சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கம்பனின் தமிழமுதம் - 13: கயிறுகளில் இத்தனை வகைகளா!

சீதையை அசோகவனத்தில் சந்தித்த பின்னர், தனது இலங்கை வருகையை அடையாளப்படுத்த விரும்பினான் அனுமன். அதனால் அசோக வனத்தையே அழித்தான்.

News image

கம்பர்

Updated On :6 அக்டோபர் 2024, 2:12 pm

சீதையை அசோகவனத்தில் சந்தித்த பின்னர், தனது இலங்கை வருகையை அடையாளப்படுத்த விரும்பினான் அனுமன். அதனால் அசோக வனத்தையே அழித்தான். சீதை கீழே அமர்ந்திருந்த மரம் மட்டும் பாதிக்கப்படவில்லை.

ஏதோ ஒரு குரங்கு அசோக வனத்தை அழிப்பதை அறிந்த வீரர்கள் அணியணியாக வந்து தாக்கினர். இராவணன் புதல்வன் அக்ககுமாரன் உட்பட எல்லோரையும் கொன்றான் அனுமன். இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட இந்திரசித்தன் கொதித்தான். நேராகத் தந்தையிடம் போனான்.

''அரக்கர்களின் ஆற்றல் எத்தகையது! ஆனால், ஒரு குரங்குடன் போரிட்டு மிகப் பெரிய வீரர்கள் செத்துவிட்டார்கள். அவர்களையெல்லாம் தனித்தனியே அனுப்பிக் கொன்றது நீதான்!'' என்று இராவணனிடம் கோபமாகப் பேசினான்.

''நானே போகிறேன்; அந்தக் குரங்கினை நானே சிறை செய்து உன்னிடம் அழைத்து வருகிறேன். நீ எந்தக் குழப்பமும் இல்லாமல் இரு'' என்று தந்தையிடம் சொல்லிவிட்டு, அனுமனைக் கைது செய்துவரக் கிளம்பினான்.

பல விதமான ஆயுதங்களுடன், மிகப் பெரிய படை இந்திரசித்தனுடன் சென்றது. அவர்கள் இருவருக்கும் நடந்த கடுமையான போரினைக் கம்பன் ரசித்து ரசித்து எழுதுகிறான்.

அரக்க வீரர்கள் குவியல் குவியலாக இறந்து விழுவதைப் பார்த்த இந்திரசித்தன், 'இவனைச் சிறை பிடிக்க இது ஒன்றுதான் வழி' என்று எண்ணி, அயன்படையை (பிரம்மாஸ்திரம்) விட்டான். அயன்படை அனுமனைக் கட்டியது. அனுமன் கீழே சாய்ந்தான். அவனை அரண்மனை நோக்கித் தெரு வழியே இழுத்துச் சென்றான் இந்திரசித்தன். அரக்கர், அனுமனைச் சூழ்ந்து 'ஆவலம் கொட்டி' நடந்துவந்தனர் என்று எழுதுகிறான் கம்பன். தோற்றவரைச் சூழ்ந்து நின்று, ஏளனம் செய்து, கைதட்டி, ஆரவாரம் செய்து திட்டுவதை, 'ஆவலம் கொட்டல்' என்று தமிழ் குறிக்கிறது.

அனைத்து அவமானங்களையும் பொறுத்துக்கொண்டு, 'இராவணனைப் பார்க்கும் வாய்ப்பினை விட்டுவிடக்கூடாது' என்னும் ஒரே நோக்கத்துடன் சென்றான் அனுமன். இராவணன் அமர்ந்திருந்த கம்பீரத்தை, நாம் வியக்கும் வண்ணம் விவரித்து எழுதுகிறான் கம்பன்.

கொஞ்சமும் அச்சமின்றி, தெளிவாக அனுமன் பேசிய பேச்சில் இன்னும் கோபமுற்ற இராவணன், ''இவனைக் கொல்லுங்கள்'' என்று ஆணையிட்டான்.

''அண்ணா, தூதனாக வந்தவனைக் கொல்லக்கூடாது!'' என்று தடுத்தான் வீடணன். ''சரி. இவனைக் கொல்லவேண்டாம். இவன் வாலில் தீ வையுங்கள்! நகர வீதிகளைச் சுற்றி அழைத்துப்போய், எல்லையைத் தாண்டி விட்டுவிடுங்கள்!'' என்று ஆணையிட்டான் இராவணன்.

''அயன் படையை விலக்கிக் கொள்கிறேன். அவன் தப்பித்துவிடாதவாறு கயிறுகளைக் கொண்டு இறுகக் கட்டுங்கள்'' என்றான் இந்திரசித்தன். அவன் சொன்ன அளவில், கயிறுகளைக் கொண்டு வந்து குவித்தனர் அரக்கர்.

'தமது மனைவியரின் கழுத்தில் இருந்த தாலிக்கயிறு தவிர, பிற அனைத்துக் கயிறுகளையும் கொண்டு வந்து அனுமனைக் கட்டினர் அரக்கர்' என்று எழுதினான் கம்பன். என்னென்ன கயிறுகள் என்பதனைக் கம்பன் பட்டியலிட்ட கவிதை இது;

நாட்டின், நகரின், நடு உள்ள கயிறு

நவிலும் தகைமையவே-

வீட்டின் ஊசல்,நெடும் பாசம் அற்ற;

தேரும், விசி துறந்த;

மாட்டும் புரவிஆயம் எலாம், மருவி

வாங்கும் தொடை அழிந்த;

பூட்டும் வல்லி மூட்டோடும் புரசை

இழந்த, போர் யானை !

இந்த ஒரு கவிதையில் வெவ்வேறு வேலைகளுக்குப் பயன்படும் கயிறுகளின் வெவ்வேறு தமிழ்ச் சொற்களைக் கம்பன் குறிப்பிடுகிறான்.

வீட்டில் இருக்கும் ஊஞ்சலில் கட்டும் கயிறு - பாசம்; தேரில் கட்டப்படும் கயிறு - விசி; லாயத்தில் குதிரைகளைக் கட்டுவதற்கான கயிறு - தொடை; யானையின் வயிற்றில் கட்டப்படும் கயிறு - வல்லி; போருக்குச் செல்லும் யானையின் கழுத்தில் கட்டப்படும் கயிறு - புரசை.

'கயிறு' என்று பொதுவாக நாம் குறிப்பிடுகிறோம். ஆனால், ஒவ்வொரு வேலைக்குப் பயன்படும் கயிறுக்கும் தமிழில் வெவ்வேறு சொற்கள் பயன்பாட்டில் இருந்ததை, கம்பனின் கவிதை வாயிலாக அறிகிறோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.