சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

கலித்தொகை காட்டும் கண்ணிய விழுமியங்கள்

பண்டைத் தமிழர்தம் வாழ்க்கை அறத்தை ஆணிவேராகக் கொண்டது.

News image
Updated On :5 ஜூலை 2026, 6:21 pm IST

பண்டைத் தமிழர்தம் வாழ்க்கை அறத்தை ஆணிவேராகக் கொண்டது. இல்லறம், துறவறம் என முயல்வதாக இருந்தாலும், இல்லற வாழ்வே துறவற வாழ்வுக்கும் துணையாய் நிற்பதால் அறம் பாடிய திருவள்ளுவர்,

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை. (குறள் - 41)

என்று கூறுகின்றார்.

கற்கும் கடமை பூண்ட மாணவப் பருவத்தினர், துறவறம் மேற்கொண்டு வாழும் தவத்தினர், யோக வாழ்வினர் என எத்திறத்தார்க்கும் உணவும், உறையுளும், மருந்தும் உதவி, அவர்களை நன்னெறிப்படுத்துவோன் இல்லற வாழ்வு மேற்கொண்டவனே! எனும் பரிமேலழகர் உரையாலும் இதை உணரலாம். இல்வாழ்க்கைத்

துணைவியாலேதான் இது இயலும்.

வலித்தொகை தொலைக்கும் கலித்தொகை இதைக் காட்டும் அழகே அழகு!. தலைவன், பொருள் தேடச் செல்லும் காட்டுவழி

வெம்மையும் உடையது, வெறுமையும் வெருட்டுவது, துன்பம் தருவது "நீ என்னோடு வர வேண்டாம்' என்றான் தன் தலைவியிடம். அது கேட்ட தலைவி,

..................................... ஆற்றிடை நும்மோடு

துன்பம் துணையாக நாடின், அது அல்லது

இன்பமும் உண்டோ எமக்கு?

(கலித்தொகை 6)

என்கிறாள்.

அரச ஆணையை ஏற்றுக் காட்டுவழிச் செல்ல முயன்ற இராமனுடன் தானும் வருவதாய் உரைத்தாள் சீதை. "காட்டுவழி சுடும்' என்று விலக்கிய இராமனிடம், "நின்பிரிவினும் சுடுமோ அப்பெருங்காடு?' என்றாள் சீதை.

இதையே வாழ்வின் விழுமியமாகக் காட்டும் கலித்தொகை.

ஒரோஒகை தம்முள் தழீஇ ஒரோஒகை

ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை!.

(கலித்தொகை 18)

என எடுத்துக் காட்டுகிறது.

இவ்வண்ணம் இல்லறத்து இணையர் தம்வாழ்வை அமைத்துக்கொண்டால், அறம் வாழும்! மறம் வீழும்!

வீட்டைத் துறந்து ஊரைத் துறந்து தான் விரும்பியவனுடன் புறப்பட்டு விட்டாள் நங்கை தன்நம்பியோடு இதை அகம் கண்ணியத்துடன் "உடன்போக்கு' என்று சுட்டும்.

தன் வளர்ப்பு மகளாகிய தலைவியைத் தேடிப் பாலைவழியே தேடிப்போனாள் செவிலித்தாய். வழியில் எதிர்ப்பட்ட முக்கோல் முனிவர்களை நோக்கி, "ஒரு நம்பியும் மங்கை ஒருத்தியும் இப்பக்கம் சென்றதைக் கண்டீரோ?' என்று வினவினாள்.

நாங்கள் நீர் சொன்ன இருவரையும் கண்டோம். அவர்களின் செய்கை அறநெறிப்பட்டது என்றே எண்ணுகின்றோம். நீர் துன்பப்பட வேண்டா என்றனர் முனிவர்கள்.

இதைக் கலித்தொகை ஆறாம் பாடலில்,

இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்

அறம்தலைப் பிரியா ஆறும்மற்று அதுவே

எனச் சுட்டும்.

குன்றகல் நாடன் பொய்யா அறம் பூண்டவன். அவன் வாய்மையில் பொய் தோன்றினால், அது குளிர் நிலவில் தீத்தோன்றியது போலாகுமே! அவனிடம் ஒருக்காலும் பொய் தோன்றாது. அவ்வாறு தோன்றினால் நீர்ப் பொய்கையில் குவளை வெந்து வீழ்வது போலாகுமே!

