
ஈ தல் அறம்;
தீவினைவிட்டு ஈட்டல்பொருள்;
எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து
ஆதரவு பட்டதே இன்பம்;
பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
என்கிறாள் ஒளவை. "அறம், பொருள், இன்பம், வீடு' என்னும் நான்கினையும் வரிசைப்படுத்தித் தமிழ் நமக்குச் சொல்கிறது. "அறம் தவறாத வாழ்க்கை வாழ வேண்டும்; வாழ்க்கைக்குத் தேவையான பொருளையும் அறத்தின் வழி நின்று சம்பாதிக்க வேண்டும்; வாழ்க்கையின் இன்பங்களை, அப்படி சம்பாதித்த பொருளின் மூலம் அடைய வேண்டும்.
இந்த வழியில் அறம், பொருள் இன்பம் மூன்றிலும் நிறைவு கண்டு வீடுபேற்றினை அடைய வேண்டும் என்பதையே நமது முன்னோர்கள் வலியுறுத்தினர். "வீடு' பெறுவது என்பது அனைத்தில் இருந்தும் நாம் விடுதலை பெறுவதுதான். படுவது, "பாடு' என்று ஆனதுபோல், சுடுவது "சூடு' என்று ஆனதுபோல், கெடுவது "கேடு' என்று ஆனதுபோல், விடுவது, "வீடு' என்று ஆனது. "விட்டு விடுதலை ஆகு' என்கிறான் பாரதி.
இப்போது, தலைப்பினை ஒருமுறை பாருங்கள். புகையினால் வரும் தீமைகள் பெரும் பட்டியலாக நீளும். அது எப்படி நமக்கு உறவாக இருக்க முடியும்? "உறவாக இருக்கும்' என்று உறுதியாகச் சொல்கிற கம்பன், நம்மைக் கோசல நாட்டுக்கு கூட்டிப்போகிறான். மிகுந்த வளமுடைய நாடு அது. அதற்குப் பல காரணங்களைக் காட்டும் கம்பன், "புகையில் நான்கு வகை மட்டுமே அங்கு இருந்ததும் காரணம்' என்கிறான்.
அகில் இடும் புகை, அட்டில் இடும் புகை,
நகல் இன் ஆலை நறும் புகை, நான்மறை
புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய்,
முகிலின் விம்மி, முயங்கின எங்கணும்.
பெண்கள் தங்கள் கூந்தலின் மணம் நிலைக்க, எப்போதும் அகில் என்னும் வாசனைக் கட்டையினை அல்லது அந்தத் தூளினை நெருப்பில் இடுவார்கள். அது அருமையான வாசனையைத் தரும். அந்த வாசனையில் கூந்தலை உலர்த்தினால், கூந்தல் வாசனையாக இருக்கும். எனவே, அகில் புகை அங்கு எப்போதும் நிறைந்திருக்கும். வீடுகளில் தங்களுக்கு மட்டுமல்லாமல், தேவைப்படும் மக்களுக்குத் தரவும், சமையல் நடந்துகொண்டே இருக்கும்.
அதனால் சமைக்கப்படும் உணவில் இருந்து எழும் சமையல் வாசனையுடன் கூடிய புகை எப்போதும் அங்கு இருக்கும். அந்த நாட்டில் எப்போதும் ஆலைகள் இயங்கிக் கொண்டிருந்தன. கரும்பாலைகள் அங்கு இயங்கின என்னும் குறிப்பு, கம்பனின் வேறு பாடல்களில் கிடைக்கின்றது.
இயங்கும் ஆலைகளில் புகை வராமல் இருக்குமா? ஆலைகளில் இருந்தும் புகை வெளிவந்து கொண்டிருந்தது. அந்த நாட்டில், எப்போதும் இறையுணர்வுடன் வேள்விகள் நடந்துகொண்டே இருந்தன. வேள்வித் தீயில் இடப்படும் பொருள்களால், அதில் இருந்தும் புகை எழுந்துகொண்டே இருந்தது.
அறம், பொருள், இன்பம், வீடு என்று தொடக்கத்தில் சொன்னதற்கும், இந்த நான்குவித புகைகளுக்கும் என்ன தொடர்பு? உணவு சமைக்கப்பட்டது, தாங்கள் உண்பதற்கு மட்டுமல்ல; தேவைப்படுபவர்களின் பசி தீர்க்கவும்தான். பசித்தவர்க்கு உணவிடுவது அறம். ஆலைகள் இயங்கிக்கொண்டே இருப்பது, பொருள் தொடர்பாக. பெண்கள் கூந்தலுக்கு அகில் மணத்தைப் பரவ விடுவது, இன்பம் நோக்கி. வேள்விச்சாலைகள், வீடு பேற்றினைப் பெறுவதற்காக நடத்தப்படுபவை.
அறம், பொருள், இன்பம், வீடு இந்த நான்கு தொடர்பான புகைகள் மட்டும் அங்கு இருந்தன என்று சொல்வதன் வாயிலாக, நெறி தவறாத வாழ்க்கையை மக்கள் வாழ்ந்தார்கள் என்று நிறுவுகிறான் கம்பன். "மற்ற மூன்றும் சரி; ஆலையில் இருந்து வரும் புகை, மாசு கலந்துதானே வரும்?' என்னும் ஓர் ஐயம் நமக்கு எழலாம் என்று எண்ணியவனைப்போல, அந்த ஐயத்தை நீக்கும் ஒரு சொல்லையும் தனது பாட்டில் கம்பன் சேர்த்திருக்கிறான்.
கம்பன் பாடலை ஒரு முறை பார்த்துவிடுங்கள். அறம், இன்பம், வீடு என்னும் மூன்று தொடர்பான புகைகளைச் சொல்லும்போது, "புகை' என்னும் சொல்லால் குறிப்பிடும் கம்பன், பொருள் தொடர்பான ஆலைகளில் இருந்து வெளியேறுவதை "நறும்புகை' என்று குறிக்கிறான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.