ள பெரும் பகுதி நிலத்திற்குச் சொந்தக்காரர் சர்க்கரைச்சாமி. இவருக்கு அடுத்த கட்டத்தில் சில சிறுசிறு விவசாயிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சர்க்கரைச்சாமியிடம் கடன்பட்டு அவரது சொற்களை மீற முடியாதவர்களாக இருந்தனர். பெரும்பாலோர் நிலமற்ற கூலி விவசாயிகள் ஆவர். இவர்கள் தங்கள் நிலை என்ன என்றே தெரியாதவர்கள். மரபுவழி சார்ந்த மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர்கள். 
இந்த நாவலில் ஒரு புதிய வெளிச்சம் தருவதாக வருபவர் கண்ணப்பன் என்ற ஆசிரியர். இவருடன் அதே ஊரைச் சேர்ந்த வீரையன் என்கிற பட்டாளத்துக்காரர் உள்ளிட்ட சிலர் இணைகின்றனர். சிதறிக் கிடக்கும் கூலி விவசாயிகளை ஒன்றாக இணைக்க கண்ணப்பன் ஒரு சங்கம் அமைக்கிறார். அந்த சங்கத்தின் மூலம் சர்க்கரைச்சாமிக்கு எதிர்ப்பு உருவாகிறது. கூலி உயர்விற்காக போராட்டம் நடைபெறுகிறது. 
சர்க்கரைச்சாமி அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவில்லை. காவல் துறையின் துணையுடன் கடும் அடக்குமுறையை ஏவிவிடுகிறார். பலர் தீயிலிட்டுப் பொசுக்கப்படுகின்றனர். பலர் கைது செய்யப்படுகின்றனர். 
போராட்டத்தின் வலிமை காரணமாக சர்க்கரைச்சாமியின் அதிகார அமைப்பு படிப்படியாக தகர்கிறது. இந்தப் போராட்டத்தின் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வு, சமுதாய தாக்கம் ஆகியவை பக்கத்து கிராமங்களுக்கும் பரவுகிறது. வருங்காலத்தில் ஒரு விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.
இந்த நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் ஒரு முக்கியப் போக்கான சோஷலிச எதார்த்தவாதம் என்ற வகையைச் சார்ந்தது. இதனைத் தொடங்கி வைத்தவர் தொ.மு. சிதம்பர ரகுநாதன். அவருடைய "பஞ்சும் பசியும்' இந்த வகையின் முதல் நாவலாகும் (1952). இந்தவகை இலக்கியவாதிகள் சமுதாயத்தின் வர்க்க அமைப்புகளை உள்வாங்கி உழைக்கும் வர்க்கத்தின் சார்பாக இலக்கியம் படைப்பவர்கள். இவர்கள் உழைக்கும் வர்க்கம் போராட்டத்தின் மூலம் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கினார்கள். இந்த வகையில் சின்னப்ப பாரதி, செல்வராஜ் ஆகியோர் பெரும் சாதனை படைத்துள்ளனர்.
இந்த நாவல் வெளிவந்த காலத்தில் விமர்சனங்கள் அதிகம் இருந்தன. ஆனால் கருத்தால் மாறுபட்டிருந்தாலும் சிட்டி, சிவபாத சுந்தரம் ஆகியோர் அவர்களது "தமிழ்நாவல்' என்ற புத்தகத்தில் இதற்கென்று ஒரு பக்கத்தை ஒதுக்கியுள்ளார்கள். 
இந்த நாவல் உண்மையிலேயே பரிசிற்கு உரிய நாவல்தான். இந்த நாவலின் எதார்த்தவாதப் போக்கை மறுப்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் இந்த நாவல் முன்வைக்கும் முறையானது இன்றைக்கு பல வடிவங்களில் வெளிப்படுகிறது. இது ஆங்கில மொழிபெயர்ப்பாக வெளிவருவது பாராட்டுக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com