கடலுக்கு என்னென்ன பெயர்கள் உண்டு என்று கேட்டால், அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் என்று உடனே நம்மால் பட்டியலிட முடியும். உண்மையில் கடல் ஒன்றுதானே! அந்தந்த பகுதிகளில் வாழும் மனிதர்கள் அங்குள்ள கடல் பகுதிக்கு, விருப்பப்பட்ட பெயர்களைச் சூட்டிக்கொண்டார்கள்.
ஆனால், 'கடல்' என்பதற்குத் தமிழில் பல பெயர்கள் உண்டு. அவற்றில் நான்கினை ஒரு கவிதையில் நமக்குச் சொல்கிறான் கம்பன்.
காப்பியத் தலைவனான இராமனின் தந்தை தயரதன். அனைத்துப் பண்புகளும் நிறைந்தவன். பேராற்றல் மிக்கவன். மக்களை உயிராக நேசித்தவன். அவர்களின் துன்பங்களைத் தனது துன்பமாக உணர்ந்து ஆட்சி செய்தவன். ஒரு கவிதையில், தயரதனின் நான்கு பண்பு நலன்களைக் குறிப்பிடுகிறான் கம்பன். வள்ளல் தன்மை மிக்கவனாக இருந்தான் அவன், தனது நாட்டு மக்களுக்கு என்றில்லை; உதவி கேட்பவர்கள் யாராயிருந்தாலும், யார், எவர் என்று சிந்திக்காமல் வழங்கியவன்.
'எனக்கு உதவி வேண்டும்' என்று தயரதனிடம் வந்து நின்றவர்களின் கூட்டம் கடல் போல் இருந்தது. அந்தக் கடலை எப்படிக் கடந்தான் அவன்?
அவனிடம் வலிமையான தெப்பம் ஒன்று இருந்தது. அந்தத் தெப்பத்தில் 'இரப்பவர்கள்' என்னும் கடலை எளிதாகக் கடந்துவிட்டானாம் தயரதன்.
எவரிடமும் இல்லை என்று சொல்லாத, வாரி வழங்கும் குணம் என்னும் தெப்பம்தான் அது!
அறிவுக்கு எல்லை உண்டா? கற்கக் கற்க, அதன் எல்லை விரிந்துகொண்டேதான் செல்லும். அறிவுக்கடல் என்று அதனால்தான் சொல்லப்படுகிறது.
தயரதன் அறிவுக்கடலைக் கடந்தானாம். அந்தக் கடலைக் கடக்க என்ன தெப்பம் இருக்கிறது? 'நூல்கள்தான் தெப்பம்' என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், அது உண்மையில்லையாம்; அறிவுக்கடலைக் கடக்க நூல்களே தெப்பமாக இருந்தால், நிறைய நூல்களைத் தன்னிடம் வைத்திருக்கும் நூலகங்கள்தான் அறிவில் சிறந்ததாக இருக்க வேண்டும்.
'நூல்கள்' என்பனவற்றைத் தாண்டி, மற்றொன்றைக் கம்பன் சொல்கிறான். நுண்ணிய செய்திகளைச் சொல்லும் நூல்களையெல்லாம், கற்று, ஆராய்ந்து தெளிய வேண்டுமாம். அறிவுக்கடலைக் கடக்க, நூல்களை ஆய்ந்து அறிந்த தெளிவுதான் தெப்பமாக இருக்கும். அந்தத் தெப்பமும் தயரதனிடம் இருந்தது.
பகைவர்களும் தயரதனுக்கு நிறைய பேர் இருந்தனர். 'பகைவர்களின் கடல்' என்று சொல்லுமளவுக்கு தயரதனுக்குப் பகைவர்கள்.
இந்தப் பகைவர் கடலை எப்படிக் கடப்பது? அதற்கும் தயரதனிடம் ஒரு தெப்பம் இருந்தது. உள்ளத்தில் இருந்த கலக்கமில்லா உறுதி; அந்த உறுதி காரணமாக அவனது கையில் சுழன்ற வாள். கையில் சுழன்ற வாளையே தெப்பமாகக் கொண்டு, பகைவர்களை வெற்றி கண்டு, அந்தக் கடலையும் வெற்றிகரமாகக் கடந்துவிட்டானாம் தயரதன்.
வாழ்வில் அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் நிறைய உண்டு. ஐம்புலன்களால் வருவன மட்டுமல்ல; செல்வம் அதிகம் சேர்த்திருப்பவர்கள் அனுபவிக்கும் இன்பங்கள் பல உண்டு.
செல்வத்தைச் சேர்த்து வைப்பதில் மட்டுமே மகிழ்ச்சி கொள்ளாமல், அதனை நல்ல முறையில் பயன்படுத்த ஒரு மனம் வேண்டும். அந்த மனம் தயரதனிடம் இருந்தது. அரசன் என்பதால், அவனிடம் எந்த வளத்துக்கும் குறைவில்லை. கடலளவு செல்வம்! சிறந்த முறையில் அதனை அனுபவிப்பது எப்படி என்னும் தெளிவான மனநிலை இருந்ததால், அந்தத் தெளிவையே தெப்பமாகக் கொண்டு, செல்வக்கடலையும் கடந்தானாம் தயரதன்.
நான்கு கடல்களைக் கடந்தான் தயரதன் என்று சொல்லும் கம்பனின் கவிதை இது:
ஈந்தே கடந்தான். இரப்போர் கடல்; எண்
இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான். அறிவு என்னும்
அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான். பகை வேலை;
கருத்து முற்றத்
தேய்ந்தே கடந்தான். திருவின் தொடர்
போக பெüவம்
கடலைக் குறிக்கும் பல பெயர்கள் தமிழில் உண்டு. அவற்றில் கடல், அளக்கர், வேலை, பௌவம் என்னும் நான்கு பெயர்களை ஒரே பாடலில் தருகிறான் கம்பன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பன்முகத் தன்மை கொண்ட தமிழறிஞர்: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

ஆனந்தரங்கரும் பாவேந்தரும்...
கரணம்

'ரத்தினக் குவியல்...!'
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


