உடன்போக்கு: இருவேறு பார்வைகள்!

தமிழ் அகத்திணை இலக்கிய மரபில் உடன்போக்கு முக்கிய இடம் பெறுகிறது. இவ்வுடன்போக்குநிகழ்வு பாலைத்திணை உரிப்பொருளில் அடங்கும்.
உடன்போக்கு: இருவேறு பார்வைகள்!
Published on
Updated on
2 min read

தமிழ் அகத்திணை இலக்கிய மரபில் உடன்போக்கு முக்கிய இடம் பெறுகிறது. இவ்வுடன்போக்குநிகழ்வு பாலைத்திணை உரிப்பொருளில் அடங்கும். நற்றிணையில் 179, 184 ஆகிய இரு பாடல்கள் இவ்வுடன்போக்கு நிகழ்வை சிறப்பாக சித்திரிக்கக் காணலாம். இப்பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியுமாறில்லை. 
பாடல் 179 செவிலிக் கூற்றாக அமைகிறது. "இல்லத்தில் என்மகள் ஆசையோடு வயலைக் (பசலை) கொடி ஒன்றை வளர்த்து வந்தாள். கன்று ஈன்ற புனிற்றுப் பசு அதனைத் தின்பதை முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த  தலைவி பார்த்ததும் அதிர்ந்து போனாள். ஆத்திரத்தில், விளையாட கையில் வைத்திருந்த பந்தையும் பாவையையும் நிலத்திலே வீசி எறிந்தாள். வளர்த்த பசலைக் கொடியைப் பசு தின்றுவிட்டதே என்ற வருத்தத்தால் வயிற்றில் அடித்துக்கொண்டாள். 
மானின் மருட்சி கொண்ட அக்குறு மகளின் வாட்டம் போக்க நானும் தாயும் தேனொடு கலந்த தீம்பாலை உண்ணக் கொடுத்தோம். அவளோ அதனை உண்ணாது விம்மி விம்மி அழுதாள். இவ்வாறு நேற்று வரை குழந்தைத் தன்மை மாறாதிருந்த என் மகள் இன்று குறுந்தாடியோடு கூடிய ஒருவன் கூறிய பொய்யான மொழிகளைக் கேட்டு அவனுக்கு உடன்பட்டு, நகை தோன்ற அரிய சுரத்தின் வழியே சென்று விட்டாளே என வருந்துகிறாள்'. 
இதனை,
இல்லெழு வயலை ஈற்றுஆ தின்றென
பந்துநிலத்து எறிந்த பாவை நீக்கி
அவ்வயிறு அலைத்தஎன் செய்வினைக் குறுமகள்
மானமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு
யானும் தாயும் மடுப்பத் தேனோடு
தீம்பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி
நெருநலும் அனையள் மன்னே இன்றே
மையணற் காளை பொய்புக லாக
அருஞ்சுரம் இறந்தனள் என்பதன்
முருந்தேர் வெண்பல் முகிழ் நகை திறந்தே
(நற்றிணை : 179)
என்ற பாடல்வழி அறியலாம்.
பந்தும் பாவையும் வைத்து விளையாடும் தலைவி தான் வளர்த்த வயலைக்கொடியைப் பசு தின்றதால் விளையாடிக் கொண்டிருந்த பொருள்களை, நிலத்தில் வீசி எறிகிறாள். அவளை அமைதிப்படுத்த தாய் கொடுத்த பாலையும் விரும்பாதவளானாள். பாடலில் தலைவியின் இளமைத்தன்மை இவ்வாறு குறிக்கப்படுகிறது. 
செவிலி, தலைவியை இன்னமும் சிறுமியாகவே பார்க்கிறாள். தலைவியும் தலைவனும் உடன்போக்கு நிகழ்த்தியதைத் தவறாக எண்ணியதாக இப்பாடலில் சான்று இல்லை. மாறாக, இளமை மாறாத அவள் அந்த அருஞ்சுரத்தை எவ்வாறு கடப்பாள் என்ற வருத்தமே செவிலித்தாயை வருந்தச் செய்கிறது. தலைவியைக் குறை கூறாத செவிலி மனம், தலைவனைக் குற்றப்படுத்துகிறது. ஏதோதோ பொய் மொழிகளைக் கூறி யாதும் அறியாத என் மகள் மனத்தை மாற்றிவிட்டான் என்றே வருந்துகிறாள். 
இதுபோலவே பாடல் 184இல் மற்றொரு உடன்போக்கும் சொல்லப்படுகிறது. இங்குத் தலைவியின் உடன்போக்கு எண்ணி கலங்குபவள் நற்றாயாக அமைகிறாள். அவள் கூற்றாகவே பாடல் அமைகிறது. நற்றாய் தலைவியின் உடன்போக்கை எண்ணி அழுது புலம்புவது கண்டு அயல்மனைமாதர், அவளிடம் "இஃதொன்றும் புதிதல்லவே, அறத்தின்பாற் பட்டதுதானே வருந்தாதே' என்று ஆற்றுவிக்கின்றனர்.  
