உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட சேரமன்னன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஆவான்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:17 pm IST

முனைவர் ப. சுடலைமணி

பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட சேரமன்னன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஆவான். இவன் குட்டுவன், செங்குட்டுவன், மணிகுட்டுவன் என்றெல்லாம் அழைக்கப்பட்டவன். சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்தில் இளங்கோவடிகளால் போற்றப்படுபவனும் இவனே ஆவான்.

இளங்கோவடிகளும் சேரன் செங்குட்டுவனும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதை அறிய முடிகிறது. செங்குட்டுவன் சேரநாட்டில் 55 ஆண்டுகள் அரசுக் கட்டிலில் வீற்றிருந்து செங்கோல் ஆட்சி நடத்தினான். இவன் போர் செய்வதில் வல்லவனாகத் திகழ்ந்தான். நிலம் மற்றும் கடல் வழியாகவும் நீண்ட பயணங்கள் மேற்கொண்டு போரிட்டு பகைவர்களை வென்றவன். போரில் சேர்த்த பொருள்களையும் கடல் வணிகத்தால் கிடைத்த பொருள்களையும் படைவீரர்களுக்கும் பாணர்களுக்கும் வாரி வழங்கினான்.

பரணர் பதிற்றுப்பத்தில் 'கரைவாய்ப் பகுதி...' என்ற செய்யுளில் செங்குட்டுவனின் போர்க்களக் காட்சிகளைச் சிறப்பாக விளக்குகிறார்.

நிலம், கடல் பகுதிகளில் நடைபெற்ற போர்களை ஒரே செய்யுளில் விளக்கிவிடுகிறார். இந்தச் செய்திகள் அனைத்தும் வரிசையாக அமையாமல் கலைத்துப் போடப்பட்டுள்ளன.

சுரம் பல கடவும் கரை வாய்ப் பருதி

ஊர் பாட்டு எண் இல் பைந் தலை துமிய,

பல் செருக் கடந்த கொல் களிற்று யானை

போர்க்களத்தில் படையுடன் விளங்கும் அரிய காடுகள் பலவற்றிலும் செலுத்தப்படும் குருதிக்கறை தோய்ந்த விளிம்பையுடைய தேர் சக்கரங்கள், தன்பாட்டுக்கு ஊர்ந்து செல்லும் செயலால் போரில் மடிந்த எண்ணில்லாத பகைவர்களின் பசிய தலைகள் சிதைந்து அழிந்தன.

சேரன் பல போர்களை எதிர்நின்று வென்ற, கொல்லுகின்ற ஆண் யானைகளை உடையவன்.

கோடு நரல் பெளவம் கலங்க வேல் இட்டு

உடை திரைப் பரப்பின் படு கடல் ஓட்டிய

வெல் புகழ்க் குட்டுவன் கண்டோர்

செல்குவம் என்னார், பாடுபு பெயர்ந்தே

(பதிற்றுப்பத்து 46)

மேலும் செங்குட்டுவன், சங்குகள் ஒலிக்கும் கடல் கலங்குமாறு போர்ப்படைகளைச் செலுத்தி, பிசிராகச் சிதறும் அலைகளையுடைய அகன்ற நீர்ப்பரப்பாகிய கடலை இடமாகக் கொண்டு போர் செய்த பகைவர்களைத் தோற்றோடச் செய்த வெற்றியை உடையவனாவான்.

பாண்மகளிர் நரம்புக்கட்டுப் பொருந்திய பேரியாழில் பாலைப் பண்ணை அமைத்துப் பகைவருக்குப் பணியாத இயல்புடைய செங்குட்டுவனின் செயல்களைப் புகழ்ந்து பாடினர்.

இவ்வாறு செங்குட்டுவனைப் பாடிச் சென்று நேரே கண்டவர்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வோம் என்று நினைக்கமாட்டார்கள். அவனோடு சேர்ந்து இருக்கவே விரும்புவார்கள்.

செங்குட்டுவன் தன்னைப் போற்றிப் புகழ்ந்து பாடிய பாண்மகளிரை இனிதாகப் பாதுகாத்து அவர்களுக்கு வேண்டிய பொருள்களை அளித்து மகிழ்ந்தான்.

மேற்கண்ட செய்திகள் அனைத்தும் செய்யுளில் நேர்க்கோட்டு வரிசையில் அமையாமல் கலைத்துப் போடப்பட்டுள்ளன. இந்தச் செய்யுளை முதல் முறையாகப் படிக்கும் வாசகனுக்குச் சிக்கல் நிறைந்ததாகவே தோன்றும்.

'பனுவல் என்பது வாசகனால் உருவாக்கப்படுவது என்ற கருத்தை முன்வைத்து அதாவது வாசகர்கள் தங்களின் விருப்பத்துக்கேற்ப, பனுவலுக்குள் பல தளங்களைக் கண்டு, பல குரல்களைக் கேட்டுத் தங்களுக்கான பனுவலைத் தாங்களே அமைத்துக் கொள்கின்றனர்' என்ற அமைப்பியல்வாதக் கூற்றை அடிப்படையாகக் கொண்டு செய்யுளைப் பொருள் விளங்கிக் கொள்ளலாம்.

செங்குட்டுவனின் போர்க்களங்கள், நடைபெற்ற போர்கள், போர்க்களக் காட்சிகள், போரில் பெற்ற வெற்றிகள், அதைப் பாடிப் புகழ்ந்த பாடிணிகள், அவர்களுக்குக் கிடைத்த வெகுமதிகள், அவர்கள் செங்குட்டுவனைப் பிரிய மனமின்றி அவனுடன் இருக்க விரும்பியது என்ற நேர்க்கோட்டு வரிசையில் செய்யுளை விளங்கிக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.