இந்த வார கலாரசிகன் - 13-08-2023
சென்னைக் கம்பன் கழகம் அடுத்த ஆண்டு தனது பயணத்தில் அரை நூற்றாண்டை எட்ட இருக்கிறது.


சென்னைக் கம்பன் கழகம் அடுத்த ஆண்டு தனது பயணத்தில் அரை நூற்றாண்டை எட்ட இருக்கிறது. மாநிலத் தலைநகர் சென்னையின் முக்கியமான வருடாந்திர நிகழ்வுகளில் ஒன்றாகவே மாறிவிட்டிருக்கிறது கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா.
வெள்ளியன்று தொடங்கிய 49-ஆவது கம்பன் கழக விழாவின் தொடக்க உரையில் இளம்பிறை மணிமாறன் கூறியதுபோல, சென்னைக் கம்பன் கழகத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் இடையேயான உறவு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. நீதிபதிகள் எம்.எம். இஸ்மாயில், எஸ். மகராஜன் போன்றோர் இட்ட பாதையில் இப்போது நீதிபதிகள் வெ. இராமசுப்பிரமணியன், இரா. மகாதேவன், சுரேஷ் குமார் என்று அந்த "ரிலே ரேஸ்' (தொடர் ஓட்டம்) தொய்வின்றித் தொடர்கிறது.
இந்த ஆண்டு கம்பன் கழக விழாவில் நீதிபதி இரா. மகாதேவன் ஆற்றிய தலைமையுரை, கம்பனில் ஆழங்காற்பட்ட அறிஞர்களையே நிமிர்ந்து உட்கார்ந்து, ரசித்துக் கேட்க வைத்ததை என்னால் பார்க்க முடிந்தது. சமய இலக்கியங்களுடனும், குறளில் தொடங்கி அற நூல்களுடனும் கம்பனை ஒப்பிட்டுப் பலர் பேசி நான் கேட்டிருக்கிறேன். இத்துணை நுணுக்கமாகவும், விரிவாகவும் சங்க இலக்கியப் பாடல்களைக் கம்பகாதை எப்படி உள்ளடக்கி இருக்கிறது என்பதை நீதிபதி இரா. மகாதேவனின் உரையைக் கேட்ட பிறகுதான் (பாமரனான) நான் தெரிந்து கொண்டேன்.
இந்த ஆண்டு கம்பன் விழாவில் விருது பெற்றவர்களில் பேராசிரியர் தி. இராசகோபாலனும், கவிஞர் முத்துலிங்கமும், "சேக்கிழார் அடிப்பொடி' டி.என்.ஆரின் திருமகனார் டாக்டர் த.ரா. சுரேஷும் எனக்கு நெருக்கமானவர்கள். அப்படி இருக்கும்போது, நான் கலந்து கொள்ளாமல் இருந்துவிட முடியாது. நீதிபதி இரா. மகாதேவன் என்ன பேசப் போகிறார் என்கிற ஆர்வம் வேறு சேர்ந்து கொண்டபோது, இருப்புக் கொள்ளவில்லை. விழா நடக்கும் ராதாகிருஷ்ணன் சாலை ஏவி.எம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்துக்கு விரைந்துவிட்டேன். "நானும் வருகிறேன்' என்று இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசனும் இணைந்து கொண்டார்.
பெரியவர் சொ.சொ.மீ. சுந்தரத்தின் உரையைக் கேட்க முடியவில்லை. அவரை சந்தித்துப் பேசவும் முடியவில்லை. தலையங்கம் எழுதும் நேரம் என்பதால் கிளம்பிவிட்டேன். அது ஒன்றுதான் குறை.
கம்பன் விழாக்களின் நட்சத்திர நாயகர் என்று சொன்னால் அது இலங்கை ஜெயராஜ்தான். அவரது உரையைக் கேட்பதற்கு வெளியூர்களிலிருந்து ரசிகர்கள் வந்து கூடிவிடுகிறார்கள். மற்றொரு காந்த சக்தி முனைவர் தெ. ஞானசுந்தரம்.
முனைவர் மு. இராமச்சந்திரனில் தொடங்கி தமிழகத்தின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகள் அனைவரின் உரைகளையும் கேட்க வாய்ப்பளிக்கும் சென்னைக் கம்பன் கழகம், தொய்வில்லாமல் தொடர துணைத் தலைவர்கள் எஸ். ஜெகத்ரட்சகனும், "நல்லி' குப்புசாமி செட்டியாரும் களமிறங்கி இருக்கிறார்கள். அவர்கள் கங்கையும், யமுனையும் என்றால், பூமிக்குக் கீழே பாயும் "சரஸ்வதி' யார்? வேறு யார், திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்தான்!
