/

பரணர் காட்டும் போர்க்களமும் ஏர்க்களமும்...

உழவுப் பணி செய்து உயிர்களைப் பசி-பட்டினியிலிருந்து வாழ்விக்கும் உழவனே உலகின் அச்சாணி ("உழுவார் உலகத்தார்க்கு ஆணி' - குறள் 1032);

News image
Updated On :1 மார்ச் 2026, 2:04 pm

தினமணி செய்திச் சேவை

உழவுப் பணி செய்து உயிர்களைப் பசி-பட்டினியிலிருந்து வாழ்விக்கும் உழவனே உலகின் அச்சாணி ("உழுவார் உலகத்தார்க்கு ஆணி' - குறள் 1032); ஏரின் பின்னேதான் இந்த உலகம் இயங்குகிறது ("சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' - குறள் 1031) என்ற ஐயன் வள்ளுவன் வாய்மொழி மிகப் பழங்காலத்திலே உழவுத் தொழிலின் சிறப்பை உணர்த்தும்.

ஒரு நாட்டு அரசன் பிற நாட்டின் மீது போர்

தொடுப்பதற்கான பல காரணங்களுள்

குடிமக்களை வாழ்விக்கத் தேவையான பொருள் வேண்டி போர் தொடுப்பதும் ஒன்றாகும். உழவனுக்கும் அரசனுக்கும் குடிமக்களை வாழ்விப்பது என்பது பொதுநோக்காகவே எக்காலத்திலும் இருந்துவந்துள்ளது என்பதே உண்மை.

அதனால்தான், அரசனை அக்காலத்தவர் "வில்லேர் உழவன்' என்றே உழவனைத் தொடர்புபடுத்தி சிறப்பித்தனர். அவனது போர்க்களத்தையும் புலவர் பெருமக்கள் ஏர்க்களமாக உருவகித்துப் பாடினர். போர் குறித்து சிறப்பித்துப் பாடும் புறநானூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, முத்தொள்ளாயிரம் போன்ற இலக்கியங்களில் இந்தப் போக்கைக் காணமுடியும். இவ்வாறு உருவகித்துப் பாடும் மரபுக்கு புறநானூறே வித்திட்டது எனக் கூறலாம்.

புறநானூற்றில் சேரமான் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் புலவர் பரணர், அவன் போரிட்ட போர்க்களத்தை ஏர்க்களமாக உருவகித்துப் பாடிய பாடலைச் (புறம் 369) சிறந்த சான்றாகக் கொள்ளலாம். இப்பாடல் வாகைத் திணையின் "மறக்களவழி ஏர்க்கள உருவகம்' எனும் துறையில் அமைகிறது.

வாகைத் திணையாவது போர்க்களத்தில் பகைவரை வென்று வாகைப்பூ சூடி வெற்றியைக் கொண்டாடுவதாகும். மறக்களவழி ஏர்க்கள உருவகமாவது போர்க்களத்தை நெற்போரடிக்கும் களமாகவும் செங்கோல் மன்னனை உழவனாகவும் உருவகித்து பகைப் படையை அழித்த வீரத்தைக் குறிப்பதாகவும் அமைகிறது. "முழவுறழ் திணிதோளானை உழவனாக வுரை மலிந்தன்று' எனப் புறப்பொருள் வெண்மாலை இலக்கணம் கூறுவதும் குறிக்கத்தக்கது. இப்பாடல் திணை, துறை பொருந்த சிறப்பாக அமைகிறது.

பாடலின் (புறம். 369) பொருளாவது- "போர்க்களத்தில் கரிய பெரிய கைகளை உடைய யானைக் கூட்டங்கள் காண்போர்க்கு மேகக் கூட்டமாகவும், ஓங்கி வீசப்படும் வாள்கள் ஒன்றோடொன்று பட்டு ஒளிவிடுவது மின்னலாகவும், களத்தில் ஒலிக்கப்படும் போர்முரசு இடியோசையாகவும், விரைந்து செல்லும் குதிரைப் படையின் வேகம் காற்றாகவும், வீரர்தம் அம்புகளிலிருந்து விடுபடும் கணைகள் மழைத் தாரையாகவும், புண்பட்டு இறந்தோரின் குருதி சிந்திய ஈரமான போர்க்களம், உழும் பக்குவத்தில் காணப்படும் ஈரமான வயலாகவும், களத்தில் வேகமாகச் செல்லும் தேர்கள் உழவன் உழும் ஏராகவும், வேல் முதலிய படைக் கருவிகளை ஓங்கி எறிதலால் நிலத்தில் உண்டான மேடு பள்ளங்கள் வயலில் படைச் சாலாகவும், அப்படைச்சாலில் எறியும் வேலும் கணைய மரங்களும் விதைகள் போல் நிலத்தில் ஊன்றப்படுவதாகவும், சாய்ந்து மண்ணில் கிடக்கும் போர்மறவர்கள் விளைந்த நெற்பயிர் போல் வளைந்து கிடப்பதாகவும், வெட்டப்பட்ட பகைவரின் தலையில் உள்ள மூளையும் நிணமும் பசியப் பயிர்களாகவும், பிணங்களின் குவியல் நெற்போர் குவியலாகவும், விளைந்த விளைச்சலை களத்தில் உதறி போர் அடிப்பவரை (சூடடிப்பவர்) பேய் மகளாகவும், நரி, கழுது ஆகியவை எருதாகப் பிணையல் கட்டி ஓட்டி போரடிப்பவைகளாகவும், பிணப்போரை காவல் காப்பவராக பூதகணங்களையும் உருவகித்துப் பாடும் புலவரின் இப்பாடலில் கற்பனைத் திறனும் உழவு மற்றும் போர்த்தொழிலில் புலவர் கொண்ட அனுபவ அறிவும் நம்மை வியக்க வைக்கின்றன. இதனை,

