சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

வெள்ளைக் கண்ணத்தனாரும் கையறு நிலையும்...

News image

கோப்புப் படம்

Updated On :20 வினாடிகள் முன்பு

தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை சங்க இலக்கியங்களில் இருந்து மீட்டு எடுக்கிறோம். அந்த வகையில் "கையறு நிலை' என்கிற ஒன்றை அறிவது தேவையாகிறது. தமக்குப் பிடித்தமான ஒன்று தம்மைவிட்டு நிரந்தரமாக நீங்குதல் என்பதே கையறு நிலை என்று சொல்லப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, புறநானூற்றில் ஒளவையார் அதியமான் - கபிலர் பாரி இறந்தவுடன் பாடிய பாடல்களைச் சொல்வது வழக்கம். ஆனால், அகநானூறு 64-ஆவது பாடலைப் பாடிய, ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் கூறும் கையறு நிலை கவனிக்கத்தக்கதாக உள்ளது.

முல்லைத் திணைப் பாடல்- சூழல் - உடனிலை- வேட்கை: போர்க்காரணமாகப் பிரிந்து வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.

பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி,

மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு

உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ,

ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன்,

கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்

ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை

புலம்பு கொள் மாலை கேட்டொறும்

கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.

(அகம். 64, 10-17)

பாம்புகள் வாழும் புற்றின் குளிர்ந்த மேற்

புறத்தைக் குத்தி, அம்மண்ணை தன் கொம்பு

களில் தாங்கிய தலைமையினை உடைய ஆனேறானது, எக்காலத்தும் தன்னுடன் வாழ விரும்பிய, தனது இளைய பசுவைத் தழுவிக்கொண்டு, ஊரை நோக்கிவரும் முல்லைநில மாலைப்

பொழுதிலே, அந்தப் பசுக்கள் யாவும் ஒன்றுசேர்ந்து தம் கன்றுகளை அழைக்கத் தக்கக் குரலினை எழுப்பி, தொழுவங்களிலே நிறையும் வேளையில், அந்தப் பசுக்கள் பூண்டுள்ள அழகிய மணிகள் ஒலிக்கும்.

அவ்வினிய ஒலியினைத் தனிமையைக் கொண்டுதான் வருந்தியிருக்கும் மாலை நேரத்திலே கேட்கும் போதெல்லாம் உள்ளங்கலங்கினவளாக இருப்பாள் தலைவி. அத்தகையவளின் செயலற்ற நிலையினைப் ("கையறு நிலை') போக்குவது தலைவனாகிய என் கடமை. அதனால் விரைந்து செல் என்று தேர்பாகனிடம் தலைவன் சொல்வதாகப் பாடியுள்ளார்.

கையறு நிலை என்கிற சொல் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. சங்க அகப்பாடல்களில் முல்லைத் திணைப் பாடல்களில்தான் இந்தச் சொல் அதிகம் கையாளப்பட்டுள்ளது.

முல்லைத்திணையின் உரிப்பொருள் இருத்தல் (தலைவன்- தலைவி இருவர்க்கும் பொது). தான் மிகுதியான அன்புகொண்ட ஒருவர் இந்த மண்ணுலகைவிட்டு நீங்கியதால் துன்பப்படுவதே கையறு நிலை என்று சொல்லப்படுகிறது.

ஆனால், போர் காரணமாகப் பிரிந்த தலைமகன் வரும்வரை செயலற்ற நிலையில் தலைவி இருத்தலும் கையறு நிலைத் தன்மையுடையது என்கிற சூழலில் பொருள்கொண்டு பாடியவர் இப்புலவர் மட்டுமே எனலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.