
பொதுவாக நீதி தேவதை சிலையின் கண்கள் கருப்புத் துணியால் கட்டப்பட்டே இருக்கும். 'தன் முன்னர் நீதி வேண்டும் என்று கேட்டு நிற்பவர் யார் என்று நீதி தேவைதை பார்க்கக் கூடாது. வந்திருப்பவர் எவராக இருப்பினும், நீதி மட்டுமே வழங்கப்படும்' என்பதற்கான குறியீடுதான் கண்கள் கட்டப்பட்டிருப்பது.
அரசர்கள் காலத்தில், ஆட்சி மன்றம், நீதிமன்றம் இரண்டுமே அரசனிடம்தான் இருந்தன. தவறாக நீதி வழங்கிய மன்னன் கொடுங்கோலன் என்றே குறிக்கப்பட்டான். தன் முன்னே வந்து நிற்பது, குடிமக்களில் ஒருவர் என்றால், நீதி வழங்குவதில் பெரும் சிக்கல் இருக்காது. பாசம் மிக்க உறவுக்கு தீர்ப்பு வழங்க வேண்டிய நிலையில், தடுமாற்றங்கள் வர வாய்ப்புகள் அதிகம். இப்படி ஒரு சூழல், கம்பனில் ஏற்படுகிறது. கதைப்போக்கில் இருந்து மாற முடியாத நிலையிலும், காட்சியை மிக அழகாகப் படைத்திருக்கிறான்.
இராவணன், வீடணன், கும்பகருணன் மூவருக்கும் உடன் பிறந்த ஒரே சகோதரி சூர்ப்பணகை. மூவரும் தங்கை மீது மிகுந்த பாசம் உடைய சகோதரர்கள். இலக்குவனுடன் நிகழ்ந்த போரின்போது, 'பெய் தவத்தின் ஓர் பெண்கொடி எம்முடன் பிறந்தாள்' என்று கும்பகருணன் சொல்வதாக எழுதினான் கம்பன். 'நாங்கள் செய்த தவம் காரணமாக அந்தப் பெண் கொடி எங்களுடன் பிறந்தாள்' என்றானாம் கும்பகருணன்.
பாசத்தால் நிறைந்த அந்தத் தங்கை இலக்குவனால் மூக்கறுபட்டாள். அறுபட்ட மூக்கோடும், கொட்டுகிற குருதியோடும் இராவணன் அரண்மனை நோக்கி அலறிக்கொண்டே ஓடி வந்தாள். அரண்மனைக்குள் நுழைந்த சூர்ப்பணகை, இராவணன் கால்களில் விழுந்து உருண்டு புரண்டு அலறி அழுதாள். சூர்ப்பணகையின் நிலையைக் கண்ட இராவணனுக்கு, பத்து வாய்களிலும் புகை வருமளவுக்குக் கோபம் பொங்கியது. மீசைகள் துடித்தன.
'இதைச் செய்தவர் யார்?' என்ற சொற்கள் மட்டுமே அவன் வாயில் இருந்து வந்தன. 'அழகும் ஆற்றலும் வாய்ந்த இரு மனிதர்கள் இதைச் செய்தனர் என்றாள் சூர்ப்பணகை. இரு மனிதர்களால் தனது தங்கை இந்த நிலைக்கு ஆளானாள் என்னும் செய்தி காதுகளில் வீழ்ந்த அந்தக் கணத்தில், அவன் கண்கள் நெருப்பைச் சிந்தின. அந்த அவமானம் அவனுக்குத் தாங்க முடியாததாக இருந்தது.
தனது பாசத்துக்குரிய ஒரே சகோதரி, இரண்டு மானிடர்களால் அவமானப்படுத்தப்பட்டு, மூக்கை இழந்து வந்திருக்கிறாள். அரசனாகவும் அண்ணனாகவும் அடுத்து செய்ய வேண்டியது குறித்து இப்போது முடிவு செய்தாக வேண்டும். அரியாசனத்தில் அண்ணனாக அல்ல; அரசனாக அமர்ந்திருக்கிறோம் என்ற எண்ணத்துடன் நடந்துகொண்ட இராவணன். 'பொய் தவிர்; பயத்தை ஒழி; புக்க புகல்' என்றான்.
பாதிக்கப்பட்டு முறையிடுபவர்கள், தங்கள் மீது இரக்கம் வர வேண்டும் என்பதற்காக, நடந்தவற்றை மாற்றிச் சொல்லலாம். எனவே 'பொய் தவிர்' என்பது முதல் கட்டளை. முறையிடும் தனக்கு வேறு பாதிப்புகள் வந்துவிடுமோ என்ற அச்சம் வரலாம். எனவே 'பயத்தை ஒழி' என்பது இரண்டாம் கட்டளை. நடந்த உண்மையை அப்படியே அறிந்தால்தான், சரியான திசையில் சிந்தித்துத் தீர்வு காண முடியும். எனவே, 'புக்க புகல்' என்பது மூன்றாம் கட்டளை.
பாதிக்கப்பட்டு வந்திருப்பது தங்கை என்ற நிலையிலும், நீதியைத் தேடும் சிறந்த அரசனாக இராவணனைக் காட்டும் கம்பன், அடுத்த கேள்வியில், இராவணனை இன்னும் உயரத்தில் நிறுத்துகிறான். இராம இலக்குவரின் அழகை விவரித்த சூர்ப்பணகையிடம், அவன் கேட்ட அடுத்த கேள்விகளை இப்படி எழுதினான் கம்பன்:
ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய
துன்பம் மாறி,
தீயிடை உகுத்த நெய்யின், சீற்றத்திற்கு
ஊற்றம் செய்ய,
'நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல்,
நின்னை, இன்னே,
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர்
கொய்ய?' என்றான்.
'உனது வாய், இதழ்களையும், மூக்கையும், தங்களது பலத்தைப் பயன்படுத்தி அவர்கள் அறுக்கும் அளவுக்கு, நீ என்ன குற்றம் செய்தாய்?' என்று கேட்டான் இராவணன்.
வழக்கைக் கொண்டு வந்திருப்பவள் தங்கை. மூக்கிலும் வாயிலும் ரத்தம் ஒழுக, 'என்னைத் தாக்கிவிட்டார்கள்' என்று அவள் அழுத நிலையிலும், 'இவளைத் தாக்கும் மன நிலைக்கு அவர்கள் செல்லும் அளவுக்கு, இவள் ஏதோ குற்றம் செய்திருக்க வேண்டும்' என்று எண்ணி, 'நீ செய்த குற்றத்தைக் கூறு' என இராவணன் கேட்டதாக அமைத்தான். அந்தக் கோபத்திலும் இராவணன் கேட்ட கேள்வியில், நீதி நிமிர்ந்து நிற்பதாகக் காட்டுகிறான் கம்பன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.