

தமிழக இதழியல் வரலாற்றில் 'குமுதம்' என்கிற நான்கெழுத்து வார இதழின் பங்களிப்பைத் தவிர்க்கவே முடியாது. அதிலும் அதன் நிறுவன ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் தலைமையில் இயங்கிய அதி அற்புதமான ஆசிரியர் குழுவும், அவரது தன்னிகரில்லா இதழியல் பார்வையும் ஈடு இணையற்றவை.
எஸ்.ஏ.பி. ஆசிரியராக இருந்த 'குமுதம்' இதழின் புதுமையைப் பார்த்தும், படித்தும் பிரமித்தும் வளர்ந்த தலை
முறையைச் சேர்ந்தவன் நான். எப்படி பத்திரிகை இருக்க வேண்டும் என்று எனது தலைமுறை இதழியலாளர்களைக் கேட்டால், ஒன்று 'குமுதம்' மாதிரி இருக்க வேண்டும் என்று சொல்வார்கள், அல்லது அறிவு ஜீவிகள் 'குமுதம்' மாதிரி இருக்கக் கூடாது என்று சொல்வார்கள். யாராக இருந்தாலும் பத்திரிகைக்கான இலக்கண வரம்பாக 'குமுதம்' வார இதழைத்தான் சொல்வார்கள்.
'குமுதம்' ஆசிரியராக எஸ்.ஏ.பி. இருந்த காலத்தில்தான் எனது இதழியல் வாழ்க்கை தொடங்கியது. 'குமுதம்' இதழில் எழுத வேண்டும் என்று நான் முயற்சி செய்யாதது ஏன் என்று எனக்கு இன்றுவரை புரிய
வில்லை. குமுதத்துக்குப் போட்டியாக (?) பத்திரிகை நடத்த வேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்து, தனது லட்சியம் 'குமுதத்தைப்' போல ஐந்தரை லட்சம் பிரதி
கள் என்று இலக்கு நிர்ணயித்து இயங்கிய சாவி சாரின் நிழலில் ஒதுங்கி விட்டதால், 'குமுதத்தில்' எழுத வேண்டும் என்கிற நினைப்பே எனக்கு வராமல் போய்விட்டது.
சாவி சாருக்கு 'குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி. மீது அப்படியொரு வியப்பு கடந்த மரியாதை. குமுதத்தைவிட புத்திசாலித்தனமாக 'சாவி' அமைய வேண்டும் என்கிற ஆரோக்கியமான போட்டியை எங்களில் உருவாக்கி இருந்தார் அவர். அதனாலேயே, ஆசிரியர் எஸ்.ஏ.பி. என்றால் எனக்கும் அந்த மரியாதை. மகாத்மா காந்தியைக் கவர்ந்தவர் என்பதால் எனக்கு லியோ டால்ஸ்டாயின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது போல, என்று வைத்துக்கொள்ளுங்கள்.
நான் ஆசிரியர் எஸ்.ஏ.பி. குறித்துப் பல செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். 'குமுதம்' பால்யூவை சந்தித்த ஒவ்வொரு தருணத்திலும் ஏதாவது நிகழ்ச்சியை அவர் பகிர்ந்து கொள்வார். ஆனால், ஆசிரியர் எஸ்.ஏ.பி.யை நேரில் சந்திக்கவோ, அவரிடம் அறி
முகம் செய்து கொள்ளவோ, ஒரு வணக்கம் சொல்லவோகூட எனக்கு வாய்க்கவில்லை. ஆனால், எட்ட நின்று பார்த்துப் பரவசமடைந்திருக்கிறேன்.
சுவாமி சின்மயானந்தாவின் 'பகவத்கீதை' உரையைக் கேட்பதில் எனக்கு ஆர்வம் இருந்தது. தி.நகரில் சுவாமிஜி உரையாற்றும்போது தவறாமல் நான் செல்வதுண்டு. அதற்கு மிகச் சாதாரணமாக வெள்ளை வேட்டி சட்டையுடன், உதவி ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் உள்ளிட்டவர்களுடன் அவர் அமர்ந்திருப்பதை எட்ட நின்று கோயில் திருவிழாவில் பவனி
வரும் தேரையும், சுவாமியையும் பக்தன் பார்ப்பதைப்போலப் பார்த்துப் பரவசமடைந்ததை மறக்காமலும், மறைக்காமலும் பகிர்ந்துகொள்கிறேன்.
