கம்பனின் தமிழமுதம் - 41: கம்பனின் மதுவிலக்குப் பரப்புரை

எந்த தீய பழக்கமும் இல்லாத கல்வியாளர் ஒருவரை, தீய பழக்கங்களுக்கு ஆள்பட்ட சிலர் பிடித்தனர்.
கம்பர்
கம்பர்
Published on
Updated on
2 min read

எந்த தீய பழக்கமும் இல்லாத கல்வியாளர் ஒருவரை, தீய பழக்கங்களுக்கு ஆள்பட்ட சிலர் பிடித்தனர். அவரை எப்படியேனும் ஒரு தவறான செயலைச் செய்ய வைப்பது என்பதே அவர்களுடைய நோக்கம்.

"இந்த மதுவைக் குடிக்க வேண்டும்; அல்லது, இங்குள்ள விலைமகளுடன் தனித்திருக்க வேண்டும்; எதையாவது ஒன்றினைச் செய்யாமல் இங்கிருந்து நீ போகவே முடியாது' என்று மிரட்டினர்.

இரண்டு பாவச்செயல்களில் மது குடிப்பது சுமாரான பாவமாக அவருக்குத் தோன்றியது. மதுவைக் குடித்தார். மதி மயங்கியது. அந்த விலைமகளுடன் தனியாக இருக்க மனம் நாடியது. தனித்திருந்தார். மதுவின் தீமையைச் சொல்லும் பழைய கதை இது.

வள்ளுவன் தொடங்கி எல்லாரும் மதுவிலக்குப் பரப்புரை செய்தாலும், நமது நிலைமை, பாரதியின் வரிகளில், "பேசிப் பயன் என்னடி'தான். கம்பனும் சிறப்பான மதுவிலக்குப் பரப்புரை செய்கிறான். வான்மீக ராமாயணத்தில் இல்லாத ஒரு பரப்புரையாக இது அமைந்துள்ளது சிறப்பு.

வாலி கொல்லப்பட்ட பின்னர், சுக்கிரீவன் மன்னன் ஆனான். சீதையை மீட்க படைகளைத் திரட்டவேண்டும். அதற்குள் மழைக்காலம் குறுக்கிட்டது.

காட்டில் இராமனும் இலக்குவனும் தனித்திருக்க, "மழைக்காலம் முடிந்ததும் படைகளுடன் வருகிறேன்' என்று சொல்லிப்போன சுக்கிரீவன், மதுவில் மூழ்கினான்; மங்கையருடன் கிடந்தான்; கடமையை மறந்தான். சினம் கொண்ட இராமன், இலக்குவனை அனுப்பினான். அதே கோபத்துடன் இலக்குவன் சுக்கிரீவனின் அரண்மனைக்கு வந்தான்.

மிகுந்த சிரமப்பட்டு சுக்கிரீவனை மயக்கத்தில் இருந்து தெளிவித்த அங்கதன், இலக்குவன் கோபத்துடன் வந்திருப்பதைத் தெரிவித்தான்.

"அவர்கள் கோபப்படுமாறு நாம் எதுவும் செய்யவில்லையே' என்று குழம்பினான் சுக்கிரீவன். மதுவில் மயங்கிக் கிடந்து, கடமையை அவன் மறந்ததைச் சொன்னான் அங்கதன். தனது நிலையைத் தாமதமாக உணர்ந்த சுக்கிரீவன், அதிர்ச்சியடைந்தான். இராமனைப் பார்க்க வேகமாகக் கிளம்பிய நிலையில், தன்னையே அவன் நொந்துகொண்டதாகப் பல பாடல்களை அமைக்கிறான் கம்பன். மதுவின் தீமைகளைப் பட்டியலிடும் பாடல்களாக அவை அமைந்துள்ளன.

"இராம இலக்குவரால் நான் பெற்ற உதவிக்கு ஈடு இணை உண்டா? மதுவில் ஆழ்ந்து அனைத்தையும் மறந்தேனே. அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்? மதுப் பழக்கம் கேடுகளை மட்டுமே விளைவிக்கும் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்; அதை அனுபவித்துவிட்டேன்.

இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும், ஒன்றை மற்றொன்றாகவும் காட்டும் விபரீத உணர்வினை மது ஏற்படுத்துகிறது. பஞ்சமா பாதகங்கள் என்று சொல்லப்படும் ஐந்து தீவினைககளில் கொலை, களவு, பொய், காமம், மது என மதுவையும் இணைத்துச் சொன்னதன் காரணம் அதுதான். மதுவில் ஆறுதல் தேடுதல் என்பது, எரிந்துகொண்டிருக்கும் நெருப்பை அணைக்க, அதில் நெய்யை ஊற்றுவதுபோலத்தான்.

மது குடிப்பதால், வஞ்சனை, திருடுதல், பொய் கூறல், அறியாமை, நம்மை நம்பி இருப்போரைப் பற்றிக் கவலைப்படாமல் கைவிடுதல், ஆணவம் ஆகியன மனிதன் மனத்தில் சேர்ந்துகொள்கின்றன.

அதே நேரத்தில், செல்வத்தைத் தரும் திருமகளும் அவனைவிட்டு நீங்கிவிடுவாள். நஞ்சு உயிரைக் கொல்லும். ஆனால், மது வாழ்க்கையை நரகத்தில் தள்ளிவிடும் சுக்கிரீவன் வாயிலாக இப்படி ஒரு பரப்புரையை வைத்த கம்பன், தன் மகனாகிய அங்கதனிடம், "இனி மதுவைத் தொடமாட்டேன் என்பதுகூட அல்ல; நினைக்கவும் மாட்டேன்' என்று சுக்கிரீவன் சொன்னதாக, இந்தக் கவிதையை அமைத்தான்.

"ஐய! நான் அஞ்சினேன்,

இந் நறவினின் அரிய கேடு;

கையினால் அன்றியேயும்

கருதுதல் கருமம் அன்றால்;

வெய்யது ஆம் மதுவை இன்னம்

விரும்பினேன் என்னில், வீரன்

செய்ய தாமரைகள் அன்ன

சேவடி சிதைக்க'

என்றான்.

"மகனே! மதுவின் தீமைகளை எண்ணி அஞ்சுகிறேன். அதை நினைக்கவும் மாட்டேன். இனி மதுவை நான் விரும்பினால், இராமன் தனது கால்களால் என்னை மிதித்தே கொல்லட்டும்' என்று சபதம் எடுத்துக்கொண்டானாம் சுக்கிரீவன். காப்பியப் போக்கோடு சேர்த்து, சமுதாய அறங்களையும் வலியுறுத்தத் தவறுவதில்லை கம்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com