இருப்பு முகஞ் செறிந்த வேந்தெழின் மருப்பிற்

கருங்கை யானை கொண்மூ வாக

நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த

வாள்மின் னாக வியங்குகடிப் பமைந்த

குருதிப் பலிய முரசுமுழக் காக

அரசராப் பனிக்கு மணங்குறு பொழுதின்

வெவ்விசைப் புரவி வீசுவளி யாக

விசைப்புறு வல்வில் வீங்குநா ணுகைத்த

கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை

ஈரச்செறு வயிற் றேரே ராக

விடியல் புக்கு நெடிய நீட்டி நின்

செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சாற்

பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி

விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்

பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல்போர்பு

கணநரி யோடு கழுதுகளம் படுப்ப

பூதம் காப்ப பொலிகளம் தழீஇப் (புறம்.369)

என்ற பாடல் வரிகளிலிருந்து அறியலாம்.

அக்காலத்தில் உழவர் நெல்லரிந்து தொகுத்து வைக்கப்பெற்ற நெற்களத்துக்கே சென்று, வள்ளல்களைப் பாடி நெல் பெற்று மகிழும் பொருநர்களுள் சிலர், வேந்தர் வெற்றி எய்தும் போர்க்களத்துக்கும் சென்று அவர்கள் போர்த் திறனையும் வள்ளண்மையையும் வியந்து பாடி தாம் வேண்டிய மாவும், தேரும் யானையும் பரிசிலாகப் பெறுவது அக்கால மரபு என்பதை இப்பாடல் நமக்குத் தெளிவுறுத்துகிறது. போர்க்களத்தை ஏர்க்களமாகக் காணும் புலவரின் கற்பனைத் திறனும் போர் மற்றும் ஏர் அனுபவ அறிவும் இப்பாடலில் சிறப்பாக உணர்த்தப்படக் காணலாம்.

மன்னனிடம் ஓடைஅணி பூண்டுள்ள யானைகளையும் அதன் குட்டிகளையும் பரிசாகக் கேட்கிறான். அதுவும் நெல்லை வள்ளத்தில் கொடுப்பது போல யானைகளை வழங்க வேண்டும் என வேண்டுகிறான். இதனை,

பொன்னுடை நெடுங்கோட்டு இமயத் தன்ன

ஓடை நுதல வொல்குத லறியாத

துடியடிக் குழவிய படியிடை மிடைந்த

வேழ முகவை நல்குமதி.

என்ற பாடலடிகள் உணர்த்தும். தான் வேண்டும் பரிசிலை துணிந்து கேட்கும் புலவனின் பெருமிதத்தை இங்கே காணமுடிகிறது.

போர்க்களமாயினும் ஏர்க்களமாயினும் கொடுக்கும் வள்ளண்மை உடையோர், எங்கும் கொடுக்கும் இயல்பினர் என்பதும், அதுவும் பரிசிலர் வேண்டியதை வேண்டியவாறே வழங்கும் இயல்புடையவர் வள்ளல்கள் என்பதும் தங்கள் வறுமை உடனே களைய வேண்டும் என்ற ஆர்வமே அவர்களை நேடியாகக் களம் நோக்கிச் செல்ல வைக்கிறது என்பதும் இப்பாடல்வழி அறியமுடிகிறது.

போராயினும் ஏராயினும் பயன் பெறுபவர் குடிமக்களே என்பதையும் இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது. மேலும்,போர்க்களத்தின் பயங்கரமான காட்சிகளைக் காட்டுவதன்மூலம் "போர் செய்யற்க' என்ற உணர்வைத் தோன்றச் செய்வதும் சிறப்பு; நாட்டைக் காக்கும் மன்னனும் வயலைக் காக்கும் உழவனும் தொழிலால் வேறுபட்டவர் அல்லர் என்பதைப் பரணரின் உருவகக் காட்சி நமக்கு உணர்த்துகிறது.

புலவர்க்கே அமைந்த கற்பனைத் திறத்துடன் போர் மற்றும் உழவுத் தொழிலின் அறிவும் அனுபவமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற புலவர் பெருமகனாக பரணரைக் காண இப்பாடல் துணை செய்கிறது. வள்ளுவர்போல் பரணரும் உழவன் மேன்மையை உணர்த்துதாகவும் இந்தப் பாடலைக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.