'குமுதம்' வார இதழைப் பொருத்தவரை பக்கத்துக்குப் பக்கம் சுவாரஸ்யம் என்பதுதான் அதன் தனிச் சிறப்பு. விருந்தில் அத்தனை பதார்த்தங்கள் இருந்தாலும்கூட, பாயசத்துக்கு ஒரு தனி ருசி இருப்பதுபோல, அத்தனைப் பகுதிகளும் சுவாரஸ்யமாக இருந்தாலும் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யின் 'அரசு பதில்கள்' பாயசம்போல. முதலில் எடுத்து நாக்கில் பாயசத்தை தொட்டு ரசிப்பதுபோல, 'குமுதம்' இதழைப் புரட்டும் ஒவ்வொரு வாசகரும் தேடிப்பிடித்து முதலில் படிப்பது 'அரசு பதில்கள்' பகுதிதான்.
பாயசத்தில் இருக்கும் முந்திரிப் பருப்பு, திராட்சைப் பழம்போல நறுக்கென்று ஒற்றை வார்த்தையில் ஒரே வரியில், அதிகம் போனால் இரண்டு வரியில் ஆசிரியர் எஸ்.ஏ.பி., 'அரசு பதில்களில்' சில சரவெடிகளைக் கொளுத்திப் போடுவார். பல ஆண்டுகள் கடந்தும்கூட ரசித்து அசைபோடும் விதத்தில் அவை இருக்கும்.
அசைக்க முடியாத ஆன்மிகவாதியான எஸ்.ஏ.பி.யின் சிந்தனையில் உதித்த மிகப் பெரிய சமூக இயக்கம் பிரார்த்தனை கிளப். வாரா வாரம், பல லட்சம் வாசகர்களை சில நூறு பேருக்காகப் பிரார்த்தனை செய்யவைத்த அவரது மனிதாபிமானத்தை இப்போது நினைத்தாலும் ஒரு தரம் இரு கரம் கூப்பி வணங்கத் தோன்றுகிறது.
அவர் தினமும் அதிகாலையில் படிக்கும் நாளிதழ் 'தினமணி'. 'தினமணி' ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன் மீது அவருக்கு அப்படியொரு மரியாதை. தனது 'கேள்வி} பதில்' தொகுக்கப்பட்டபோது அதற்கு அணிந்துரை எழுதப் பெரியவர் ஏ.என்.எஸ்.ஸிடம்தான் கேட்டுக்கொண்டார்.
விழுப்புரம் எஸ்.ஏ.காதர் கேட்ட 'ஏ.என்.சிவராமன் எப்படி?' என்ற கேள்விக்கு எஸ்.ஏ.பி. அளித்த பதில்}'பழைய தலைமுறைச் செய்தித்தாள் ஆசிரியர்களில் கடைசித் தூணான அவர் ஏ.'ஒன்'.சிவராமன்'.
காந்தியவாதி; தேசியவாதி; ஜாதி, மத, மொழி துவேஷமில்லாத தமிழ்ப் பண்பாட்டை நேசிக்கும் அசாத்தியப் படிப்பாளி, நாடகம், சினிமா, சங்கீதம் என்று எதையும் விட்டுவிடாமல் ரசித்தவர். கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் உள்பட.
