வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கம்பனின் தமிழமுதம் - 33: கல்வி வேறு; ஞானம் வேறு!

கல்வி வளர்ச்சி இல்லாமல் மானிட சமூகத்தின் வளர்ச்சி இல்லை. மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் நாம் உண்ணும் உணவையும், கற்கும் கல்வியையும் ஒப்பிட்டுப் பேசுவார்.

News image

கம்பர்

Updated On :23 பிப்ரவரி 2025, 1:03 pm

கல்வி வளர்ச்சி இல்லாமல் மானிட சமூகத்தின் வளர்ச்சி இல்லை. மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் நாம் உண்ணும் உணவையும், கற்கும் கல்வியையும் ஒப்பிட்டுப் பேசுவார். "நாம் உண்ணும் உணவு, வயிற்றில் நன்றாக அரைக்கப்பட்டு, அதில் உள்ள அனைத்து சத்துக்களும் உறிஞ்சப்படுகின்றன; அதுவே நமது உடல் இயக்கத்துக்கு காரணமாக இருக்கிறது. உண்பதில் தேவையற்றவற்றைக் கழிவுகளாக உடலே வெளியேற்றி விடுகிறது.

அதைப்போலவே, நாம் கற்பவைகளை நமது மூளை நன்றாக சிந்திக்க வேண்டும்; நம்மைப் பண்படுத்தும் செய்திகளை மட்டும் இதயத்துக்கு அனுப்ப வேண்டும்; அதுவே நமது சொற்களாக, செயல்களாக வெளிப்பட வேண்டும். படித்தலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை, மூளையே வெளியேற்றிவிட வேண்டும்' என்பார் அவர்.

கல்வியால் பெறும் தகுதிகளால், கல்வி பூரணம் அடைவதில்லை. எல்லாவற்றையும் உணர்ந்துகொள்ளும் பக்குவம் வரும்போதே கல்வி, பூரணத்துவம் அடைகிறது. அனைத்தையும் உணர்ந்துகொள்ளும் பக்குவம்தான் ஞானம்.

இந்த ஞானமே கல்வியின் உயர்ந்த பரிணாம நிலை. இந்தப் பரிமாணத்தை எட்டிய மனிதனே, உயர்ந்த வாழ்க்கை வாழ்கிறான். இதைச் சரியான இடத்தில், இராவணனைக் காட்டி நமக்கு உணர்த்துகிறான் கம்பன்.

இராமன் மீது கொண்ட தவறான ஆசையால், இலக்குவன் கோபத்துக்கு ஆளானாள் சூர்ப்பணகை. தனது மூக்கையும் காதுகளையும் இழந்தாள். அழுது அரற்றிக்கொண்டே இராவணன் அரண்மனை நோக்கி ஓடி வந்தாள்.

தான் அவமானப்பட்டதை இராவணனிடம் முறையிட்டாள். நேர்மையான அரசனாக, "நீ என்ன தவறு செய்தாய்? அதைச் சொல்' என்றான் இராவணன். இந்தக் கேள்வியால் சற்றே நிலைகுலைந்தாள் சூர்ப்பணகை. ஆனால், இராவணனை நிலைகுலையச் செய்யும் பதில் சூர்ப்பணகையிடம் இருந்தது.

"அண்ணா காட்டில் அழகான ஒரு பெண்ணைப் பார்த்தேன்' என்று தொடங்கினாள். "யாரவள்?' என்று கேட்டான் இராவணன். "உன்னுடன் வாழ வேண்டிய பேரழகி அவள்; கேவலம் ஒரு மனிதனுடன் வாழ்கிறாள்' என்று தொடங்கி, சீதையின் அழகை வருணிக்கத் தொடங்கினாள். ஒரு பெண்ணின் அழகினை, எப்படி வியந்து வியந்து பேச முடியுமோ, அவ்வளவு உச்சமாகப் பேசினாள் சூர்ப்பணகை. கம்பனின் மிக அழகான கவிதைகள் நிறைந்த பகுதி இது.

தங்கையின் சொற்களில், தனது ஆளுமையை முழுமையாக இழந்தான் இராவணன். அவன் கண்களின் முன் சீதை மட்டுமே நின்றாள். பார்க்கும் இடங்களிலெல்லாம் அவளே தெரிந்தாள்.

"காட்டில் இராமனால் கொல்லப்பட்ட கரன் முதலியவர்களையும் மறந்தான்; தங்கை மூக்கை அரிந்தவர்களின் ஆற்றலையும் மறந்தான்; தான் பெற்றிருக்கும் சாபங்களையும் மறந்தான்; வரக்கூடிய பழிச் சொற்களையும் மறந்தான்; சீதையைப் பார்ப்பதற்கு முன்னரே, அவளைத் தனது மனச் சிறையில் அடைத்து வைத்துவிட்டான்' என்று இராவணன் நிலையைக் கூறிய கம்பன், இந்தக் காட்சியைப் படிக்கும் நம்மிடம் ஒரு கேள்வி கேட்கிறான். பாடலைப் பார்க்கலாம்:

சிற்றிடைச் சீதை என்னும் நாமமும்

சிந்தை தானும்

உற்று இரண்டு ஒன்றாய் நின்றால்,

ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன

மற்றொரு மனமும் உண்டோ? மறக்கலாம்

வழி மற்று யாதோ?

கற்றவர் ஞானம் இன்றேல் காமத்தைக்

கடக்கல் ஆமோ?

"சீதையின் நினைவுகளே மனத்தை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டதால், வேறு எதையும் இராவணனால் சிந்திக்கக்கூட முடியவில்லை. வேறொரு மனம் அவனுக்கு இல்லையே; மறக்கவும் வழியில்லையே' என்று சொன்ன கம்பன், கேட்டான், "எவ்வளவு இறை நம்பிக்கை இருந்தால் என்ன? கல்வியறிவில் கரை கண்டிருந்தால்தான் என்ன? தவங்கள் பல செய்து ஆற்றல்களைப் பெருக்கிக்கொண்டால்தான் என்ன? நீ கற்றவை எவையும் உனக்கு ஞானத்தைத் தரவில்லையெனில், ஆசைகளை உன்னால் வெல்லவே முடியாது.

நீ கற்கும் கல்வி, ஞானத்தை உனக்குத் தரவில்லையெனில், உன் பலவீனங்களாலேயே நீ அழிவாய் என்பதே கம்பன் நமக்கு சொல்லும் பாடம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.