

நெல்லை ஜெயந்தாவுக்கு "கவிக்கோ' விருது வழங்கப்பட்ட விழாவுக்காக வேலூர் சென்றிருந்தபோது தனது "நெடுவழி நினைவுகள்' புத்தகத்தைத் தந்தார் பேராசிரியர் கி. பார்த்திபராஜா. கல்லூரிப் பேராசிரியர் மட்டுமல்லாமல், எழுத்தாளரும், நாடகவியலாளருமான அவரை நான் அப்போதுதான் முதல் முதலாகப் பார்க்கிறேன்.
சென்னை திரும்பியதும் "நெடுவழி நினைவுகள்' புத்தகத்தை, எனது நாளிதழ் பணிகள் முடிந்த பிறகு ஒருநாள் நள்ளிரவுக்குப் பிறகு புரட்டிப் படிக்கத் தொடங்கினேன். முதல் கட்டுரையே திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடைக்காரர் பற்றியது. என்னை ஆர்வம் பற்றிக் கொண்டது. அரை நூற்றாண்டுக்கு முன்னால் நானிருந்த நிலையில், அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்திபராஜா....
சென்னை திருவல்லிக்கேணியிலும் லஸ் முனையிலும்; மதுரை புதுமண்டபத்திலும், ரீகல் டாக்கீஸ் அருகிலும்; திருச்சி தெப்பக்குளம் அருகில்; கோவை ராஜவீதியில் விஜயா பதிப்பகம் அருகில் உள்ள கடைகளில் எல்லாம் வாங்கி சேகரித்த நூற்றுக்கணக்கான புத்தகங்களுக்கு நடுவேதான் நான் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அட, நம்மைப்போல ஒருவர் என்று ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினால் பக்கம் புரண்டதும் தெரியவில்லை, இரவு கடந்ததும் தெரியவில்லை.
தனது கல்லூரிப் பருவத்தில் தொடங்கித் தன்னைப் பேராசிரியராக நிலைநிறுத்திக் கொண்ட இற்றைநாள் வரையிலான பலதரப்பட்ட நினைவுகள் அவரது "நெடுவழி நினைவுக'ளில் பதிவாகி இருக்கின்றன. வேடிக்கை என்னவென்றால், திருவல்லிக்கேணி புத்தகக் கடை மட்டுமல்ல, எட்டயபுரம், அமிர்தசரஸ், ஜான்சி, அலகாபாத், வாரணாசி, சாந்தி நிகேதன் என்று நான் என்றோ தேடி பயணித்த இடங்களுக்கு அவரும் பயணித்திருக்கிறார் என்பதால் என்னால் புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை.
காலமும், நிகழ்வுகளும் வேறுபட்டுள்ளனவே தவிர, அந்த இடங்களுக்குச் சென்றபோது எழுந்த உணர்வுகள் எங்கள் இருவருக்கும் ஒன்றுபோலத்தான் இருந்தது என்பதை நினைக்கும்போது நான் சிலிர்க்கிறேன்.
பகத்சிங் அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட்டு அவர் தெரிவித்திருக்கும் பதிவு இது- "இந்திய வரலாற்றின் ஈடு இணையற்ற நாயகனாகிய பகத்சிங்குக்கு அவனுடைய கிராமத்தில் அதி அற்புதமான அருங்காட்சியகத்தை அமைத்திருக்கிறார்கள். நம் தாய்த் தமிழ்நாட்டில்? சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள், சிந்தனையாளர்கள் வாழ்ந்த இடங்களில்? ஏக்கமாக இருந்தது...'
அவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னால் அங்கே போயிருந்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வும், என்னில் எழுந்த கேள்விகளும் பார்த்திபராஜாவால் எழுத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்த்தபோது நான் விக்கித்துத்தான் போனேன்.
ஒரு பின்னோட்டம்போல, நினைவலைகள்போல அவர் தனது மனதில் பதிந்துவிட்ட சம்பவங்களை நாடக ஆசிரியரின் பாணியில் ஒரு கதைசொல்லிபோலச் சொல்லிக்கொண்டு போகிறார். இதை நினைவுப் பின்னோட்டம் என்றும் சொல்லலாம், நிகழ்வுகளின் பதிவு என்றும் சொல்லலாம்.
திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடைக்காரரும், காந்தி சாரும், ஆட்டோ ஓட்டுநர் சுக்தேவ் சிங்கும், கணபதி சாரும், நடிகை ரேவதியும் படித்து முடித்து ஒரு வாரம் கடந்தும்கூட மனதில் நிழலாடுகிறார்கள்.
பார்த்திபராஜா பதிவு செய்திருக்கும், நானும் அனுபவித்து உணர்ந்த ஓர் உண்மை-
"கண்ணுக்கு எட்டிய தூரம் கங்கைக் கரையில் எரிக்கப்படும் எந்தப் பிணத்திலிருந்தும் துர்வாடை இல்லை. காசியில் எரிக்கப்படும் பிணம் நாற்றமடிக்காது என்பது ஐதீகம். ஆழமாக மூச்சிழுத்துப் பார்த்தேன். எனக்குள் இருந்த நாத்திக மனம், காற்றில் பிண நாற்றத்தைத் தேடியது. ம்கூம்... நாத்திகனாவது, ஆத்திகனாவது... எவனுக்கும் நாற்றம் கிடையாது, போ... என கங்கா மாதா எல்லாவற்றையும் உட்செரித்துக் கொண்டு தன் நெடிய கூந்தலைப் பரப்பியபடி நகர்ந்து கொண்டிருக்கிறாள்'
