தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நாச்சியார் கிளியின் சோற்றுச் செருக்கு

அது என்ன சோற்றுச் செருக்கு? சோற்றுக் கவலையில்லாமலும் வேளை தவறாமலும் வயிறார உண்டு திளைப்பவனுக்கு உண்டாகுமே ஒரு திமிர், அதுவே "சோற்றுச் செருக்கு' எனப்படுகிறது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2023, 12:39 pm

DIN


அது என்ன சோற்றுச் செருக்கு? சோற்றுக் கவலையில்லாமலும் வேளை தவறாமலும் வயிறார உண்டு திளைப்பவனுக்கு உண்டாகுமே ஒரு திமிர், அதுவே "சோற்றுச் செருக்கு' எனப்படுகிறது.

அந்தத் திமிர் காரணமாக ஒருவனின் நடவடிக்கைகள் பிறருக்கு இடையூறாகும்போது, அவன் விமர்சனத்துக்கு உள்ளாகிறான். அவன் மீது ஊரார் கொண்ட வெறுப்பு, "ஊணடங்க வீணடங்கும்' 

எனும் சொலவடையாகவும் தோற்றம் கொள்கிறது. "அவன் உண்ணும் சோற்றின் அளவு நாளுக்கு நாள் குறைந்தால் அவனது வீணானான வேலைகள் தானாகவே அடங்கிவிடும்' என்பது கருத்து.

ஊருக்கும் தனக்கும் அடங்காது வெளியில் சுற்றித் திரிந்து வயிறு பசிக்கையில் மட்டும் வீடு திரும்பும் பிள்ளையைப் பார்த்து, "வா வா! ஆப்பை(அகப்பை)யைக் குறைத்தால் எல்லாம் சரியாகி விடும்' என்று தாய்மார்கள் சொல்வதை இன்றும் கேட்கலாம்.

இந்த உலகியல் நிகழ்வுகளை ஒட்டியே நாச்சியார் திருமொழிப் பாசுரம் (12:9) ஒன்றுக்கு உரை விரிக்கிறார் பெரியவாச்சான் பிள்ளை.

"கண்ணன் என்னும் கருந்தெய்வ'த்தின் மீது காதல் பெருக, அவனை அடையப் பெறாமையால் பெரிதும் வருந்தும் கோதை நாச்சியார், "என்னைக் கண்ணன் இருக்குமிடத்திற்கே கொண்டு செல்லுங்கள்' எனத் தன் அருகில் உள்ளவர்களை நோக்கி ஒரு திருமொழி (12) முழுதும் பேசுகிறாள். அதில் ஒரு பாடலின் அடிகள் இவை;

கூட்டில் இருந்து கிளி எப்போதும்
கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கும்;
ஊட்டக் கொடாது செறுப்பனாகில்
உலகு அளந்தான் என்று உயரக் கூவும்;
(12-9)

"நான் வளர்த்த கிளியானது கூட்டில் இருந்து கொண்டு எல்லாக் காலத்திலும் கோவிந்தா கோவிந்தா என்று அவன் பெயரைச் சொல்லுகின்றது. (இதன் திமிரை அடக்க வேண்டுமென்று) உணவு கொடாது (பட்டினிகிடக்கும்படி) துன்பப்படுத்தினேன் ஆகில் 
உலகளந்த பெருமானே என்று உரக்கக் கூறுகின்றது' என்பது இவ்வடிகளின் பொருளாகும்.  

