மூத்தவளா? இளையவளா? 

வைணவ நெறிக்குத் தாயாக ஆழ்வார்கள் விளங்குகின்றனர். வளர்ப்புத் தாயாக ஸ்ரீராமானுஜர் விளங்குகின்றார்.
மூத்தவளா? இளையவளா? 

வைணவ நெறிக்குத் தாயாக ஆழ்வார்கள் விளங்குகின்றனர். வளர்ப்புத் தாயாக ஸ்ரீராமானுஜர் விளங்குகின்றார்.

பூமாலை சூடிக் கொடுத்தும், பாமாலை பாடிக் கொடுத்தும் திருமாலை இருமாலையால் கட்டிய ஆண்டாள் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் என்பதை நாம் அனைவருமே அறிவோம்.

இப்படியிருக்க, ஆண்டாளை வாழ்த்திப் பாடும் செய்யுள் ஒன்று, "ஸ்ரீராமானுஜருக்குப் பின்வந்த ஆண்டாள் நாச்சியார் வாழ்க' என்று போற்றிப் பாடுகிறது.

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்ஆனாள் வாழியே!
என்பது அச்செய்யுள் வரி.

இராமானுஜரின் மூத்த சகோதரியான ஆண்டாள் பெருமாட்டியைத் தங்கை என அவ்வாழ்த்துப் பாடல் கூறுவது நம்மில் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், அற்புதமான அர்த்தம் ஒன்று அப்பாடலில் புதைந்துள்ளது. அது என்வென்று அறிவோமா?

திருமாலிருஞ்சோலை பெருமாளுக்கு ஆண்டாள் பாட்டில் நிவேதனம் வைக்கிறாள். ஏதோ பேருக்கு நாம் எல்லாம் பிரசாதம் படைக்கிறோம். ஆண்டாளுக்கோ நிறைந்த ஆசையால் நிறைய படைக்க எண்ணம்.

"நூறு தடாவில் வெண்ணெய், நூறு தடாநிறைந்த அக்கார அடிசில்' என்கிறாள். அதாவது அண்டா நூறில் சர்க்கரைப் பொங்கல், அவ்வாறே நூறு அண்டா வெண்ணெய். 

இந்த ஆண்டாளின் ஆசை பாட்டளவில் நின்றுவிடலாமா என எண்ணி பின்னால் வந்த பெரும்புதூர் இராமானுஜர் நிஜமாகவே நூறு அண்டா சர்க்கரைப் பொங்கலும் நூறு அண்டா வெண்ணைய்யும் திருமாலிருஞ்சோலை பெருமாளுக்குச் சமர்ப்பித்தார். அது மட்டுமல்ல, அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, ஆண்டாளிடம், "உனது ஆசையை நிறைவேற்றி விட்டேன்' என்று தெரிவித்தாராம்.

பொதுவாக, தங்கையின் ஆசையை அண்ணன்தானே நிறைவேற்றுவார். அதனால்தான் ஆண்டாள் ராமானுஜருக்குத் தங்கையாக வாழ்த்துப் பாடலில் மாற்றம் பெற்றுவிட்டாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com