இலக்கிய மேடைகளில் பாரதி!

ஆரம்ப காலங்களில் பாரதி நமக்குப் 'பாட்டுக்கொரு புலவன்', 'புதுயுகக் கவிஞன்', 'புது நெறி காட்டிய புலவர்' என்கிற சிறப்பு அடைமொழிகளைக் கொண்டவராகவே அறிமுகப்படுத்தப்பட்டார்.
Bharadhiyar
மகாகவி பாரதியார் DIN
Published on
Updated on
3 min read

ஆரம்ப காலங்களில் பாரதி நமக்குப் 'பாட்டுக்கொரு புலவன்', 'புதுயுகக் கவிஞன்', 'புது நெறி காட்டிய புலவர்' என்கிற சிறப்பு அடைமொழிகளைக் கொண்டவராகவே அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால், பாரதி மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் விளங்கினார் என்பது பாரதி இலக்கியத்தை ஊன்றிப் படித்த ஒருசிலரே அறிவர்.

இலக்கிய மேடைகளில் பாரதியின் பங்களிப்பு கணிசமானது. அந்த வகையில், சென்னை மாநிலக் கல்லூரி என்று தற்காலத்தில் அழைக்கப்படும் கல்லூரி ஆரம்ப காலத்தில் 'சென்னை பிரசிடென்சி காலேஜ்' என்று பலரும் அறிவர். அந்தக் கல்லூரியின் தமிழ்ச் சங்கத்தில் மேடை ஏறிப் பேசினார் பாரதி.

'கருணை'' என்ற தலைப்பில் பாரதி, சங்கத்தின் வருடாந்திர விழாவில் பேசினார். பாரதியின் முழு சொற்பொழிவும் 'சுதேசமித்திரன்' இதழில் 2941905; 1-5-1905 மற்றும் 251905 ஆகிய தேதிகளில் பதிவாகி உள்ளது.

அவரது சொற்பொழிவில், 'கருணையானது மானுஷிகக் கருணை, தெய்விகக் கருணை என்று இரு வகைப்படும். இவை இரண்டுமே மனிதர்களிடத்துக் காணப்படுவனவேயாம். இவற்றுள்ளே தெய்விகக் கருணையுடையோர் மனிதர்களுக்குள்ளே தேவர்களாவர். அஃதில்லாது, மானுஷிகக் கருணை மட்டுமே உடையோர் சாதாரண மனிதர்களாவர். அம் மானுஷிகக் கருணை யில்லாதாரோவெனில், இரு கால் விலங்குகளாவர்'' என்று வகைப்படுத்திய பாரதி, இரு வகைக் கருணைகள் பற்றி விரிவாகப் பேசினார்.

'மானுஷிகக் கருணை என்பதை எடுத்துக் கொள்வோம். அதாவது ஒருவன் மனிதன் என்ற பெயருக்குத் தகுதியுள்ளவனாய் இருப்பானாயின், அவனுக்கு மற்ற மனிதர்களிடத்திலும், பொதுவாக மற்றெல்லா உயிர்களிடத்திலும் இயற்கையாக இருக்க வேண்டியது உயர்தரத்து அன்பு.

கருணை என்பது, யான் அறிந்த மட்டிலும் மனிதனுக்கே விசேஷ குணம் ஆகும். மனிதர்களுக்குள்ளே இக்கருணை உணர்ச்சி மிகக் குறைவாக இருத்தல் பரிதபிக்கக் கூடிய விஷயமாகும்.

ஏழைகள், நாதன் அற்றிருப்போர் இவர்களின்மீது செலுத்துவது மானுஷிகக் கருணை. உனக்குத் தீங்கு செய்வோர், உன் மனத்தைப் புண்படுத்துவோர், உன் பொருளை அழிப்போர், உன்னை நிந்திப்போர் இவர்கள்மீது செலுத்துப்படும் கருணை தெய்விகக் கருணை.

இத்தெய்விகக் கருணையின் பெருமையை என்னால் அளவிட்டு உரைக்க முடியாது. அதைப் பற்றி 'விவாதம் செய்யாதே; பேசாதே; நகையாதே; செய்து பார். அதன் இயற்கை தெரியும்'' என்று கருத்துத் தெரிவித்த பாரதி, தம் பேச்சின் இறுதியில், 'உனக்குத் தீமை செய்து விடுவோனுக்கு நீ நல்லன செய்து வா. நீ உடனே மகானாகி விடுகின்றாய்; உடனே தெய்வமாகிவிடுகிறாய்'' என்று தெளிவும் படுத்தினார்.

முதல் சொற்பொழிவில் பாரதி 'கருணை'' என்னும் தலைப்பில் விரிவாகப் பேசினார். இரண்டாம் சொற்பொழிவாகத் தமிழ்த் தாத்தா என்று தமிழ்ச் சான்றோர் உலகம் பாராட்டி மகிழ்ந்த சங்கத்தமிழ் வளர்த்த பெருந்தகை உ.வே.சாமிநாத ஐயரைப் பாராட்டி மகிழ்ந்த சொற்பொழிவாகும்.

உ.வே.சா. அவர்கள் சென்னை பிரசிடென்சி காலேஜில் தமிழ்ப் பண்டிதராகப் பணிபுரிந்து வந்தார். இந்தத் தருணத்தில், பிரிட்டிஷ் அரசு புத்தாண்டு விருதாக, 1906ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 'மஹாமஹோபாத்யாய'' என்னும் விருதை வழங்கிப் பெருமைப்படுத்தியது.