அவன் வாய்மையில் பொய்தோன்றுமோ எனில் தோன்றவே தோன்றாது. அவன் வாய்மை தவறினால் ஞாயிற்றுச் சுடருள் இருள் தோன்றியது போலாகுமே என்று தலைவனின் பொய்யா ஒழுக்கத்தை உறுதிபடத் தெரிவித்தாள் தோழி தலைவிக்கு!

குன்று அகல் நல் நாடன் வாய்மையில்

பொய் தோன்றின்,

திங்களுள் தீத் தோன்றியற்று ....... ............

...............

தொடர்புள் இனையவை தோன்றின்,

விசும்பில்

சுடருள் இருள் தோன்றியற்று.

(கலித்தொகை 41)

என தலைவனின் பொய்யா ஒழுக்கத்தை கலித்தொகை புலப்படுத்துகிறது.

திருவள்ளுவப் பேராசான்,

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை

எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற. (குறள் 300)

என்றே உறுதிபடக் கூறியுள்ளார். ஆம், பொய்யா ஒழுக்கமே வாழ்வின் விழுமிய பொருளாகும். தலைவன் பொருள் ஈட்டும் விருப்பத்தால்

தலைவியைப் பிரிந்து போனான். அவன் போகும் வழியில் அவனுக்குத் துன்பம் ஏதும் நேராதிருக்கத் தெய்வத்தைத் தொழ முற்பட்டாள் தலைவி. அவர் செல்லும் வழியில் உள்ள கல்லின்

வெப்பம் நீங்க மிகுந்த நீரைப் பெய்ய வேண்டும் என்று மேகத்தைத் தொழுது வேண்டினாள்.

வேரறுந்த தூறுகளில் படிந்துள்ள வெம்மையை மாற்றித் தலைவன் மீது குளிர் நிழல் தருக என்று ஞாயிற்றைத் தொழுவது நம்

கற்புக்கு ஏற்ற செயலோ? என்று கூறித் தலைவியின் செயலை மரபன்று என்று மறுத்தாள்

இடித்துரை செய்யும் நட்புரிமை கொண்ட தோழி.

...... நம் காதலர், துறந்து ஏகும் ஆர் இடை,

"கல்மிசை உருப்பு அறக் கனை துளி சிதறு!' என,

........,

வளி தரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ?

(கலித்தொகை 16)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாள்} அவளின் திறம் தானே கற்புச் செவ்வறம். தெய்வம் எனத் தலைவன் தானிருக்க, ஞாயிற்றைத் தொழுது அவனை வெம்மையிலிருந்து காக்க என வேண்டுவது பீடோ? மரபோ?

தேவந்தி என்ற பார்ப்பனத் தோழி கண்ணகி கணவனைப் பிரிந்திருப்பதால் உண்டான

துன்பம் தீர ஓர் உபாயம் சடங்கு வழிப்பட்ட வழியைக் கூறினாள். "கண்ணகியே! நீ உன்

கணவனைப் பிரிந்திருக்கக் காரணம், நீ முற்

பிறப்பில் கணவன் பொருட்டுச் செய்ய வேண்டிய நோன்பைச் செய்யத் தவறி விட்டாய்.

நெய்தல் நிலத்தில் உள்ள சோமகுண்டம், சூரிய குண்டம் என்ற பொய்கைகளில் மூழ்கிக் காமவேள் கோட்டத்தைத் தொழுதால், பிரிந்த உன் கணவனைப் பெறுவாய்' என்றாள்.

கண்ணகியோ, "பீடு அன்று' என்று மறுத்தாள். கலித்தொகை தோழியோ, ஞாயிற்றைத் தலைவன் வழித்துயர் தீரத் தொழுவது நம் கற்புக்குப் பொருந்திய செயலோ என்று அறிவுறுத்தினாள்.

நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர்

...........................

தோழிக்குரிய வென்மனார் புலவர்.

(தொல்காப்பியம் சூத்திரம் 1096)

தொல்காப்பியர் காலந்தொட்டு கலித்தொகை காலம் தொடர்ந்து சிலப்பதிகாரக் காலம்வரை பீடும் }பெருமையும்} மரபுங்

காக்கும் மாண்பு தமிழ் அறச்சிறப்பேயாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.