காளமேகம் பெயரில் தண்டியின் பாடல்

தண்டியின் பாடல்கள்: காளமேகப் புலவரின் பெயரில் புதுமை
காளமேகம் பெயரில் தண்டியின் பாடல்

தமிழ் அக இலக்கிய மரபில் பருவம் கண்டு அழிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது என்று ஒரு துறை உண்டு. இதனை மாலைக்காலத்தின் வருகையைக் கண்டும் கார்காலத்தின் வருகையைக் கண்டும் மனம் வருந்திய தலைவி, தோழிக்குக் கூறியது எனலாம்.

இச்சூழலில் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் புலம்பல் மொழிகள் வெளிப்படும். "மாலைப்பொழுது நெஞ்சைப் பிளக்கும்படியாக இருக்கிறது', "புல்லாங்குழலின் இசை நெருப்பாகச் சுடுகிறது' என்றெல்லாம்

பாடுவது புலவர் மரபு.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன், குழல்போலும் கொல்லும் படை (1228) என்கிறார் திருவள்ளுவர். சிலப்பதிகாரத்தில் உள்ள அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில் (114), மாலைக்காலமானது கோவலனைக் கூடியிருக்கும் மாதவிக்கு இன்பமும் அவனைப் பிரிந்திருக்கும் கண்ணகிக்குத் துன்பமும் தந்தது என்று இளங்கோவடிகள் படம்பிடித்துக் காட்டியுள்ளார். மகாகவி பாரதியும் தலைவன் புலம்பலாக மாற்றிப் பாலும் கசந்ததடி சகியே, படுக்கையும் நொந்ததடி, கோலக் கிளிமொழியும் நெஞ்சில் குத்தல் எடுத்ததடி என்று பாடியுள்ளார்.

மேலுமொரு சான்றுக்கு,

முல்லை நறுமலர் ஊதி, இருந்தும்பி

செல்சார்வு உடையார்க்கு இனியவாய்

நல்லாய்! மற்று

யாரும்இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை

ஈரும், இருள்மாலை வந்து (6)

என்ற ஐந்திணை ஐம்பது பாடலைக்

காண்போம்.

"நற்குணங்களுடைய தோழியே! இருள்சூழ்ந்த மாலைக்காலத்தில், பெரிய வண்டுகள் முல்லை மலர்களின் மீதமர்ந்து ஊதுகின்றன. அத்தகைய மாலைக்காலமானது தலைவருடன் கூடியிருக்கும் பெண்டிர்க்கு இன்பத்தையும் தலைவன் துணையில்லாமல் என்போன்று தனிமையில் தவிக்கும் பெண்டிர்க்கு நெஞ்சைப் பிளக்கும்படியான துன்பத்தையும் தருகின்றது' என்பது இதன்பொருள்.

இதற்குத் துணையாக,

விரவலராய் வாழ்வாரை

வெல்வாய் ஒழிவாய்

இரவுஉலவா வேலை ஒலியே

வரவுஒழிவாய்

ஆயர்வா யேஅரிவை ஆருயிரை ஈராவோ?

ஆயர்வாய் வேயோ அழல் (75)

என்ற பாடலைக் காண்போம்.

இப்பாட்டு, புலியூர்க்கேசிகன் உரைவரைந்த காளமேகப் புலவரின் தனிப்பாடல் திரட்டில் உள்ளது. இதற்கு, "இரவெல்லாம் ஓயாமல் ஒலியெழுப்பும் கடல் (வேலை) ஒலியே! தலைவனைப் பிரிந்து (விரவலராய்) வாழ்பவரை வருத்தாதே. தாயர் (ஆயர்) வாயிலிருந்து வெளியாகும் வசைச்சொற்களே இவளைத் துன்புறுத்தும். போதாக்குறைக்கு மாலைநேரத்தில் இடைக்குலத்து ஆயர்கள் ஊதும் புல்லாங்குழலின் இசையோ நெருப்பெனச் செவிகளில் பாயும். நீயும் அலைகளை வீசித் துன்பம் தாராதே' எனப் பொருள்.

இதே பாடல் எழுத்து மாறாமல் தண்டியலங்காரத்தில் "செறிவெனப் படுவது நெகிழிசை இன்மை' (16) என்ற நூற்பாவிற்கான மேற்கோள் பாடலாகக் காணப்படுகிறது.

நெகிழிசை என்றால் வல்லின எழுத்துகள் (கசடதபற) வராமல் மெல்லின எழுத்துகளாலேயே (யரலவழள) பாடல் பாடப்படுவதாகும். தண்டியலங்காரத்தை இயற்றிய புலவர் தண்டியே (12ஆம் நூற்றாண்டு) அதிலுள்ள சான்றுப் பாடல்களையும் எழுதியுள்ளார் என்பர்.

விஜயநகரப் பேரரசில் மல்லிகார்ச்சுனராயர் (14491465), விரூபாக்சராயர் (14661485) முதலானோர் ஆட்சிபுரிந்தனர். அவ்வரசர்கள் சார்பில் தமிழகத்தைச் சாளுவ வமிசத்துக் கோப்பயன் என்பாரும் அவரின் மகன் சாளுவத் திருமலைராயர் என்பாரும் ஆண்டனர்.

திருமலைராயரைக் காளமேகப் புலவர் பாடிய பாடலான,

தரித்திர ராசனை வணங்கித்

தலைசெயும் என்னை நிலைசெயல்கல் யாணிச்

சாளுவத் திருமலை ராயன்

மந்தா புயனாம் கோப்பயன் உதவும்

அகிபதி விதரண ராமன்

வாக்கினால் குபேரன் ஆக்கினான் (207)

என்ற பாடல், தமிழ்நாவலர் சரிதை நூலிலே காணப்படுகிறது. மேலும், திருச்சிராப்பள்ளித் திருவானைக்கா கோயிலிலும் திருவரங்கத்தில் சக வருடம் 1385இல் (பொ.ஆ.1453) கிடைத்த சாசனம் ஒன்றிலும் திருமலைராயன் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவற்றை எடுத்துக்காட்டிக் காளமேகப் புலவரின் காலம் 14501480 ஆகலாம் என்று அறிஞர் மு. இராகவையங்கார் நிறுவியுள்ளார் (சாஸனத் தமிழ்க்கவி சரிதம், 1958, பக்.148150). ஆகவே, 12ஆம் நூற்றாண்டினரான புலவர் தண்டியின் பாடலொன்று காளமேகப் புலவரின் பெயரால் வழங்கப்படுவதை அறியலாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com