கிறிஸ்து பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, உலகில் மருத்துவம் வளர்ச்சி அடையத் தொடங்கியிருந்தது. 'அக மருந்து' என்னும் உள்ளுக்குச் சாப்பிடும் மருந்துகளையும், 'புற மருந்து' என்னும் உடலுக்கு மேல் செய்யப்படும் சிகிச்சையையும், பட்டியலிட்டு நமது சித்தர்கள் எழுதி வைத்தார்கள். ஆங்கிலேய மருத்துவ முறையில், உடலில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சைகள் வளர்ச்சியடைந்து வருவது, நாம் அறிந்ததுதான்.
கம்பன் குறித்த கட்டுரையில், மருத்துவம் பற்றிய சிந்தனை ஏன் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். அந்த வியப்புக்கு விடை அளிக்க, கம்பன் நம்மைப் போர்க்களத்துக்கு அழைத்துச் செல்கிறான். உறக்கத்தில் இருந்த கும்பகர்ணனை எழுப்பி, அவனுக்குத் தேவையான உணவினை அளித்து, போருக்கான உடைகளைத் தானே போட்டுவிட்டு, ஆயுதங்களை அளித்துப் பெரும்படையுடன் போர்க்களத்துக்கு அனுப்பினான் இராவணன்.
போர்க்களத்துள் நுழைந்த கும்பகர்ணனை வியந்து பார்த்தான் இராமன். அவனது தோற்றமே அப்படி இருந்தது. கும்பகர்ணன், இராவணனுக்குத் தம்பி என்றும், தனக்கு அண்ணன் என்றும் அவனை அறிமுகம் செய்த வீடணன், அவன் ஆற்றல்களை விரிவாக விளக்கினான். அத்துடன், 'இராவணனுக்கு தருமம் பற்றி எடுத்துரைத்தான் கும்பகர்ணன்.
மாற்றான் மனைவியை விரும்புவது குற்றம் என்றும், அவன் சீதையை வஞ்சமாகக் கொண்டு வந்து வைத்திருப்பது மாபெரும் குற்றம் என்றும் விளக்கினான். அவன் பேச்சு இராவணனிடம் எடுபடாததால், போர்க்களத்தில் செத்து போவதே சிறந்தது என்று இங்கு வந்திருக்கிறான்' என்றும் சொன்னான் வீடணன்.
வீடணன் தந்த விளக்கங்களை, அருகில் நின்றிருந்த சுக்கிரீவனும் கேட்டுக் கொண்டிருந்தான். வீடணன் சொல்லி முடித்தவுடன், 'இனி இவனைக் கொல்லுவதால் எந்தப் பயனும் இல்லை.
நம்முடன் இணைத்துக் கொள்ளலாமே' என்று இராமனிடம் கேட்டான் சுக்கிரீவன். 'சரி'யென்று ஒப்புக் கொண்டான் இராமன். கும்பகர்ணன் தலைமையில் நின்றிருந்த பெரும் படையை நோக்கி நடந்தான் வீடணன். அவன் வருவதை, அரக்க வீரர்கள் கும்பகர்ணனிடம் அறிவித்தனர்.
தம்பியை வரவேற்கக் காத்திருந்த கும்பகர்ணனின் கால்களில் வீழ்ந்தான் வீடணன். கும்பகர்ணன். 'நீ இராவணனுடன் இருக்க வேண்டாம். அவன் செய்த குற்றத்துக்கு நீ ஏன் இறக்க வேண்டும்? இராமனிடம் நீயும் வந்து அடைக்கலமாகிவிடு' என்று கும்பகர்ணனை அழைத்தான் வீடணன்.
கடுமையாக அதனை மறுத்துவிட்டான் கும்பகர்ணன். வீடணன். அருமையான பல பாடல்களைக் கம்பன் வைத்துள்ள இடம் இது. அவற்றுள் ஒரு பாடலில், அறுவைச் சிகிச்சை நிபுணன்போல ஓர் உதாரணத்தைச் சொல்கிறான் கம்பன். 'வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாக் காதல் நோயாளன் போல' என்னும் குலசேகர ஆழ்வார் வரிகளை மனதுக்குள் எண்ணிக் கொண்டே, கம்பன் பாடலுக்குள் போகலாம்.
உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்து,
அதன் உதிரம் ஊற்றி,
சுடல் உறச் சுட்டு, வேறு ஓர் மருந்தினால்,
துயரம் தீர்வர்;
கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது
கருமம் அன்றால்
மடலுடை அலங்கல் மார்ப! மதி
உடையவர்க்கு மன்னோ!
'மலர்ந்த மலர்களால் ஆன மாலையை அணிந்த மார்பினை உடையவனே! கடல் நீர் மணக்க வேண்டும் என்று எண்ணி, மிகவும் மணம் வீசும் நறுமணப் பொருட்களைக் கொண்டுபோய் கடலில் கரைப்பது, அறிவுடையவர்கள் செய்யும் செயலா?' என்று வீடணன் கேட்பது பாடலின் கடைசி இரண்டு வரிகள். முதல் இரண்டு வரிகளில் கம்பன் சொல்லும் கருத்தே இங்கு பார்க்கப்பட வேண்டியது.
உடலில் கட்டி போன்று ஒன்று தோன்றுகிறது. சாதாரண மருந்துகளால் அது குணமாகவில்லை. மருத்துவர், 'இது மாத்திரைகளாலும் மருந்தாலும் குணமாகாது; அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்' என்று நம் சம்மதத்தைக் கேட்கிறார்.
சிகிச்சையில், அந்தக் கட்டி அறுக்கப்படுகிறது; உள்ளே இருக்கும் சீழ் மற்றும் கெட்ட ரத்தம் அனைத்தும் வெளியேற்றப்படுகிறது. அதன் பின்னர், அந்த இடத்தில் கெட்ட திசுக்கள் ஏதும் இருக்கக்கூடாது என்பதற்காக, அதற்கான கார மருந்துகளால், சுட்டுத் தீய்ப்பதுபோல சுத்தம் செய்யப்படுகிறது.
இறுதியாக, அங்கு ஏற்பட்டுள்ள புண்ணைச் சீர்செய்ய வேறு ஒரு மருந்து வைக்கப்படுகிறது. அதன் பின்னரே பூரண குணம் கிடைக்கிறது.
இந்தச் செய்திகளை, பாடலின் முதல் இரண்டு வரிகளில் அப்படியே பொதிந்து வைத்திருக்கிறான் கம்பன். 'இராவணன் நமது குலம் என்னும் உடலில் தோன்றியிருக்கும் கட்டி. அதனை அறுப்பதே தீர்வு என்று வீடணன் கும்பகர்ணனிடம் சொன்னதாகக் கருத்து. தேர்ந்த மருத்துவர், ஒரு சிறிய அறுவை சிகிச்சைபற்றித் தன்னிடம் வந்துள்ள நோயாளிக்கு விளக்குவதுபோல கவிதையை அமைத்திருக்கிறான் கம்பன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நொய்டாவில் மாணவா் நீரில் மூழ்கி பலி: விசாரணை நடத்த தாய் கோரிக்கை!

இந்தியப் பொருளாதார வளா்ச்சி 6.9 சதவீதமாக உயரும்: ஆசிய வளா்ச்சி வங்கி கணிப்பு
உறவுப்பாலம்

இந்த வாரம் கலாரசிகன் - 29-03-2026
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


