உள்ளத்தைக் கொள்ளை கொண்ட வெள்ளத்தில் பற்றிய தீ! 

முத்தொள்ளாயிரம் என்னும் நூல் செவ்வலிக்கிய நூல்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது. முத்தொள்ளாயிரம் அல்லாத பிற நாற்பது நூல்களும் ஏதோ ஒரு வகையில் பொருண்மைத் தொடர்புடன் காணப்படுகின்றன. 
உள்ளத்தைக் கொள்ளை கொண்ட வெள்ளத்தில் பற்றிய தீ! 

முத்தொள்ளாயிரம் என்னும் நூல் செவ்வலிக்கிய நூல்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது. முத்தொள்ளாயிரம் அல்லாத பிற நாற்பது நூல்களும் ஏதோ ஒரு வகையில் பொருண்மைத் தொடர்புடன் காணப்படுகின்றன. 

பத்துப்பாட்டு நூல்களாகப் பத்து நூல்களும் எட்டுத்தொகை நூல்களாக எட்டு நூல்களும் பதினெண் கீழ்க்கணக்காகப் பதினெட்டு நூல்களும் இரட்டைக் காப்பியங்களாக இரண்டு நூல்களும் இலக்கண நூலாகத் தொல்காப்பியமும் உரை நூலாக இறையனார் களவியல் உரையும் என நாற்பது நூல்கள் வகைமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த முத்தொள்ளாயிரம் மட்டும் எந்த வகைமைக்குள்ளும் அடங்காமல் தனித்த ஓர் இலக்கியமாகக் காணப்படுகிறது.

முத்தொள்ளாயிரத்தில் சேரனுக்குத் தொள்ளாயிரம் பாடல்கள், சோழனுக்குத் தொள்ளாயிரம் பாடல்கள், பாண்டியனுக்குத் தொள்ளாயிரம் பாடல்கள் என இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. 

கால வெள்ளத்தில் மூன்று தொள்ளாயிரம் பாடல்களில் பெரும்பான்மையானவை தொலைந்து போயின. புறத்திரட்டு என்னும் நூலில் முத்தொள்ளாயிரம் என்னும் தொகுப்பில் 108 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதனை முழு நூலாக்கியுள்ளனர். முத்தொள்ளாயிரத்தின் 108 பாடல்கள் கொண்ட பதிப்பாக 1905}ஆம் ஆண்டில் மதுரை தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ளது. 

இதனை இரா. இராவையங்கார் பதிப்பித்துள்ளார். இதில் 99 பாடல்களை மூலப் பாடல்களாகவும் 9 பாடல்களைப் பின்னிணைப்புப் பாடல்களாகவும் தந்துள்ளார். கடவுள் வாழ்த்துப் பாடலுடன் இந்நூல் 109 பாடல்களைக் கொண்டுள்ளது. 

இவற்றில் 22 பாடல்கள் சேரனைப் போற்றிப் பாடியவை. 29 பாடல்கள் சோழனைப் போற்றிப் பாடியவை. 57 பாடல்கள் பாண்டியனைப் போற்றிப் பாடியவை.

பேராசிரியர் ந. சேது ரகுநாதன் உரை எழுதிப் பதிப்பித்த முத்தொள்ளாயிரம் 1946}ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. டி.கே. சிதம்பரநாத முதலியார் உரை எழுதிப் பதிப்பித்த முத்தொள்ளாயிரம் 1948}ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. 

முத்தொள்ளாயிரத்தில் நமக்குக் கிடைத்த பாடல்கள் அனைத்தும் நம்மைக் கற்பனை உலகத்தில் இயங்க வைக்கும் இயல்பு கொண்டவை. வெண்பாவில் அமைந்துள்ள இந்தப் பாடல் ஒன்றில், சேர மன்னன் கோதையின் நாட்டின் நீர்வளத்தை எடுத்துக்காட்டி அதில் ஓர் அறியாமை நிகழ்வைக் காட்சிப்படுத்தியுள்ளார். அந்த அறியாமை நிகழ்வு நமது உள்ளத்திற்குள் ஓர் இலக்கிய இன்ப உணர்வை வழங்குவதைக் காண முடிகிறது.