இதில் வியப்பு என்ன தெரியுமா? ஒரு காலத்தில் கிளிக்கு "கோவிந்தன்' என்ற பெயரைக் கூறிப் பழக்கியவளே அவள்தான். ஆனால் இன்று நிலைமை தலை
கீழாகி விட்டதே. இதனை உணர்ந்து ஆண்டாளின் மனோபாவத்தில் இதற்கு உரை விரிக்கும் பெரியவாச்சான் பிள்ளை இப்படி எழுதுகிறார்:

"சோற்றுச் செருக்காலேயன்றோ இது இங்குமங்கும் சுதந்திரமாக உலாவிக் கொண்டு என்நிலையறியாது அவன் பெயரை வாய் ஓயாமல் சொல்லிச்சொல்லி என்னைப் பாடாய்ப்படுத்துகிறது. பட்டினி போட்டால் எல்லாம் சரியாகி விடும்' என்று நினைத்து அதைப் பிடித்துக் கூட்டிலடைத்தாளாம். அப்படி அடைத்த பிறகும் அது அடங்கவில்லை. கோவிந்தா கோவிந்தா என்று கூப்பிடுவதையும் நிறுத்தவில்லை. 

அதன் பின்னரும் என்ன செய்ததாம்? அவளின் பிரிவாற்றாமை கடல் போலப் பெருகும்படி உலகளந்தான் என்று சொல்லி, அவன் திருவடிகளைப் பரப்பின இடமெல்லாம் ஒலிக்குமளவுக்குக் கூடிய மட்டிலும் தன் குரலை உயர்த்திக் கூவியதாம். தாயிடம் அடிவாங்கிய குழந்தை குரலை உயர்த்தி ஊரைக் கூட்டிய கதைதான் இங்கும். 

இப்படி ஆண்டாளின் பாவனையில், மேலான பேரின்பமய(பரமபோக்ய)மாய் உரை விரிக்கும் பெரியவாச்சான் பிள்ளை, உலகவழக்கில் உள்ள, "சோற்றுச் செருக்கு' என்பதை எடுத்தாண்டிருக்கும் அழகு பாராட்டத்தக்கது.

"சோற்றுச் செருக்கு', இப்படித் துன்பத்துக்கு மட்டுமே உள்ளாக்குமா? இல்லை, இல்லை. ஆக்கத்திற்கும் அது வழிவகுக்கும் என்பதை அடியார்க்கு நல்லார் உரைக்கு எழுந்த சிறப்புப் பாயிரப் பாடலொன்று நமக்கு உணர்த்துகின்றது.

பொப்பண்ண காங்கேயன் என்னும் வள்ளல் தம்மை ஆதரித்தது காரணமாக அன்ன விசாரம் முதலான எந்த விசாரமுமின்றி முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்துக்குப் பருந்தும் நிழலுமெனப் பாவும் உரையும் பொருந்துமாறு சிறந்த உரை செய்தார் அடியார்க்கு நல்லார்.  

ஆக இவையனைத்துக்கும் அடியாவது அவன் அளித்த "சோற்றுச் செருக்க'ல்லவா என்று சொல்லிப் பாராட்டுகிறது 
அப்பாடல்.

காலமெனும் கூற்றைத் தவிர்த்தருள் 
         பொப்பண்ண காங்கெயர் கோனளித்த
சோற்றுச் செருக்கல்ல வோதமிழ் 
                                     மூன்றுரை சொல்வித்ததே!

என்பது பாடல்பகுதி. இப்படி ஆக்கத்துக்குக் காரணமாகவும் இருந்த "சோற்றுச் செருக்கை'ச் சிறப்பித்துப் பேசுகிறது பாட்டு. 

அடியார்க்கு நல்லாரின் காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு என்பர். இங்குக் காட்டிய உரைச் சிறப்புப் பாயிரப்பாடலைப் பாடிய பெயர் அறியப்பெறாத புலவர் அடியார்க்கு நல்லார் காலத்தவராகவோ அவருக்குப் பின் வந்தவராகவோ இருக்கலாம். பெரியவாச்சான் பிள்ளை 13-ஆம் நூற்றாண்டில் (கி.பி.1167-1262) வாழ்ந்தவர்.

ஆக வாழ்வியல் அனுபவமாக மக்கள் நாவில் இன்றளவும் வழங்கும் "சோற்றுச் செருக்கு' உரை நூல்களிலும் பாடல்களிலும் இடம்பிடித்திருப்பதில் வியப்பில்லை அல்லவா?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.