ஞாயிற்றை நோக்கும் நெருஞ்சி

தலைவனின் பிரிவும் தலைவியின் நெஞ்சமும்
Published on
Updated on
1 min read

தலைவனொருவன் தலைவியை மணம் செய்ய விரும்பி பொருள் தேடச் சென்றிருந்தான். தலைவனின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாத தலைவியால் எவ்வாறு ஆற்றியிருக்க முடிகிறது எனக் கேட்க வேண்டும் என நினைத்தாள் தோழி. தலைவனின் பிரிவு தலைவிக்குத் துயர் என்பதை உணர்ந்து தலைவியிடம் பிரிவு குறித்த மனநிலையை அறியப் பேசுகிறாள்.

அப்போது, தலைவி பின்வருமாறு பதிலளிக்கிறாள்.

எழுதரு மதியம் கடங்கண் டாஅங்கு

ஒழுகுவெள் அருவி ஓங்குமலை நாடன்

ஞாயிறு அனையன் தோழி

நெருஞ்சி அனையஎன் பெரும்பணைத் தோளே

(குறுந். 315)

வானத்திலே தோன்றி எழுகின்ற முழுநிலவானது கடலில் பிரதிபலிப்பது போல் ஒழுகும் வெண்மையான அருவியினையுடைய உயர்ந்த மலைகளைக் கொண்ட நாட்டை உடையவனாகிய தலைவன், ஞாயிறாகிய கதிரவனைப் போன்றவன்; என்னுடைய பெரிய மூங்கில்களைப் போன்ற தோள்கள் நெருஞ்சிப்பூவைப் போன்றவை எனத் தெரிவிக்கிறாள் தலைவி.

இப்பாடலில் தலைவனை ஞாயிறு எனக் கூறும் தலைவி, தன்னை நெருஞ்சிப்பூ எனக் கூறுவதற்குக் காரணம் உண்டு. நெருஞ்சிப் பூவானது ஞாயிறானது கீழ்த்திசைத் தோன்றும்போது கீழ்த்திசை நோக்கும். உச்சி வேளையில் உச்சியை நோக்கி நிற்கும், ஞாயிறு மேற்குத் திசையில் சாயும்போது நெருஞ்சிப்பூவும் அதே திசையைப் பார்க்கும் எனத் தெளிவுபடுத்துகிறாள் தலைவி.

தலைவனை எதிர்நோக்கியே தலைவி காத்திருக்கிறாள் என்பதையும் அவர்களிருவருக்குமான உள்ளப் பிணைப்பையும் தலைவனின் மனம் போல் தான் நடப்பேன் என்பதையும் தோழி அறியச் சொல்கிறாள் தலைவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com