சேறு நிறைந்த வயல்களுக்கு அருகே ஒரு பொய்கை உள்ளது. அதிகாலை வேளையில் அந்தப் பொய்கையில் சிவந்த நிறம் கொண்ட ஆம்பல் மலர்கள் மலர்கின்றன. கதிரவனின் ஒளியில் அந்த செவ்வாம்பல் மலரின் சிவப்பு நிறம், அந்தப் பொய்கை நீரில் பரவுகிறது. அப்போதுதான் பறவைக் குஞ்சுகள் கண் விழித்தன. 
கண் விழித்த உடனே அந்தப் பறவைக் குஞ்சுகள், பொய்கை நீரில் நீந்தி மகிழ்வதற்குக் கிளம்பின. அதைக் கண்ட தாய்ப்பறவையானது அந்தக் குஞ்சுகளைத் தண்ணீருக்குள் இறங்க விடாமல் தடுக்கிறது. பொய்கை முழுவதும் சிவப்பு நிறம் பரவியிருப்பதைப் பார்த்ததும் அந்தப் பொய்கையின் வெள்ளத்தில் தீப்பற்றிக் கொண்டது என நினைத்தது தாய்ப் பறவை. 
அந்தத் தீயில் நீந்தினால் தனது குஞ்சுகள் எரிந்து கருகிப் போய்விடும் என்று அச்சத்துடன் நடுநடுங்கியது. தனது குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டும் என்னும் தாய்மை உணர்வு கிளர்ந்து எழுந்தது. எனவே அந்தத் தாய்ப்
பறவை தனது குஞ்சுகளைத் தண்ணீரில் இறங்கவிடாமல் தனது சிறகுக்குள் அடக்கி வைத்துக் கொண்டது. 
அப்படி அந்தக் குஞ்சுப் பறவைகளைத் தடுத்த தாய்ப்பறவை எழுப்பிய எச்சரிக்கை ஒலியும் குஞ்சுப் பறவைகள் எழுப்பிய எதிர் ஒலியும் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு நிறைந்த ஆரவாரத்தை ஏற்படுத்தியது என்று பாடியுள்ளார் முத்தொள்ளாயிரப் புலவர். 
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாய்அவிழ
வெள்ளம் தீப்பட்டது எனவெரீஇ}புள்ளினம்தன்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கைக்கோதை நாடு 
சேர நாடு பல நீர்நிலைகளைக் கொண்டது. அந்த நீர்நிலைகளில் ஆம்பல் மலர்கள் பல வண்ணத்தில் பூத்திருந்தன. இவற்றில் சிவப்பு நிற ஆம்பல் பூத்திருக்கும் குளத்தில் அவை நெருக்கமாகப் பூத்திருந்தால் அதிகாலை வேளையில் தோன்றும் கதிரவன் ஒளியில் பூக்கள் தனித்தனியே தெரியாமல் எல்லாம் ஒன்றாகவே தோன்றும். அப்போது தோன்றும் காட்சியானது அந்தப் பறவைக்கு எப்படித் தண்ணீரில் தீப்பற்றிக் கொண்டது என்று தோன்றியதோ அப்படித்தான் நமக்கும் தோன்றும். 
இப்போதும் கன்னியாகுமரிப் பகுதியிலிருந்து திருவனந்தபுரத்திற்குச் செல்லும் சாலையில் பயணித்தால் இரண்டு பக்கங்களிலும் நெல்வயல்களையும் அவற்றிற்கு அருகே ஆம்பல் பூத்த குளங்களையும் வரிசையாகக் காண முடியும். கிழக்குப் பக்கத்திலிருந்து தோன்றும் கதிரவன் ஒளியில் அந்த ஆம்பல் பூக்களிலிருந்து பரவும் சிவப்பு நிறம் தண்ணீரில் பரவுவதையும் பார்க்க முடியும். 
இந்தப் பாடலில் கவ்வை எனப் பயன்படுத்தப்பெற்ற சொல்லுக்கு உரிய பொருள் பேரொலி என்பதாகும். பறவைகள் எழுப்பிய இந்த ஒலியை நாம் சரியாக உணர்ந்து கொள்ளவேண்டும் என்றால் கோழி, தனது குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்கு எழுப்பும் ஒலியை நாம் கற்பனை செய்து காணலாம். 
பறவையின் கையாகிய சிறகுகள் தனது குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுகின்றன. அதைப் போல, சேரனின் கையிலிருக்கும் வேலானது பகைவர்களிடமிருந்து தனது நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்குப் பயன்படுகிறது என்று உணர்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com