தமிழ்ப் பண்டிதர்களுக்குள்ளே அந்தக் காலத்தில் முதன்முதலாக உ.வே.சா. அவர்களுக்குப் பாராட்டு விழா ஒன்றுக்கும் கல்லூரி மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

பாராட்டு விழா நிகழ்ச்சியில் பாரதியும், அவருடைய இளமைக்கால நண்பரான சோமசுந்தர பாரதியும் கலந்துகொண்டனர். அப்போது சோமசுந்தர பாரதியின் வேண்டுகோளுக்கு இணங்க பாரதி பாடிப் படித்த பாடல்தான் 'செம்பரிதி ஒளி பெற்றான்' என்று தொடங்கும் பாடலாகும்.

'மஹா மஹோபாத்யாய சாமிநாதய்யர்'' என்ற தலைப்பில் தாம் ஆசிரியராக விளங்கிய 'சக்ரவர்த்தினி' என்ற மாத இதழில் 1906 பிப்ரவரி மாதம் பிரசுரமும் செய்தார். தம்முடைய பிரார்த்தனையாக 'மஹாமஹோபாத்யாயர் சீரும் சிறப்பும் பெற்று தமிழுலகத்தாருக்கு இனியன புரிந்து வாழ வேண்டும் என்பதே எமது விருப்பம்'' என்றும் குறிப்பிட்டார்.

இதன்பின்பு, அதே சென்னை பிரசிடென்சி காலேஜ் தமிழ்ச் சங்கத்திலே ஆற்றிய சொற்பொழிவில் 'பட்டினத்துப் பிள்ளையின் சரித்திரம்'' என்ற தலைப்பில் பாரதி மிக விரிவாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதி செய்த சொற்பொழிவுக் கட்டுரையானது 'இந்தியா' இதழில் 10111906; 17111906 ஆகிய இரு தேதிகளில் பிரசுரமாகி உள்ளது.

பட்டினத்தார் பற்றிய சொற்பொழிவு முழுமையாகப் பிரசுரமாகவில்லை. 'இன்னும் வரும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் தொடர்ந்து இதழ் பிரதிகளை ஆழ்ந்து பார்த்த அளவில், சரித்திரப் பகுதி பூர்த்தியாக வெளிவரவில்லை என்பது கண்டறியப்பட்டது. பட்டினத்தாரைப் பற்றிய பாரதியின் முழுமையான கருத்தைத் தமிழகம் அறிந்துகொள்ள முடியாமல் போனது துரதிருஷ்டவசமானதே!

முன் இரு சொற்பொழிவுகளிலே எளிமையைக் கடைப்பிடித்த பாரதி, பட்டினத்தார் தொடர்பான சொற்பொழிவில் கடின நடையைக் கையாண்டுள்ளார்.

'வெண்காட்டு ஞானியார்' என்று அந்த நாளில் அறியப்பட்டவர் பட்டினத்துப் பிள்ளை. அவர்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையாக அமைந்துள்ளது. அவர் அவதரித்த காலம், அவர் இயற்றியனவாகக் கூறப்படும் 'கோயில் நான்மணி மாலை' முதலிய பிரபந்தங்கள் பற்றியும் பாரதி தம் சொற்பொழிவில் ஆய்வு நோக்கில் மதிப்பீடும் செய்துள்ளார்.

இளமையிலேயே பட்டினத்தாருக்குக் கவிதை மோகம் பிறந்துவிட்டது. காவிரிப்பூம்பட்டினத்தில் கவிஞர்கள் பலர் இருந்தனர். அவர்களின் பழக்கத்தால் பட்டினத்தாரும் கவிஞராக விளங்கினார்.

ஒரு காலகட்டத்தில் உலக வாழ்க்கையில் வெறுப்புற்ற நிலையில் பட்டினத்தார் ஒப்பற்ற தெய்வ பக்தி நெறியில் ஈடுபட்டார். சைவ சித்தாந்த சாஸ்திரங்களில் பழக்கமும் மிகுதி பட்டது.

பாரதி தம்முடைய கருத்தை மிக அழகாக, ஆழமாகத் தெளிவுபடுத்திய செய்தியாவது:

பட்டினத்தார் வாழ்க்கையாலும், அவரது பாடல்களாலும் நாம் அறிந்து கொள்ளத்தக்க பேருண்மை யாதென்று ஆராய்வான்புக்கு எமக்கு அவரது கால நிச்சயம் அத்தனை அவசியமும் இன்று.

பட்டினத்தார் தமிழ்நாட்டாரின் அன்பிற்கும், பெருமதிப்பிற்கும் இடனாயிருத்தல் அவரது தனித் திருப்பாடல்களாலும், அவரது வாழ்க்கைப் பெருமையானுமே யாகும்.

பட்டினத்தார் தொடர்பாக மிக நீண்ட சொற்பொழிவு செய்த பாரதி, இறுதியாகத் தம் கருத்தைப் புலப்படுத்தவும் செய்தார். அதாவது, பட்டினத்தாரின் கால நிர்ணயம் செய்வது ஒரு புறமிருக்க, அவருடைய தனித் திருப்பாடல்களும், வாழ்க்கைப் பெருமையையும் நாம் அறிந்து கொள்வதே மிகவும் அவசியம் என்பதாகப் பாரதி கருதினார்.

இறுதியாகப் பட்டினத்தாரைப் பற்றிக் கூறுகையில், 'அவர் கவிஞர்; ஞானி; புது உண்மைகள் கொண்டு அவதரித்த குரு மாமணிகளில் ஒருவர்'' என்று போற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.