இதுவரை பின்னணியில் இருந்து முன்னணி நாயகர்களை இயக்கிய எஸ்.பி.எம்., இப்போது சென்னைக் கம்பன் கழகத்திலும் அதே பாணியைக் கையாண்டு வருவதைப் பார்க்க முடிந்தது... ரசிக்க முடிந்தது... வியக்க முடிந்தது..!
--------------------------------------
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் நண்பருமான முனைவர் ம. இராசேந்திரன், சாகித்திய அகாதெமியின் "இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசைக்காக தான் எழுதி இருக்கும் "கலைஞர் மு. கருணாநிதி' புத்தகத்தை அனுப்பித் தந்திருக்கிறார். மற்றவர்கள் கலைஞர் மு. கருணாநிதியை அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பார்த்தவர்கள். ஆனால், முனைவர் ம. இராசேந்திரன், அவரின் அத்தனை பரிமாணங்களையும் அருகில் இருந்து பார்த்தவர்.
கலைஞர் மு. கருணாநிதி என்கிற ஆளுமையைக் கருத்தியல் ரீதியாக சிலர் எதிர்க்கலாம்; அரசியல் காரணங்களுக்காக விமர்சிக்கலாம்; அவரது செயல்பாடுகளில் தனிப்பட்ட முறையில் குற்றம் காணலாம்; ஆனால், எந்த ஒருவராலும் அவரைத் தவிர்த்துவிட முடியாது. தமிழக, தமிழின வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை அவர். தமிழை நேசித்த தமிழக முதல்வர்களில் முதன்மையானவர் கருணாநிதி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
உரை ஓவியம், கட்டுரை, கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், திரைப்படம், சொற்பொழிவு, தன்வரலாறு என்று கலைஞர் மு. கருணாநிதி என்கிற படைப்பாளரை 128 பக்கங்களில் சுருக்கி அடைப்பது என்பது சமுத்திரத்தை சங்குக்குள் அடைக்கும் செயல் என்கிற எண்ணத்தைப் பொய்ப்பித்திருக்கிறார் முனைவர் ம. இராசேந்திரன். கணினித் தொழில்நுட்பத்தில் "ஜிப் ஃபைல்' போல, கலைஞர் மு. கருணாநிதி என்கிற பேராளுமையின் பன்முகப் பரிமாணத்தின் "ஜிப் ஃபைல்'தான் "இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசைக்காக ம.ரா. எழுதி இருக்கும் இப்புத்தகம்.
1942-ஆம் ஆண்டு அச்சில் வந்த கலைஞர் மு. கருணாநிதியின் முதல் படைப்பான "இளமைப் பசி' சிறுகதையில் தொடங்கி, அவரது கடைசி கலைஞர் கடிதம் வரை, எழுதிக் குவித்திருக்கும் சாதனையை முறியடிக்க இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்தப் பன்முகப் பரிமாணத் தொகுப்பு.
பதினைந்து வயதில், தனது பள்ளிப் பருவத்தில் "மாணவ நேசன்' என்கிற கையெழுத்து பத்திரிகை நடத்தியதில் தொடங்கிய கலைஞர் மு. கருணாநிதியின் பேச்சும், எழுத்தும், மூச்சும் இலக்கியமாக இருந்திருக்கிறது என்பதற்கு, 1945-இல் "கவிதையல்ல' என்கிற தலைப்பில் அவர் எழுதிய கவிதையே சான்று. அந்தக் கவிதை இதுதான் - இலக்கியச் சிறகு முளைக்காமல் தவிக்கின்ற கவிக்குஞ்சு நான்!
சமீப காலத்தில் "இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசையில் வந்திருக்கும் புத்தகங்களில் குறிப்பிடத்தக்க புத்தகம் இது.
--------------------------------------
கவிஞர் கா. பாபுசசிதரன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு "கதவுகள்'. அதிலிருந்து ஒரு கவிதை -
பூட்டிய கதவுகள்
அழகு என்கிறார்கள்
மனிதர்கள்
திறந்த மனிதர்கள்
அழகு என்கின்றன
கதவுகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...