அப்போது நற்றாய் உங்களைப் போல பல புதல்வியர் எனக்கில்லையே, எனக்கு இருப்பதோ ஒரு மகள்; அவள் பிரிவை எங்ஙனம் தாங்குவேன் என்று புலம்புவதாய் அப்பாடல் அமைகிறது.
"அறிவுடையோரே ஒரே ஒரு புதல்வியைப் பெற்றுள்ளேன். அவளும் நேற்றிரவு பேராற்றல் மிக்க கூரிய வேற்படையை உடைய காளை ஒருவனோடு, பெரிய மலையின்கண் செல்லுதற்கரிய பாலை நிலத்து வழியே சென்றுவிட்டாள். நீங்களோ ஆற்றியிரு என்கின்றீர். எவ்வாறு ஆற்றியிருக்க முடியும். 
மையுண்ட கண்களின் பாவை வெளி வந்து நடை பயில்வதைப் போல் அழகிய சாயலை உடையவள் என்மகள். அத்தகையவள் விளையாடிய, நொச்சிமர நிழலையும் திண்ணையையும் நினைக்கும் போதெல்லாம் என் உள்ளம் வெந்தழிகிறதே யான் இனி எவ்வாறு உய்வேன்' என்று வருத்திக் கூறுவாள். 
இதனை,
"ஒரு மகள் உடையேன், மன்னே அவளும்
செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்
இனியே தாங்குநின் அவலம் என்றீர் அதுமற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடை யீரே
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணிவாழ் பாவை நடைகற் றன்னஎன்
அணியியற் குறுமகள் ஆடிய
மணியேர் நொச்சியும் தெற்றியும் கண்டே'
(நற். பா. 184)
என்ற பாடல் உணர்த்தக் காணலாம்.
தலைவி ஒன்றும் அறியாத சிறு குழந்தையன்றோ என்ற கலக்கமும் விளையாட்டுப் பருவமே தாண்டாத இக்குறுமகள் எப்படி சொல்லாது சென்றுவிட்டாள் என்ற ஏக்கமும், கரடு
முரடான பாலை வழியை அவள் எங்ஙனம் கடப்பாள் எங்ஙனம் மனையறம் ஆற்றுவாள் என்ற வருத்தமும் இருவர் கூற்றிலும் வெளிப்படுகிறது. இவ்வாறு ஒற்றுமை உணர்வு இருந்தாலும் இருவரிடை மாறுபட்ட உணர்வும் இல்லாமலில்லை. 
இப்பாடலில் செவிலி, தலைவியைக் குற்றமற்றவளாக யாதுமறியாதவளாகவே காண்கிறாள். குறுந்தாடி கொண்ட அந்த இளைஞனே தலைவியிடம் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து தலைவியின் மனதை மாற்றி உடன்போக்கு நிகழ்த்தினான் என்கிறாள். 
நற்றாயோ தலைவனைக் குறை கூறாது மாறாக அவன் வீரத்தையும் வெற்றியையும் குறிக்கும்முகமாக "செருமிக மொய்ம்பிற் கூர்வேல் காளை' (பா:184 வரி 2) எனப் பாராட்டுவது குறிக்கத்தக்கது. நல்ல தலைவன் என்பதில் தாய்க்குக் கிடைக்கும் ஆறுதலை அவ்வரிகளில் காணமுடிகிறது. 
வளர்த்த தாயை விட ஈன்ற தாய்க்கு மகள் மீது அளவுகடந்த பாசம் உள்ளது என்பதை நற்றாய் கூற்றில் அமைந்த பாடலின் கடைசி வரி உணர்த்தக் காணலாம். தலைவி தம் வீட்டில் இப்பொழுது இல்லை. இல்லாதுபோயினும் அவள் விளையாடிய விளையாட்டுப் பொருளும் விளையாட்டு நிகழ்விடமும் நினைக்க நினைக்க உள்ளத்தை வேக வைப்பதாக "உள்ளின் உள்ளம் வேமே' (வரி 6) "அணியியற் குறுமகள் ஆடிய மணியேன் நொச்சியும் தெற்றியும் கண்டே' (வரி 8, 9)  என்ற பாடல் வரிகளில் உணர்த்தப்படுகிறது.  
நற்றாயும் செவிலியும் உடன்போக்கை மறுக்கவில்லை. மாறாக அதனை அறநெறியாகவே கொள்வதை அவர்கள் கூற்றிலிருந்து அறிய முடியும். தலைவி இளமைத்தன்மை மாறாதவள்; இந்த வயதில் எப்படி அரிய பாலை வழிகளைக் கடந்து செல்வாள், எப்படி மனையறம் பேணுவாள் என்ற ஆற்றாமையும் அவளது பிரிவின் ஏக்கத்தையுமே இப்பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com