
தலைவனும் தலைவியும் பிறரறியாதவாறு மலைப்பகுதியில் தம் காதலை வளர்த்து வந்தனர். தோழி இதனை நன்கறிவாள். தினைப்பயிரைக் காவல் செய்வதற்காகத் தலைவியும் தோழியும் வருகின்ற காலத்தில் தலைவன் தலைவியைச் சந்திப்பதற்கு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது.
தினைப் பயிர் அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது. காவல் இனித் தேவையில்லை. தலைவி வீட்டிலேயே இருக்கும் சூழல் உருவாகும். இந்நிலையில் தோழி தலைவனுக்கு அறிவுறுத்துவதாகப் பொதும்பில் கிழார் என்ற புலவர் பாடிய பாடல் இடம் பெற்றுள்ளது.
தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென
துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி
கல்லென் சுற்றம் கைகவியாக் குறுகி
வீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பால்
கல்லா வன்பறழ்க் கைந்நிறை பிழியும்
மாமலை நாட மருட்கை உடைத்தே
செங்கோல் கொடுங்குரல் சிறுதினை வியன்புனம்
கொய்பதம் குறுகும் காலைஎம்
மைஈர் ஓதி மாண்நலந் தொலைவே (நற்றிணை. பா. 57)
மலையில் சிங்கம் முதலிய விலங்குகள் உள்ள பகுதியில் வேங்கை மரத்தின் அடியில் காட்டுப் பசு தன் கன்றோடு சேர்ந்து தங்கியிருக்கும். அவை தூங்குவதைக் கண்ட பெண்குரங்காகிய மந்தி, மரத்தின் மேல் அமர்ந்து ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும் தன் இனமாகிய குரங்குக் கூட்டத்தினரைப் பார்த்து ஒலியெழுப்ப வேண்டாம் எனச் சைகை செய்தது.
பின்னர் தனியாக உண்ணும் தொழிலை அறியாத தன் குட்டியை அந்தக் காட்டுப்பசுவின் அருகில் அழைத்து வந்து அதன் பால்சுரக்கும் மடியிலிருந்து பாலைப் பிழிந்து தன் குட்டிக்களிக்கும். இத்தகைய மலை நாட்டனே, சிவந்த அடியினையும் வளைந்த கதிரையும் உடைய சிறிய தினையின் பெரிய கொல்லையில் தினைக் கதிர் அறுக்கும் பருவம் வந்தது.
தினைக் காவலுக்காக இதுநாள் வரை வந்து கொண்டிருந்த தலைவி இனி வராமல் வீட்டிலேயே தங்கியிருப்பாள். தலைவிக்கு வெளிவர முடியாதபடி காவல் இருக்கும்; உன்னைச் சந்திக்காமல் தலைவி மெலிந்து அழகிழந்துவிடுவாள். அந்நிலை என்னை மயங்கச் செய்யும் என்கிறாள் தோழி.
தோழியின் கூற்றில் குறிப்புப்பொருள் ஒன்றுண்டு. தலைவி மெலியாமல் இருக்க தலைவன் எப்போதும் உடனிருக்க வேண்டும். இந்நிலை உருவாக தலைவன் தலைவியை மணம் செய்து கொள்ள வேண்டும் என்பதாகும்.
மேலும் காட்டுப்பசுவானது உறங்குவதைப் பார்த்து பெண்குரங்கானது தன் குட்டிக்கு பாலூட்டுவதற்கு தம் கூட்டத்தாரைப் பார்த்து சைகை செய்து பசியைப் போக்குவது போல, வீட்டிலே இருப்பவர்கள் உறங்கும் காலம் பார்த்து காவலைக் கடந்து தலைவியை உன்னிடம் ஒப்படைப்பேன் எனக் குறிப்பால் உணர்த்துவதாகவும் கொள்ள இடமுண்டு.
எவ்வாறேனும் தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் நடக்க தான் எச்சூழலையும் எதிர் கொள்ளத் தயாராயிருப்பதைத் தலைவனுக்குத் தெளிவுபடுத்துகிறாள் தோழி. மேலும் மந்தி கொடிய விலங்குகளுக்கு அஞ்சாது சென்று தன் குட்டிக்குப் பாலூட்டியது போல் நீயும் கொடிய பாலை வழியில் சென்று பொருளீட்டிக் கொணர்ந்து தலைவியை மணந்து பாதுகாப்பாயாக என அறிவுறுத்துவதாகவும் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.