
நல்லவர்க்கு இல்லை நாளும் கோளும்...
தமிழில் பக்தி இலக்கியங்கள் மிகப் பெரும் இடத்தைப் பிடித்துள்ளன. கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரை நாயன்மார்கள் அறுபத்துமூவரும், ஆழ்வார்கள் பன்னிருவரும் தத்தம் சமயக் கடவுளரது மாண்புகளை எடுத்துரைக்கும் விதமாகப் பாடிய பாடல்களே பக்தி இலக்கியங்களுள் பழைமையானவை.

ரா. பரத்குமார்
தமிழில் பக்தி இலக்கியங்கள் மிகப் பெரும் இடத்தைப் பிடித்துள்ளன. கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரை நாயன்மார்கள் அறுபத்துமூவரும், ஆழ்வார்கள் பன்னிருவரும் தத்தம் சமயக் கடவுளரது மாண்புகளை எடுத்துரைக்கும் விதமாகப் பாடிய பாடல்களே பக்தி இலக்கியங்களுள் பழைமையானவை.
அவற்றுள் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரம் மிகுதியான பாடல்களை உடையது.
63 நாயன்மார்களுள் மிகுதியான பதிகங்களைப் பாடியவர் திருஞானசம்பந்தரே. அவர் பிள்ளைப் பருவம் முதலே பாக்கள் பாடும் ஆற்றல் பெற்றிருந்தவர். அவர் பாடியவற்றுள் கோளறு பதிகம் கோள்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
ஒருமுறை திருஞானசம்பந்தர் மதுரையில் சமணர்களுடன் வாதிடுவதற்காகப் புறப்பட்டார். அந்நாள் சோதிடப்படி நல்ல நாள் இல்லை என்பதைத் திருநாவுக்கரசர் எடுத்துரைத்துத் தடுத்தார்.
அப்போது திருஞானசம்பந்தர், 'சிவபெருமான் என் உள்ளத்தில் குடியிருக்கிறார். அதனால் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி (நாள்) இராகு, கேது (கோள்) ஆகியன எந்தத் தீமையும் செய்யா. அவை சிவனடியார்க்கு மிக நல்லவைகளே' என்பதை எடுத்துரைக்கும்விதமாக ஒரு பதிகம் பாடினார். அந்தப் பதிகமே கோளறு பதிகமாகும். பின்னர், மதுரைக்குச் சென்று அச்சொற்போரில் கலந்துகொண்டு வெற்றியுடன் திரும்பினார்.
திருஞானசம்பந்தர் பாடிய கோளறு பதிகம் 'நல்லவர்க்கு இல்லை நாளும் கோளும்' என்கிறது. அதுபோன்ற தொடர் ஒன்று கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் தோன்றிய வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகையிலும் இடம்பெற்றுள்ளது.
அந்நூல் சிறுவர்களுக்கு உரியது. அதிவீரராம பாண்டியரால் எழுதப்பட்டது. அதில் 'நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை' என்னும் தொடர் இடம்பெற்றுள்ளது. நோய்வாய்ப்பட்டோர் நாள், கிழமை ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டிருக் கூடாது; உடனே மருத்துவம் செய்யத் தொடங்கிவிட வேண்டும் என்பதே அந்தத் தொடரின் பொருளாகும்.
இருவேறு காலத்தில் வாழ்ந்த இருவேறு புலவர்கள் பாடிய பாடல்களே ஆயினும், அவை ஒரே பொருளமைப்பு உடையவை. திருஞானசம்பந்தர் நாள், கோள் ஆகியவற்றையும் அதிவீரராம பாண்டியர் நாள், கிழமை ஆகியவற்றையும் தத்தம் பாடல்களில் எடுத்துரைத்துள்ளனர்.
நல்ல நேரம் - கெட்ட நேரம்; நல்ல நாள் - கெட்ட நாள்; நல்ல கிழமை - கெட்ட கிழமை (கிழமை - வாரம்) ஆகியவற்றை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது; செய்ய வேண்டியவற்றைத் தேவைக்கேற்பச் செய்து முடித்து விட வேண்டும்; தேவைப்பட்டால் உடனே செய்து முடித்து விட வேண்டும் என்பதே இவ்விரு புலவர்களும் நமக்குக் கூறுகின்ற பேரறிவுரையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






