
வேங்கை மரம் மலை சார்ந்த பகுதிகளில் மிகுதியாக வளரும். அம்மரத்தின் கிளை கருமை நிறத்தில் இருப்பதுடன் அதனுடைய பூ, அதிகாலையில் பூக்கும் என்பதைக் கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூ என்று நற்றிணை (313:1) தெரிவிக்கிறது. மலர்ந்த பூக்கள் கொத்துகளுடன் அழகாக இருப்பதோடு தேன் மிகுந்திருக்கும். அத்தேனை உண்ண வண்டுகள் மொய்க்கும்.
கொத்துகளாக உடைய வேங்கைப் பூவின் நிறத்தைப் பொன்னிணர் (கைந்நிலை 10:1) என்றனர். பொன் என்பது செம்மை கலந்த மஞ்சள் நிறத்தைக் குறிக்கும். அப்பூவின் நிறத்தை அவரை விதைக்கு உவமையாகப் புகரிணர் வேங்கை வீகண் டன்ன அவரை எனப் பெரும்பாணாற்றுப்படை (194,195) கூறும்.
வேங்கைப்பூ மரத்திலிருந்து விழும்பொழுது அதன் பொன்னிறக் காட்சி, கொல்லன் உலையில் இரும்பு அடிக்கும்பொழுது சிதறும் நெருப்புப் பொறிகள் போல இருக்கும் என்பதை எறிபொற் பிதிரிற் சிறுபல் காய வேங்கை வீயுகும் (நற்றிணை, 13:6,7) என்று கூறியவற்றால் அறியலாம்.
தரையில் கிடக்கும் மலரின் நிறம் புலியினுடைய நிறத்தோடு ஒத்திருக்கும். குழந்தை சில நேரம் தொடர்ந்து அழுதுகொண்டிருக்கும். அக்குழந்தையின் அழுகையை எப்படியாவது நிறுத்த வேண்டும் எனத் தாயானவள் வேங்கையின் மலர்களைக் காட்டி, புலி எனச் சொல்லி அக்குழந்தையின் அழுகையை நிறுத்த செய்வதுண்டு. இதனை மெல்லிணர் வேங்கை வியலறைத் தாயின வழுகை மகளிர்க் குழுவை செப்ப என்று பரிபாடல் (14:11,12) அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது.
குறிஞ்சி நிலத்தில் வேங்கை மலர்வதற்கும் தினை முற்றி இருப்பதற்கும் தொடர்புண்டு. அதாவது குறிஞ்சி நில மக்கள் மழை பொழிந்தவுடன் வேங்கை முதலான மரங்களை அழித்துத் தினையை விதைப்பர். தினை விதைத்த இடத்தில் தப்பிய வேங்கை மரமும் வளரும். அவ்விடத்தில் தினைக்கதிர் முதிரும்பொழுது வேங்கை மரம் பூக்களைப் பூக்கும். அப்பொழுது தினையை அறுவடை செய்வர்.
இக்காட்சியைக் கண்ட மாதவச் சிவஞான முனிவர், வேங்கை மரம் தன்னுடைய இடத்தைக் கைப்பற்றிய தினைப் பயிரை அழிக்கத்தான் பூவாக மலர்ந்தது என்பதைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
நங்கு லத்தரு வாழ்க்கையைக் கெடுத்துநம் மிருக்கை
தங்க ளுக்கெனக் கொண்டவிவ் வேனல்க டம்மை
யிங்கண் வாட்டுது மென்பதோர் சூழ்ச்சியெண் ணியபோ
லங்க ணெஞ்சிய வேங்கைகள் போதுசெய் தலரும் (காஞ்சிப்புராணம்: 69)
குறிஞ்சி நிலத்து மக்கள் இளவேனில் காலத்தில் வேங்கை மலர்வதை நல்ல நாட்களாகக் கருதினர். பன்னாளும் நின்ற விடத்தும் கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால் (பழமொழி நானூறு, 233:1,2) என்னும் பாடலடிகளில் கணி என்றது பின்னாளில் நிகழ்வதை முன்னரே கணிக்கக்கூடியவரான சோதிடரைக் குறிக்கும். வேங்கை மரமும் சோதிடரைப் போல நல்ல நாளைக் கணித்துப் பூக்கும் தொழிலைச் செய்தது எனக் கூறலாம். அதனால் வேங்கை மரம் கணி என்ற பெயரும் பெறுவதைக் காணலாம்.
நன்னாள் என்றது எந்த ஒரு நற்செயலைச் செய்வதற்குமான உகந்த நாளைக் குறிக்கும். அதாவது வேங்கை மலர் பூத்த காரணத்தினால் குறிஞ்சி நில மக்கள் தினையை அறுவடை செய்தனர் என்பதை இளவேங்கை நாளுரைப்ப ... இருவியா மேன லினி என்று திணைமாலை நூற்றைம்பது (18) குறிப்பிட்டுள்ளது.
வேங்கை மலர்ந்தால் தினை அறுவடை செய்வது போல அது திருமணத்திற்கும் கணிகன் (சோதிடன்) தொழில் புரியும் என்பதைக் கண்மலர்க் கொடிச்சிமார்க்குக் கணித்தொழில் புரியும்வேங்கை என்று கம்பராமாயணம் (845:2) குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு முன்னோர் இயற்கையில் நிகழும் ஒவ்வொரு மாற்றத்தையும் அறிந்து அதற்கு ஏற்றாற்போலச் செயல்பட்டனர் என்பதை அறிய முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.