
பேச்சு வழக்கில் இருக்கும் சொற்களை, காப்பியத்தில் ஆங்காங்கே பயன்படுத்துகிறான் கம்பன். உதாரணத்துக்கு, "கம்பலை' என்னும் சொல். சோகம் தாக்கிய ஒருவன் அழுது புலம்பிக் கொண்டிருப்பதைக் குறிக்க, "அவன் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறான்..' என்று சொல்கிறோம். "கண்ணீர்' என்றால் தெரிகிறது; "கம்பலை' என்றால் என்ன?
தமிழின் சிறப்பு, பொருள் இல்லாத சொல் ஒன்றுமில்லை என்பதுதான். அதனால்தான், "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்கிறது தொல்காப்பியம்.
கம்பலை என்பதற்கு "அரற்றுதல்' என்று விளக்கம் தருகிறது தமிழ் அகராதி. பொருள் இல்லாத பேச்சு ஓசை. "கம்பலை' என்னும் சொல்லை, மிகப் பொருத்தமான ஓர் இடத்தில் வைத்திருக்கிறான் கம்பன்.
சீதையைப் பிரிந்த பின் இராம இலக்குவர்கள், கிட்கிந்தை நோக்கி வருகிறார்கள். அனுமனின் அணுக்கம் கிடைக்கிறது; சுக்ரீவனின் நட்பு கிடைக்கிறது. வாலி கொல்லப்பட்ட பின்னர், சுக்ரீவனுக்குப் பட்டமும் கட்டியாயிற்று. சீதையைத் தேட ஆட்களை அனுப்புவதே அடுத்த வேலை. சரியாக, மழைக்காலம் குறுக்கிட்டுவிட்டது.
'மழைக்காலம் முடிந்தவுடன், படைகளைத் திரட்டிக்கொண்டு வா. அடுத்த பணிகளைத் திட்டமிட்டு செயல்படலாம்'' என்று சுக்ரீவன், அனுமன், அங்கதன் என அனைவரையும் நாட்டுக்கு அனுப்பிவிட்டான் இராமன்.
தங்களுடன் வந்து அரண்மனையிலேயே தங்கிக் கொள்ளலாம் என்னும் சுக்ரீவனின் அழைப்பை நிராகரித்துவிட்டு, காட்டிலேயே இருக்கிறார்கள் இராமனும் இலக்குவனும்.
மழைக்காலம் முடிவுக்கு வருகிறது. மேகங்கள் வெளுத்து உலவுகின்றன. இடியும் மின்னலும் இல்லாமல் போகின்றன... மழைக்கால இருள் மறைந்து, இரவில் நிலவின் ஒளி வீசத் தொடங்குகிறது. பகலில் பறவைகள் பறக்கத் தொடங்குகின்றன. இப்படி பற்பல காட்சிகளைச் சொல்லும் கம்பன், "மழைக்காலத்தில் ஓயாமல் ஒலி ஏற்படுத்திக் கொண்டிருந்த தவளைகள், இப்போது அமைதியாகிவிட்டன' என்கிறான். அதற்கு அவன் சொல்லும் உவமையும், அந்த உவமையில் பயன்படுத்தும் சொல்லும், அவ்வளவு அழகு.
தொடக்க வகுப்புகளில் குழந்தைகள் பேசிக்கொள்ளும் ஓசையைக் கேட்டிருப்பீர்கள். நிறுத்தாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். சப்தம் அதிகமாகவே கேட்கும்.
அவர்களோ, படிப்பை முடித்து உயர்ந்த வேலைகளில் அமர்ந்திருக்கும்போது, "இவர் என்ன சொல்லப் போகிறார்?' என்று பலரும் எதிர்பார்த்திருக்கும் நாட்களில், பேச்சினைக் குறைத்து, அமைதியாகத் தமது வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள்.
மழைக்காலங்களில் தவளைகளின் ஓசை அதிகமாக இருந்து, மழைக்காலம் முடிந்த பின்னர் அவை அமைதியாகிவிடுவதற்கு, மனிதர்கள் பள்ளிப் பருவத்தில் பேசிக்கொண்டே இருந்து, பக்குவம் அடைந்த நிலையில் பேச்சினை மிகவும் குறைத்துக் கொள்வதை உதாரணமாகச் சொல்கிறான் கம்பன். பாடல் இதுதான்:
கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலைப்
பல்விதச் சிறார் எனப் பகர்வ பல் அரி,
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா
நல்லறிவாளரின் அவிந்த நா எலாம்.
இந்தப் பாடலின் முதல் வரியில் "கம்பலை' என்னும் சொல் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.
ஆரம்ப வகுப்புகளில் மாணவர்கள் பெரும்சப்தமிட்டுப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால், என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியுமா என்ன?
மாணவர்கள் வகுப்புகளில் பேசிக்கொள்ளும், பொருள் புரிந்துகொள்ள முடியாத பேச்சு ஒலியைக் குறிப்பதற்கு "கம்பலை' என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறான் கம்பன்.
கம்பலை என்னும் சொல்லுக்கான பொருள் இப்போது நமக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டதல்லவா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.