நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்! ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மசோதா இன்று தாக்கல்!மாநிலங்களவை எம்.பி.க்களின் 2 ஆண்டு செலவினம் ரூ.262 கோடி: ஆா்டிஐயில் தகவல்!நாடாளுமன்றத்தில் மேக்கேதாட்டு விவகாரத்தை எழுப்ப திமுக திட்டம்அம்மா உணவகங்களில் அடிப்படை வசதிகள் கூடுதலாக்கப்படுமா?பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!
/

அரசன் தேடிய பசிப்பிணி மருத்துவன்

உலகத்திலேயே பெரிய பிணி பசிதான்.

News image
Updated On :19 ஜூலை 2026, 5:45 pm IST

முனைவர் சொ. ஏழுமலை

உலகத்திலேயே பெரிய பிணி பசிதான். பசி வந்திட மானம், குலப்பெருமை, கல்வி, உடல் வளம், அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, பெண்ணாசை ஆகிய பத்தும் பறந்து போகும் என்றார் ஒளவை பிராட்டியார் (நல்வழி 26). திருவள்ளுவர், 'அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன் பெற்றான் பொருள்வைப் புழி'

(குறள். 226)

என்ற குறள்வழி, ஏழைகளின் கொடும்பசி தீர உணவைப்

பெய்பவன் தன் செல்வத்துக்கு ஒரு சேமிப்புப்

பெட்டகத்தை அடைகிறான் எனப் பசிப்பிணி

தீர்ப்பவனைப் போற்றுகிறார்.

சாத்தனார், மணிமேகலையில் பசியின் கொடுமை குறித்து,

'குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவி

(பாத்திரம் பெற்ற காதை: 76-80)

என்று கூறி, பசியைப் போக்குவதற்காகவே மணிமேகலைப் பாத்திரத்தைப் படைத்து அட்சயபாத்திரம் படைக்கிறார்.

இதனால்தான் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், கவிஞராகிப் பசிப்பிணியைப் போக்கிய சிறுகுடியைச் சேர்ந்த பண்ணனைச் சிறப்பித்து ஒரு பாடல் எழுதி வியந்தார்.

காவிரிப் படுகையை ஆண்ட சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சேரர்களின் காவல் மரத்தை வெட்டிய சிறப்புடையவன். இவன் காலத்தில் உழவுத் தொழில் நலிவுற்றபோது விவசாயிகளுக்கு வரிவிலக்கு அளித்து, உதவியும் செய்து காப்பாற்றிவன்.

இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய கிள்ளி வளவனைப் புறநானூற்றில் பத்துப் புலவர்கள் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

என்றாலும் கிள்ளிவளவன், சிறுகுடிப் பண்ணன் என்பவனைச் சிறப்பித்து ஒரு பாடல் பாடியுள்ளது கவனம் பெறுகிறது. சோழ நாட்டின் கடற்கரை ஊர்களில் ஒன்று சிறுகுடி. அங்கு வேளாளர் குலத்தைச் சேர்ந்த பண்ணன் என்பவன், சோழன் கிள்ளி வளவனைவிட மிகச் சிறப்பாகத் தன்னை நாடி வந்தோர்க்கு எல்லாம் உணவளித்துக் கொண்டு வந்தான்.

இதனால் அவனுடைய புகழ் நாடெங்கும் பரவியது.

அது மட்டும் அல்லாமல், அரசனைச் சிறப்பித்துப்

புலவர்கள் பாடல் பாடுவதைப் போலச் சிறுகுடி

பண்ணனைச் சிறப்பித்தும் பாடல்கள் பாடினர்.

மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார், வினைமுடித்துத் திரும்பும் தலைமகன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியதான முல்லைத் திணைப் பாட்டில்,

'தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்

பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்இலைப்

புன்காழ் நெல்லிப்பைங் காய் தின்றவர்'

(அகம்.54:13-15)

என்று 'சிறுகுடிப் பண்ணன்' தனக்கென வாழாது பிறர்க்காக வாழ்வதாகச் சுட்டுகிறார்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடிய கோவூர் கிழார், 'வள்ளல் பண்ணன் வாழும் சிறுகுடியில் பூத்த வண்டு மொய்க்கும் ஆம்பல் பூவையும், பாதிரிப் பூவையும் சூடிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியில் திளைக்கும் உன் விறலியோடு கிள்ளி வளவனிடம்

சென்றால்...' (புறம்.70) எனப் பண்ணன் ஊரைப் புகழ்வதாக அவரைப் புகழ்கிறார்.

இப்படி, புலவர் போற்றும் வள்ளல் ஒருவன் தன்னாட்டிலே வாழ்கிறானே என்று சோழன் கிள்ளி

வளவன் ஆச்சரியப்பட்டு, அவனைக் காண வேண்டும்

என்ற ஆவலில் சிறுகுடிப் பண்ணனை பசிப்பிணி

மருத்துவன் என்று புகழ்கின்றார்.

கிள்ளி வளவன், 'நான் வாழும் வாழ்நாளையும் சேர்த்துக் கொண்டு பண்ணன் வாழ்க. பாணர்களே, பாணனின் சுற்றத்தாரின் துன்பத்தைப் பாருங்கள். புதிது புதிதாகப் பழங்கள் பழுத்திருக்கும் மரங்களை நாடி பறவைகள் நிறைய வந்து உண்டு உண்டு மகிழ்ந்து ஒலி எழுப்பி மகிழும் ஓசை கேட்கிறது.

அவனை நாடி வந்து கையில் சோற்றுடன் உறவினர்களும் சிறுவர்களும், காலம் தவறாது மழை பெய்யும் இடத்திலிருக்கும் எறும்புகள் தனது முட்டைகளைத் தூக்கிக் கொண்டு வரிசையாகச் செல்வதைப் போலச் செல்கிறார்கள். இதைப் பார்க்கும் போது பசி என்னும் பிணியைத் தீர்க்கும் மருத்துவனின் இல்லம் அருகில் உள்ளதோ? தொலைவில் உள்ளதோ? எங்களுக்குக் கூறுங்கள்” என்று கேட்கிறோம் எனப் பாடுகிறார். இதனைப் புறநானூறு (173)

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய,

பாணர் காண்கிவன் கடும்பினது இடும்பை,

யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன,

ஊணொலி அரவந் தானும் கேட்கும்,

பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி...

முட்டை கொண்டு வற்புலம் சேரும்,

சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்,

சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும்

இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்,

மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப்...

பசிப்பிணி மருத்துவன் இல்லம்

அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே

என அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

குடபுலவியனார் புறநானூற்றுப் பாடல் வழி (புறம்.18) சொல்வது போல 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்பதால்தான் பசியைப் போக்கியவனைப் பசிப்பிணி மருத்துவன் என்று சிறப்பித்துப் போற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.