பார்த்திபராஜா, இப்போது நீங்கள் மீண்டும் ஒருமுறை வாரணாசி சென்று பார்க்க வேண்டும். நாம் அப்போது பார்த்த அழுக்குப் பிடித்த காசியாக இப்போது அது இல்லை!
----------------------------------------------------------
புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது, "மக்மோஹன் கோடு' என்கிற புத்தகம். இந்திய-சீனப் போர், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்னைகள் குறித்த அற்புதமான பதிவு. ஆங்கிலத்தில் கே.என். ராகவன் எழுதிய மூலத்தை ஸ்ரீதர் திருச்செந்துறை என்பவர் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
இந்திய சீனப் போரைப் பற்றி இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. வேடிக்கை என்னவென்றால், அந்தப் போரைப் பற்றி சீனத் தரப்பிலிருந்து ஒரு புத்தகமும் வெளிவரவில்லை. எல்லையில் நடந்த சிறு மோதல் என்பதற்கு மேல் வரலாற்றில் அதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்பது சீனாவின் நிலைப்பாடு.
இந்திய-சீன எல்லை பிரச்னைக்குக் காரணம் இந்த இரு நாடுகளும் அல்ல, பிரிட்டன். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி, தங்களது காலனிகளின் எல்லைகளை, அவ்வப்போது மாற்றுவதும், சேர்ப்பதுமாக அந்தந்த வைஸ்ராய்கள், கவர்னர் ஜெனரல்களின் மனப்போக்குக்கு ஏற்றபடி செயல்பட்டது. காலனிய ஆட்சியிலிருந்து விடுபட்டபோதுதான் எல்லை பிரச்னை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.
இரு நாடுகளுக்கும் இடையே 3,325 கி.மீ. எல்லை மேற்கு, மத்திய, கிழக்குப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1914-இல் சிம்லாவில் பிரிட்டன், சீனா, திபெத்துக்கு இடையே நடந்த முத்தரப்பு மாநாட்டின்போது, பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லையை விரிவாக்க, பிரிட்டனும், திபெத்தும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டன. பிரிட்டிஷ் அதிகாரியான மக்மோஹன் என்பவரால் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. அதை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை.
பிரிட்டன் தன் வசதிக்கேற்றபடி, எல்லையை வரைபடங்களில் குறித்தது. இந்த வரைபட விரிவாக்கம்தான், பின்னாளில் சுதந்திர, ஜனநாயக இந்தியாவுக்கும், கம்யூனிஸ்ட் சீனாவுக்கும் இடையே 1962-இல் போராக உருவெடுத்தது. இந்திய-சீனப் போர் குறித்தும், எல்லை பிரச்னை குறித்தும் புதிய வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார் கே.என். ராகவன்.
-----------------------------------------------------
மகாகவி பாரதியை நினைக்க நினைக்க பிரமிப்புதான் மேலிடுகிறது. அவர் செய்து காட்டியிருக்கும் புதுமைகள் எத்தனை எத்தனையோ.... 1916- ஆம் ஆண்டில், அதாவது இன்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கும் முன்னர், "ஹைக்கூ' வை "ஹொக்கு' என்கிற பெயரில் அறிமுகம் செய்தவரும் அவரே...
புறநானூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றனார் இப்போது பிறந்து வந்து கேட்டால், இந்தத் துளிப்பாவை ரசிப்பார். என்னைப்போல, "அட, இது யார் எழுதியது' என்று வியந்து விசாரிப்பார்-
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
காற்றுக்கு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 29-03-2026

6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்

இந்த வாரம் கலாரசிகன் - 08-03-2026

இந்த வாரம் கலாரசிகன் - 08-02-2026
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

