
சேவகம் / சேவகன் என்பன முறையே ஊழியம் செய்தல், பிறரின் ஏவல் கேட்போர் என்னும் புரிதலிலேயே இன்று வழக்கில் உள்ளன. முற்காலத்து நூல்களில் இவை வீரம் / வீரன் என்னும் பொருண்மையில் வழங்கியதை அறியலாம்.
தொல் இலங்கைக் கட்டழித்த சேவகன் என்று திருமாலை (இராமனை) குறிக்கும் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையே இதற்கு முதற்சான்று ஆகலாம். கல்விச் சேவகம் கடவோன் என்று பெருங்கதையிலும் (36 :126), புரம்மூன்று உடன் மாட்டிய சேவகன் என்று திருஞானசம்பந்தர் (2:9:6) தேவாரத்திலும் செற்றார் புரம் செற்ற சேவகம் என்று திருநாவுக்கரசர் தேவாரத்திலும் (4:103:2) வருவன காண்க.
அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்
திறல்போற்றி,
பொன்றச் சகட முதைத்தாய் புகழ்போற்றி (24)
என்னும் திருப்பாவைப் பாசுரத்தில் என்றென்றுன் சேவகமே ஏத்தி என்னுமிடத்துச் "சேவகம்' எனும் சொல், வீரம் எனும் பொருளிலேயே ஆட்சி பெற்றுள்ளது.
நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் கண்ணனின் "பாலப் பருவ பராக்கிரம'த்தை' சிறுச் சேவகம் (5-10-3) என்றே குறிப்பிடுகின்றது. சேவக னாகித் திண்சிலை ஏந்தி (2:81) என்று சிவபிரானது வீரத்தைத் திருவாசகம் பேசுகின்றது. இவ்வகையில் திருவாசகத்தில் மேலதிகச் சான்றுகள் உண்டு. சேவ(வு)கப் பெருமாள் கோயில் எனும் நாட்டார் வழக்கிலும் "சேவகன்' எனும் சொல் வீரன் எனும் பொருள் குறித்தே நிற்கின்றது.
இப்பொருள்களைத் தாண்டி, யானை கட்டும் கூடத்தை, சேவகம் எனக் குறிப்பிடுகிறது (அயோத்தி 5:12) கம்பராமாயணம். சேவகம் யானை துயில்இட மாகும் எனத் திவாகர நிகண்டும் பொருள் தருகின்றது.
ஒன்பதாம் நூற்றாண்டில் பெரியாழ்வார் காலத்திலேயே இச்சொல் இன்றைய வழக்கில் உள்ள "பிறருக்கு ஏவல் செய்தல்' என்னும் பொருளிலும் ஆட்சி பெற்றிருந்ததை அறிகிறோம். சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும் என்னும் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு (7) இதனை உணர்த்தும்.
அத்தாணிச் சேவகம் என்பது பிரியாமல் எப்போதும் நெருங்கியிருந்து செய்யும் (ஆஸ்தான) சேவையாகும். அதாவது உயர்ந்தோர்க்குத் தாழ்ந்து நின்று செய்யும் பணிவிடை எனலாம். இதனால் சேவகம் என்னும் இச்சொல்லுக்குப் பண்டு தொட்டு வீரம் /ஊழியம் எனும் இவ்விருவகைப் பொருளும் இருந்து வருவதை உணரலாம்.
சிலப்பதிகாரம் இராமனைச் சேவகன் எனும் சொல்லால், வீரன் என்று குறிப்பதை முன்பே கண்டோம்.
இச்சொல்லையும் பொருளையும் அப்படியே ஏற்றுக்கொண்ட ஆழ்வார்கள் தத்தம் பாசுரங்களில் இராமன் இலங்கையை அழித்த இவ்வீரச் செயலைக் குறிக்கும் போதெல்லாம் ஒன்று போலவே, சேவகன் என்னும் சொல்லை எடுத்தாளுவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
மலையதனால் அணைகட்டி மதிளிலங்கை
அழித்தவனே!
சிலைவலவா சேவகனே சீராமா தாலேலோ!
(726)
என்பது குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி.
ஒருவில்லால் ஓங்குமுந்நீர் அடைத்துலகங்கள்
உய்ய
செருவிலே அரக்கர் கோனைச் செற்றநம்
சேவகனார் (882)
என்பது தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலை.
அரக்கர் குலங்களை முற்றவும் செற்று,
இலங்கையைப்
பூசலாக்கிய சேவகா! எம்மை வாதியேல் (519)
என்பது நாச்சியார் திருமொழி.
மன்னன் இராவணனை மாமண்டு
வெஞ்சமத்துப்
பத்தும் புரளச் சரந்துரந்து
தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை
(க. 98-99)
என்பது திருமங்கையாழ்வாரின் பெரியதிருமடல்.
இங்குக் குலசேகரர் முதலான நால்வரும் இலங்கையை அழித்த இராமனைச் சேவகன் /
சேவகனார் என்றே குறிக்க, ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வாரோ கூடுதலாக, ஏறு எனும் அடை கொடுத்து ஏறு சேவகனார் எனக் குறிக்கின்றார்.
உம்மையானிரந்தேன்! வெறிவண்டினங்காள்!....
திருவண்வண்டூர்,
மாறில் போர் அரக்கன்மதிள் நீறுஎழச்
செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள்
என்மின்களே (3236)
என்பது திருவாய்மொழிப் பாசுரம்.
இங்கும் சேவகன், என்பதற்கு வீரன் என்பதே பொருளாகும். எனினும் வைணவ உரையாசிரியர்களுள் ஒருவரான நம்பிள்ளை இதற்குப் பொருள்விரிக்கும் அழகைப் பாருங்கள்!
சேவகம் என்பது எதிரிகள் கொண்டாடுகின்ற வீரம்; அதாவது எதிரிகளும் மதித்து மேலெழுத்திடுகிற வீரப்பாடு எனவே, சேவகன் என்போன் புகழ் ஏறுகின்ற மாவீரன்; எதற்கும் மேற்பட்ட ஆண்பிள்ளைத் தனத்தையுடையன்.
வியாக்கியான சக்கரவர்த்தி பெரியவாச்சான்பிள்ளை உள்ளிட்ட பலரின் உரைவிளக்கமும் இத்தகையதே.
இந்த உரையாசிரியர்களின் காலத்துக்கு முந்தியவரான கவிச்சக்கரவர்த்தி கம்பர், நம்மாழ்வாரின் ஏறு சேவகன் என்பதை ஏற்றுக் கொண்டு இராமனின் மேலான குணசித்திரத்தை விளக்குதற்கு இதனைத் திறம்படப் பயன்படுத்தியிருப்பதைக் கீழ்க்காணும் பாடலால் அறியலாம்.
தேரில் மயங்கிக் கிடக்கும் இராவணன் மீது கணைதொடுத்துக் கொல்லுமாறு தேரோட்டியான மாதலி வேண்டவும் அதனை ஏற்காத இராமன், அது நீதி அன்று என்று மறுத்துரைக்கிறான்.
இவ்விடத்தில்,
தேறினால் பின்னையாதும் செயற்கு அரிது
ஊறுதான் உற்றபோதே உயிர்தனை
நூறுவாய்' என் மாதலி நூக்கினான்
ஏறுசேவகனும் இதுஇயம்பினான் (9875)
எனப்பேசுகிறார் கவிச்சக்கரவர்த்தி.
இராமனைப் பெருவீரனாகச் சித்திரிப்பதற்குக் கம்பருக்குக் கைகொடுத்தது ஏறு சேவகனார் என்னும் ஆழ்வாரின் இத்திருவாய் மொழியே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.