'கிறிஸ்தவர்கள், முகமதியர்கள் தங்களுடைய தெய்வத்தை மட்டுமே வணங்கும்போது, ஹிந்துக்கள் மட்டும் ஏன் எல்லாத் தெய்வங்களையும் வணங்குகிறார்கள்?' என்று 'அரசு பதில்கள்' பகுதியில் குதர்க்கமான கேள்வி அவரிடம் எழுப்பப்பட்ட போது அவர் அளித்த பதில் என்ன தெரியுமா? 'கடிதங்களைத் தமது பேட்டையில் உள்ள தபால் பெட்டியில் போட்டால் போக வேண்டிய இடத்துக்கு ஒழுங்காகப் போய்ச்சேரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எந்தப் பேட்டையில் உள்ள தபால் பெட்டியில் போட்டாலும் போய்ச் சேரும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்'
டாக்டர் ஜவஹர் பழனியப்பன், ஆசிரியர் எஸ்.ஏ.பி.யின் ஒரே மகன். தன்னுடன் இணைந்து 'குமுதம்' தொடங்கக் காரணமான நண்பர் 'கல்கண்டு' தமிழ்வாணனின் மகன்கள் ரவியும், லேனாவும் எஸ்.ஏ.பி.யின் நிழலில் வளர்ந்த தத்துப் பிள்ளைகள். எஸ்.ஏ.பி.யின் பிறந்த நூற்றாண்டுச் சிறப்பு வெளியீடாக டாக்டர் ஜவஹர் பழனியப்பன் தொகுத்த 'அரசு பதில்கள் 1000' தமிழ்வாணன் சகோதரர்களால் மீள் பதிவு பெற்றிருக்கிறது.
புத்தகக் காட்சியில் தவற விட்டு விடாதீர்கள் 'அரசு பதில்கள் 1000' என்கிற அற்புதமான பொக்கிஷத்தை!
நாணய மாற்று அல்லது பணமாற்று என்பது சர்வதேச அளவில் தவிர்க்க முடியாத வர்த்தக நடைமுறை. வங்கி சேவை ஒருபுறம் இருந்தாலும்கூட ஒரு நாட்டு நாணயத்தை இன்னொரு நாட்டுக்குச் செல்லும்போது அந்த நாட்டு நாணயமாக மாற்றியாக வேண்டும்.
உலகில் மொத்தமுள்ள 195 நாடுகளில் சுமார் 150 வகையான நாணயங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. சில நாடுகள் தங்களுக்கென்று தனியாக நாணயம் இல்லாமல் ஒரே கரன்ஸி நோட்டைப் பயன்படுத்துவதும் உண்டு. வர்த்தகச் செலாவணி என்று சொன்னால் பெரும்பாலான நாடுகள் அமெரிக்க டாலர் மூலம்தான் வர்த்தகம் மேற்கொள்கின்றன. இப்போது ஓரளவுக்கு யூரோவும் சர்வதேச கரன்ஸியாக பயன்படுத்தப்படுகிறது.
சிங்கப்பூர் பணமாற்ற வர்த்தகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்குமேல் ஈடுபட்டு அதன் அத்தனை பரிமாணங்களையும் அறிந்தவர் எம்.ஏ.முஸ்தபா. தனது அனுபவத்தின் அடிப்படையில் 'மணி எக்ஸ்சேஞ்ச்' எனப்படும் நாணயப் பரிமாற்றம் குறித்த அனைத்து விவரங்களையும் 'சேஞ்ச் அலி' என்ற புத்தகத்தின் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தி சிராங்கூன் டைம்ஸ் என்கிற சிங்கப்பூரில் இருந்து வெளி
வரும் தமிழ்ப் பத்திரிகையில் தொடராக வந்த கட்டுரைகளைத் தொகுத்து புத்தக வடிவம் தந்திருக்கிறார் அதன் ஆசிரியர் ஷா நவாஸ்.
தமிழில் நாணய மாற்று வர்த்தகம் குறித்து அனுபவம் சார்ந்து எழுதப்பட்ட முதல் நூல் 'சேஞ்ச் அலி'.
மீண்டும் சீனு ராமசாமியின் கவிதையா என்ற கேட்காதீர்கள். படித்ததும் உடனடியாக பகிர்ந்தே தீர வேண்டும் என்று அடம் பிடிக்கிறது எனது பேனா.....
மணல்
திருடனுக்கும்
அஸ்தி கரைக்கத்
தேவைப்படுகிறது
நதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.