சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கம்பனின் தமிழமுதம் - 31: கட−ல் கலக்கும் நதிகள்!

மலையில் பொழிகிற மழைநீர், அருவியாகக் கீழே பாய்கிறது. அருவியாகக் கீழே விழுந்த நீர் நதியாக மண்ணில் ஓடுகிறது.

News image

கம்பர்

Updated On :9 பிப்ரவரி 2025, 1:52 pm

மலையில் பொழிகிற மழைநீர், அருவியாகக் கீழே பாய்கிறது. அருவியாகக் கீழே விழுந்த நீர் நதியாக மண்ணில் ஓடுகிறது. நிறைவில் அந்த நதி, ஏதோ ஓர் இடத்தில் கடலில் கலந்துவிடுகிறது.

இயற்கையின் சுழற்சிகளில் இதுவும் ஒன்று. இறைச் சிந்தனைகளில் எப்போதும் ஈடுபட்டிருந்த பெரியவர்களுக்கு, இந்த இயல்பான இயற்கை நிகழ்வும் இறைவன் தொடர்பான சிந்தனைகளையே தந்தது. 'சமயங்கள் பலவாறு வேறுபட்டு நின்று வெவ்வேறு கருத்துகளைச் சொன்னாலும், அவற்றுள்ளே புகுந்து பார்த்தால், அவை ஒவ்வொன்றுமே ஒரே கடலில் ஓடிக் கலக்கும் பல நதிகள் போன்றவையே என்பது விளங்குகிறது.

'பரம்பொருளே! இதுவும் நின் விளையாட்டுத்தான்' என்றார் தாயுமானவர். 'முடிவில் மோன வாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற்றம்மா' என்பன அவரது வரிகள். ஏறத்தாழ இதே கருத்தை, வள்ளலார் தனது கவிதையில் 'பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும் கங்கு கரை காணாத கடல்' என்றார்.

நீர், பல இடங்களில் நதிகளாகப் பிரிந்து பல பெயர்களில் வழங்கப்பட்டாலும், அவை அனைத்துமே கடல் நீராக ஒரே இடத்தில்தான் கலக்கின்றன. பல்வேறு சமயங்கள் அனைத்தும் வெவ்வேறு நதிகளைப் போன்றவை; எல்லா சமயங்களும், இறைவன் என்னும் ஒரே கடலில்தான் சென்று கலக்கின்றன' என்பதே இதன் பொருள்.

கம்பன் தனது காப்பியத்தில் இறைச் சிந்தனைகளை நிறையவே கொட்டி வைத்திருக்கிறான். நதி, கடல், இறைவன் என்று இணைத்துக் கூறியிருக்கிறானா என்று தேடிக்கொண்டு உள்ளே நுழைந்தால், கோசல நாட்டில் ஓடி வளம் சேர்த்த சரயு நதிக்கரைக்கு நமது கரம் பற்றி அழைத்துப் போகிறான் கம்பன்.

வானில் வெண் மேகம் செல்வதையும், கடல் நீரை அது குடித்துக் கருமேகமாகத் திரும்புவதையும் முதலில் காட்டுகிறான். கற்பனையில்லாமல் எதையுமே சொல்ல முடியாத கம்பன், 'போகும்போது திருநீற்றினை மேனியெங்கும் அணிந்த சிவபெருமான்போல வெண்ணிறத்துடன் சென்ற மேகங்கள், கடலில் மேய்ந்து நீரை முகந்த பின்னர், கருமேனியனான திருமால் போல் கருமேகமாகத் திரும்பி மழையைத் தருகின்றன' என்றான்.

மழை பொழிந்து, வெள்ளம் பெருகுகிறது. வெள்ளம் பெருகுவதற்கும், எக்காலத்துக்கும் பொருந்தும் ஓர் உவமையைச் சொன்னான் கம்பன். 'அறம் பிறழாமல், நேர்மையாக, மானத்துக்குப் பயந்து ஆட்சி செய்யும் ஆட்சியாளனுக்குப் புகழ் எப்படிப் பெருகுமோ, அப்படிப் பெருகியது வெள்ளம்' என்றான்.

'இந்த வெள்ளம், பல நதிகளாகப் பிரிந்து ஓடி, கடலில் கலக்கின்றது; அவ்வாறே, பல சமயங்களாகப் பிரிந்து நிற்பவை, நிறைவில் ஒரே இறைவனையே சேருகிறது' என்று சொல்லப்போகிறான் ' என்ற நமது எதிர்பார்ப்பினை விட்டு விலகி, புதிய கோணம் ஒன்றை நமக்குக் காட்டுகிறான்.

'இமய மலையில் பொழிகின்ற மழையினாலும், குளிர் காரணமாக மலையில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகுவதாலும் ஏற்படும் நீர்ப்பெருக்கு, இறுதியில் கடலில் கலக்கிறது. ஆனால், கடலில் கலப்பதற்கு முன்பு, அந்த நீர், சில இடங்களில் பெரும் ஆறாக ஓடுகிறது; சில இடங்களில் சிற்றாறாகப் பாய்கிறது.

சிறு சிறு குளங்களாகத் தேங்கி நிற்கிறது; ஏரியாகப் பெருகித் ததும்புகிறது; வாய்க்காலாகச் செல்கிறது; ஓடையாக ஓடுகிறது; சில இடங்களில் சிறு குட்டையாக நின்று விடுகிறது. இப்படிப் பல இடங்களில் பல வடிவங்களில் காட்சியளித்தாலும் மறுக்க முடியாத உண்மை ஒன்று உண்டு.

மலையில் புறப்பட்டு கீழிறங்கி வந்த நீர்தான் அது! அதுபோல், உலகில் பல வடிவங்களில், பல நிலைகளில் பல சமயங்கள் தங்கள் கருத்துகளைக் கூறினாலும், அவை அனைத்தும் ஒரே இறைச்சிந்தனையில் இருந்து தோன்றியவையே' என்றான் கம்பன்.

'பல நதிகள் ஓடி வந்து கலக்கின்ற கடலே இறைவன்' என்று சமயங்களை முன்னிலைப் படுத்துவதே பொதுக்கருத்தாக இருக்க, கம்பன் மாற்றி யோசித்தான். 'இறைவன் ஒருவனே! அந்த இறைவனைக் குறித்துத் தோன்றிய சிந்தனைகளே, இன்று பல்வேறு சமயங்களாகப் பிரிந்து கிடக்கின்றன' என்று இறைவனை முன்னிலைப்படுத்தினான். கம்பனின் பாடலைப் பார்த்துவிடலாம்.

கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக்

கலந்த நீத்தம்

எல்லையில் மறைகளாலும் இயம்அரும்

பொருள் ஈதென்னத்

தொல்லையில் ஒன்றேயா கித் துறைதொறும்

பரந்த சூழ்ச்சிப்

பல்பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்

போல் பரந்ததன்றே

'எல்லாப் பிரிவுகளும் ஒரே இறைவனைச் சென்று அடைகின்றன' என்று சொல்லாமல், எல்லையற்ற வேதங்களாலும் விளக்க முடியாத ஒரே இறைவனே, பல்வேறு விளக்கங்களில், பல்வேறு சமயவாதிகள் சொல்லும் அவரவர்க்கான கடவுளராகப் பிரிந்திருக்கிறான' என்று கம்பன் மாற்றிச் சொல்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.