கம்பனின் தமிழமுதம் - 8: தமிழால் புகழ் கொண்டவன்!

கானகத்தில் இருந்த இராமன், அகத்திய முனிவரைச் சந்திக்கச் செல்லும் காட்சியில் முனிவரின் பெருமைகளை வரிசைப்படுத்திப் பேசுகிறான் கம்பன்.
கம்பர்
கம்பர்
Published on
Updated on
2 min read

கானகத்தில் இருந்த இராமன், அகத்திய முனிவரைச் சந்திக்கச் செல்லும் காட்சியில் முனிவரின் பெருமைகளை வரிசைப்படுத்திப் பேசுகிறான் கம்பன். ஐந்து செய்திகளை, ஐந்து பாடல்களில் குறிப்பிடுகிறான். அனைத்தும் புராணத்தில் உள்ள கதைகள்.

ஒரு காலத்தில், தேவர்களுக்கு, அசுரர்கள் பெரும் தொல்லை கொடுத்து வந்தனர். தேவர்கள் இந்திரனிடம் முறையிட, இந்திரனுக்கு அஞ்சி, எல்லா அசுரர்களும் கடலுக்குள் சென்று மறைந்துகொண்டனர். தேவர்கள் அனைவரும், அகத்தியரை அணுகி உதவுமாறு கேட்டுக்கொண்டனர். அகத்தியர், கடல் நீர் முழுவதையும் ஒரு கையால் அள்ளி விழுங்கிவிட்டார். ஒளிந்திருந்த அசுரர்கள் கண்ணுக்குத் தெரிய, இந்திரன் அவர்கள் அனைவரையும் கொன்றான். பின்பு தேவர்கள் வேண்டியபடி, குடித்த நீரை அகத்தியர் உமிழ, கடல் மீண்டும் நிரம்பியது. இது ஒரு புராணக் கதை.

இல்வலன், வாதாபி என்னும் பெயருடைய இரு அரக்க சகோதரர்கள் இருந்தனர். இருவரும், அந்தணர்களையும் முனிவர்களையும் விருந்துக்கு அழைப்பார்கள். வாதாபி ஆடாக மாற, அந்தக் கறியைச் சமைத்து உணவு செய்து, வரும் அந்தணர்களுக்கும் முனிவர்களுக்கும் கொடுப்பான் இல்வலன். உண்டு முடித்ததும், இல்வலன், 'வாதாபி, வெளியே வா' என்று அழைப்பான். சாப்பிட்டவரின் வயிற்றைக் கிழித்து, வாதாபி உயிருடன் வெளியே வருவான். உணவு உண்டவர் மரணமாக, அவரது மாமிசத்தை இருவரும் உண்பார்கள். இது தொடர்ந்து நடந்தது.

ஒரு முறை அகத்தியரை அழைத்து உபசரித்த பின்னர் ''வாதாபி, வெளியே வா!'' என்று இல்வலன் அழைக்க, ''வாதாபி, நீ ஜீரணமாகிவிடு!'' என்று அகத்தியர் சொன்னார். வாதாபி அவர் வயிற்றிலேயே ஜீரணமாகிவிட்டான். பின்பு, இல்வலனை, பார்வையாலேயே சுட்டெரித்துக் கொன்றார் அகத்தியர். இப்படி ஒரு புராணக் கதை.

விந்திய மலை ஒரு முறை, ஆணவத்தால் மிக உயரமாக வளர்ந்துவிட்டது. வான் வழி செல்லும் யோகியர், சூரிய, சந்திரர்களுக்கும் அது இடையூறாக இருந்தது. அனைவரும் அகத்தியரை அணுகி உதவி கேட்டனர், விந்திய மலையை அகத்தியர் தனது காலால் அழுத்த, விந்திய மலை பாதாளத்துள் அமிழ்ந்தது. இது ஒரு புராணக்கதை.

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் கயிலாயத்தில் நடந்தது. உலக மாந்தர்கள் தேவர்கள் என அனைவரும் கயிலாயத்தில் குவிந்தனர். எடை தாளாமல், வடக்கு தாழ்ந்தது; தெற்கு உயர்ந்தது. உயர்ந்து நிற்கும் தெற்கை அழுத்திச் சமன் செய்வதற்காக, சிவபெருமான் அகத்தியரை அழைத்துப் பொதிகை மலையில் அமரச் சொன்னார். பொதிகை மலைக்கு அகத்தியர் வந்து அமர்ந்ததும், உலகம் சமநிலை அடைந்தது. பொதிகை மலைக்கு அகத்தியர் வந்ததைச் சொல்லும் புராணக் கதை இது.

தமிழ்மொழியை உலகுக்கு வழங்கியவர் சிவபெருமான். இறைவன் அருளிய மொழியான தமிழ் மொழிக்கு இலக்கணம் வடித்துக்கொடுத்த பெருமையும் அகத்தியருக்கு உண்டு.

மேற்காணும் ஐந்து செய்திகளை ஐந்து பாடல்களில் சொல்லும் கம்பன், ''இவை அனைத்திலும் அகத்தியருக்கான பெரிய பெருமை என்ன தெரியுமா?'' என்று கேட்பதுபோல, இந்தப் பாடலையும் வைத்திருக்கிறான்.

நின்றவனை, வந்த நெடியோன் அடிபணிந்தான்;

அன்று அவனும் அன்பொடு தழீஇ, அழுத கண்ணால்

'நன்று வரவு' என்று பல நல்லுரை பகர்ந்தான்;

என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்.

'காத்திருந்த அகத்தியனிடம் வந்த இராமன் அவனது அடி பணிந்தான். என்றும் வாழும் தென்னாட்டின் மொழியான தமிழ் மொழிக்கு இலக்கணம் தந்ததால் பெருமை பெற்ற அகத்தியன், அழுத கண்ணீரோடு, 'உன் வரவு சிறப்பானதாக அமையட்டும்' என்று சொல்லி இராமனை அணைத்துக்கொண்டான்' என்பது பாடலின் பொருள்.

'புராணக் கதைகள் எத்தனை இருந்தாலும், அகத்தியனுக்கு இருக்கும் சிறப்பான பெருமை, தமிழுக்கு இலக்கணம் தந்தவன் என்பதுதான்' என்று கம்பன் வலியுறுத்தும் இடம் இது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com